உங்களில் எத்தனைபேர் நிறவெறியை நேரடியாக அனுபவத்திருக்கிறீர்கள். எனக்கு அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது.

எத்தனையோ முறை வேலையிடத்தில் இது கண்ணுக்குத் தெரியாமல் வியாபித்திருக்கும். உதாரணமாக, நீங்கள் எதையோ சாதித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு உங்கள் அதிகாரி முன்னால் போய் நிற்பீர்கள், அவர் “ம்” என்று ஒற்றை எழுத்தில் பதில் சொல்வார். மறுநாள் உங்கள் சக ஊழியர் ஒன்றுமில்லாத விஷயத்திற்குக் காலரைத் தூக்கிக் கொள்ள உடனே அதே அதிகாரி, அவரை தன் தோள்மீது உயர்த்தி வைத்து, அதை இன்னும் பாராட்டிக் கொண்டாடுவார். சிலசமயம் நீங்கள் சாதித்ததற்கான பாராட்டு உங்கள் சகாவைப் போய்ச் சேரும். சொந்த நாட்டை விட்டு, வேற்று நாட்டிற்கு வந்தவர்களுக்கு இது தினசரி வாழ்வில் சராசரி நிகழ்வு. இது பலமுறை எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால் நான் இன்றைக்குச் சொல்லவந்தது அப்படியானதல்ல. நேரடியாக மூஞ்சியில் அறைவதைப் போல தாழ்த்தப்பட்டிருக்கிறேன்.

இதை முழுவதுமாகச் சொல்ல கனேடிய மண்ணில் என்னுடைய காரோட்டும் உரிமம் பெற்ற வரலாறை கொஞ்சம் விலாவரியாக எழுதவேண்டும் (சில நாட்களுக்கு முன்னால் சுந்தர் வலைப்பதிவில் இதைப் பற்றி எழுதியிருந்தபொழுதே பின்தொடர்ந்து எழுதவேண்டும் என்று தோன்றியது. கடந்த இரண்டு வாரங்களாக வேலைப்பளுவில் எதுவுமே சாத்தியமாகவில்லை). * * *

கார் ஓட்டுவது என்பது வட அமெரிக்க வாழ்வினுடன் இயைந்துபோவதன் அடையாளம். ஒற்றைக் கையால் இலாவகமாக திருப்பமுடிந்தால் நீங்கள் வ.அ. வந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது என்று அர்த்தம். திருப்புச் சக்கரத்தில் தினசரியைப் பரப்பிப் படித்துக் கொண்டு நெடுஞ்சாலையில் ஓட்டினாலோ, அல்லது அதன் மேல் மக்டொனால்ட் ஹாம்பர்கர் பொட்டலத்தைப்பரப்பிப் கொண்டு போனாலோ நீங்கள் குறைந்தபட்சம் இரண்டாம் தலைமுறை அமெரிக்கர் அல்லது ஒரு இரண்டாம் தலைமுறை அமெரிக்கரை உற்பத்தி செய்தவர் என்பது உறுதி. ஜ்ம்பா லஹரியின் “திருமதி சென்னுடைய” என்ற சிறுகதையில்(1) இந்தக் காரோட்டப் பழகும் அனுபவம் அமெரிக்க வாழ்விற்குப் படிமமாக மிக அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். விரும்புகிறீர்களோ இல்லையோ இது இந்தக் கண்டத்தில் தவிர்க்கமுடியாத அவஸ்தை.

பொதுவில் காரோட்டும் உரிமம் பெறுவது இந்த நாடுகளில் கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். அதிலும் அமெரிக்காவைவிட கனடாவில் இது இன்னும் கடினமாக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பொதுவில் அமெரிக்காவில் வாகனத் தயாரிப்பாளர்களின் நெருக்குதல் அரசில் அதிகம். அதிகம் பேர் கார்களை ஓட்டினால் அமெரிக்கக் கார் தயாரிப்புத் தொழில் பெருகும். அவர்கள் மோதிக்கொண்டு காயப்பட்டால் – கவலையே இல்லை. காப்புறுதித் தொழில் பெருகும்; மருத்துவத் தொழில் கொழிக்கும். இதெல்லாம் கனடாவிற்கும் சாத்தியம் என்றாலும், இங்கே ஒரு சிறிய வேறுபாடு இருக்கிறது. கனடா மக்கள் நல அரசு, இங்கே மருத்துவம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. சராசரி குடிமகனுக்கு அமெரிக்காவைக் காட்டிலும் மருத்துவ வசதிகள் கனடாவில் அதிகம். அதிகம் பேர் முட்டிக் கொண்டு காயப்பட்டால் அரசாங்கத்தின் கையைத்தான் சுடும். எனவே, வாகன விபத்துகளைத் தடுப்பதில் கனடாவிற்கு இன்னும் அதிக ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் கனடாவில் வாகன ஓட்டும் உரிமை பெறுவது இன்னும் சிக்கலாக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக புதிதாக நாட்டிற்கு வருபவர் ஒருவர் மூன்று அல்லது நான்கு முறை சாலைத் தேர்விற்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

அமெரிக்கா மாநிலங்களில் எப்படியென்று தெரியாது. நான் வசிக்கும் கனடா, ஒன்டாரியோ மாநிலத்தில் வாகனம் ஒட்ட மூன்று நிலைத் தேர்வுகள் இருக்கின்றன. இவற்றைக் கடப்பதற்குக் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது ஆகும். முதலாவதாக கணினி மூலம் நடத்தப்படும் பொது அறிவுத் தேர்வு. இது மிகவும் சுலபமானதுதான், உதாரணத்திற்கு ஒரு கேள்வி;

1. சாலையில் வாகனம் ஓட்டி வருகிறீர்கள். உங்களுக்கு ஓட்டிச் செல்ல பச்சை விளக்கு இருக்கிறது. அப்பொழுது ஒரு கிழவி குறுக்கே கடக்க முயற்சிக்கிறாள். நீங்கள் என்ன செய்வீர்கள்;

(அ) பச்சை விளக்கு இருப்பதால் நேரடியாக ஓட்டிச் செல்வேன் (கிழவியின் மீது மோதுவேன்)
(ஆ) சற்றே வேகத்தைக் குறைத்து அவர் கடந்து செல்லும்வரை காத்திருப்பேன்.
(இ) மிக அருகில் சென்று நிறுத்தி, சத்தமாக ஒலிப்பானை இயக்கி எச்சரிப்பேன்.
(ஈ) என்னுடைய போகவேண்டிய இடத்தை மாற்றிக் கொண்டு, வலது சந்தில் திருப்பிச் செல்வேன்.

இதில் தோல்வியடைய அளவுக்கு அதிகமான முயற்சி தேவை. தேர்ச்சியடைந்தவுடன் அடுத்த கட்டத் தேர்வுக்கு (சாலைத் தேர்வு) உடனடியாகச் சென்றுவிட முடியாது. குறைந்தது ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்தோ, அல்லது முழு (மூன்றாம் கட்டத் தேர்வில் தகுதிபெற்ற) ஓட்டுநர் உதவியுடன் பயின்றோ கற்றுக் கொள்ள வேண்டும். (பயிற்சிப் பள்ளியில் குறைந்தது பத்து மணிநேர வகுப்பறைப் பாடத்தைக் கவனிக்க வேண்டும்). அதன் பின்தான் சாலைத் தேர்வுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும். இதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமான கட்டம். இதில் தேர்ச்சி பெற்று ஒரு வருடம் நீங்கள் தனியாக ஒட்டிப் பழகியபின் மூன்றாவது தேர்வுக்கு (இரண்டாவது சாலைத் தேர்வுக்குத் தயாராவீர்கள்). இரண்டாவது தேர்வில் வெற்றி உங்களுக்கு அனைத்துவித தகுதிகளையும் கொடுக்கும். நீங்கள் தனியாக எந்தக் காரை வேண்டுமானாலும் ஓட்ட முடியும், நெடுஞ்சாலையில் ஓட்டமுடியும். இத்யாதி.

மூன்றாவது தேர்வு உங்களுக்கு அபரிமிதமான சலுகைகளைத் தரும். உதாரணமாக, நீங்கள் குடித்துவிட்டுக் கார் ஓட்டக் கூடாது. (இரண்டு பியர்களுக்கு மேல்). ஆனால் மூன்றாவதில் தேர்ச்சிபெற்றால் இன்னும் கொஞ்சம் கூடக் குடித்துவிட்டு ஓட்டலாம். இப்படி அதிகம் குடித்துவிட்டு ஓட்ட அரசாங்கம் அனுமதிப்பதால் காப்புறுதி நிறுவனமும் அவற்றின் பங்கிற்கு உங்களை போஷிக்கும். காப்புறுதி தவணைப் பணமும் குறையும். நான்கு வருடங்கள் கழித்து பிறருக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.

நான் செல்லவந்தது என்னுடைய இரண்டாம் கட்டத் தேர்வைப் பற்றியது.

———

(1)Interpreter of Maladies, by Jhumpa Lahiri, Houghton Mifflin Co (1999)