கனடாவில் என்னுடைய கார் பயிற்சி. இரண்டாம் பாகம். முன்னால் சொன்னதுபோல, இரண்டாம் கட்டத் தேர்வுதான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. அதில் தேர்ச்சிபெற்றால்தான் சாலையில் தனியாக காரோட்ட முடியும். எனக்கு ஏற்கனவே இந்தியாவில் காரோட்டிப் பழகியிருந்தாலும், இங்கே விதிகள் வேறு என்பதால் ஒரு பயிற்சிப் பள்ளிக்குப் போக முடிவெடுத்தேன். வழக்கம்போல “இந்தியனாயிரு இந்தியப் பொருள்களையே வாங்கு” (வசிப்பது கனடாவானாலும்) என்பதால் இந்தியப் பள்ளிக்கே போய்ச் சேர்ந்தேன். முதலில் வகுப்பறைப் பாடங்களெல்லாம் நன்றாக்த்தான் போனது. ஒரு சுபயோக சுபதினத்தில் எனக்கு வாகன பாக்கியம் சம்பவிப்பதாகப் பள்ளிக்கூடத்தில் அறிவித்தார்கள். மறுநாள் காலை, வீட்டு வாசலில் போய் நின்றால், பள்ளிக்கூடத்தின் பெயரைத் தாங்கிய (வழக்கம்போல) டொயோட்டா கரோலா கார். உள்ளே குனிந்து பார்த்தால், “மாமி, சார் வரலயா? நீங்க மட்டும் தனியா வந்துருக்கேளே” என்று கேட்கத் தோன்றும் அறுபது வயது இந்திய மாமி. ஆனால் அவருக்கும் இந்தியாவிற்கும் ஸ்நானப் பாரப்திகூடக் கிடையாதாம். மூன்று தலைமுறைக்கு முன்னால் பிஜி தீவுகளுக்குக் குடிபெயர்ந்த வடக்கிந்திய வம்சாவளியினர். பின்னர் என்ன மெதுவாகப் (ஆமாம் மிகவும் மெதுவாகத்தான், அந்தக் கரோலா போடும் சத்தத்தில் பல நேரங்களில் அவர் சொல்வதே காதில் விழாது) பாடங்கள் துவங்கின.
“மேடம், இடது பக்கம் திரும்பலாமா?”
“நீ என்ன சொல்கிறாய்?’
“திரும்பலாம்”
“அப்ப திரும்பலாம்”
* * *
“மேடம் ஒழுங்கை மாறலாமா?”
“நீ என்ன சொல்கிறாய், மாற வேண்டுமா?”
“ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன்”
“சரி, மாறிக் கொள்”
இப்படியாக விட்டேத்தியாகத்தான் என் வாத்தியாரம்மா எனக்குக் கற்பித்தார். கிட்டத்தட்ட வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டதைப் போன்ற ஒரு பேரமைதியை அவருடைய முகத்தில் பார்க்கலாம். பத்து மணி நேரப் பயிற்சி முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் காத்திருந்தபின் சாலைத் தேர்வுக்கு ஏற்பாடானது.
முதல் தேர்வில் தோல்வி. காரணம், பச்சை விளக்கு இருக்கும் இடங்களில் கூட நான் மிகவும் கவனமாக ஓட்டுவதாகச் சொல்லிவிட்டார்கள் (கவனம்=பயம்). காருக்கு வெளியே இருந்து ஓட்டுபவர்களைப் பார்க்கும்பொழுது எல்லோரும் மிகவும் கவனமாக இருப்பதைப் போலத்தான் தோன்றியது. நான் சாலையைக் கடக்க முற்பட்டால் உடனே காரை நிறுத்திப் புறங்கையை அசைத்து என்னைப் போகவிடுவார்கள். அதே போல சாலையின் ஒரு கோடியில் யாரையாவது கண்டால் நான் நிறுத்தியிருக்கிறேன். மரியாதையாக இருந்தால் நல்லபையன் என்று சொல்லி அனுமதி கொடுத்துவிடுவார்கள் என்று நம்பியிருந்தேன். அதே போல நம்மூர் பழக்கத்தில் பச்சை விளக்கு இருந்தாலும் சந்திப்புகளில் கொஞ்சம் நிறுத்திவிட்டுத் தான் சென்றேன். (நம்மூரில் யார் எப்பொழுது உள்ளே வருவார்கள் என்பது தெரியாதுதானே). கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பெங்களூரில் யமாஹா, கவாஸாகி, சுசுகி, ஹோண்டா என்று எல்லாவிதமான ஜப்பானிய மோட்டார் சைக்கிள்களையும் ஓட்டியிருக்கிறேன். எந்த நேரத்த்தில் யார் சாலையைக் கடப்பார்கள், இடது பக்கமாக யார் வந்து உரசுவார்கள் என்பதைப் போன்ற பயங்கள் என் நெஞ்சில் ஊறிப்போய்விட்டிருந்தன.
ஆனால் இங்கே Aggressive Driving என்பதைத் தாரக மந்திரமாக வைத்திருக்கிறார்கள். அதாவது, சாலையின் எதிர் முனையில் யாராவது வந்துகொண்டிருந்தால், நீங்கள் அவர் நடுத் தடுப்பிற்கு வருவதற்குள் வலதுபுறம் திரும்ப முடியுமானால் உடனடியாக அதைச் செய்ய வேண்டும். அறுபது கி.மி. வேகவரம்பு உள்ள சாலையில் ஐம்பத்தைந்துக்குக் குறைவாகப் போனால் உங்களை அற்பப் பதரே என்பதைப் போலப் பார்ப்பார்கள். நூறு கி.மி நெடுஞ்சாலையில் நூற்றுப் பத்துக்குக் கீழே ஓட்டுபவர்கள் பழம்.
இப்பொழுது நன்றாகத் தெரிகிறது. சாலையில் யாரும் யோக்கியர்கள் இல்லை. நடந்து வருபவர்களுக்காக நிறுத்துவதன் முக்கிய காரணம், பாதசாரியை மோதினால் காப்புறுதி பத்துமடங்காக உயரும். இதே போல பிற கார்களின் மீது மோதுவது, சிவப்பு விளக்கில் கடப்பது, உச்ச வேகத்தை மீறுவது என்று எல்லாவற்றுக்கும் உத்தரவாதமாக தண்டனைகள் இருப்பதால் இவையெல்லாம் தவிர்க்கப்படுகின்றன. (ரூபாய் நோட்டை எட்டாக மடித்து விரலிடுக்கில் நீட்டமுடியாது). தண்டனைகளின் உக்கிரத்தைப் பொறுத்து அவற்றை மீறுவது குறைகிறது. உதாரணமாக, உச்ச வேகத்தைக் கடப்பது குறைந்தபட்ச தண்டனை தருவது என்பதால் அது அடிக்கடி மீறப்படுகிறது. பாதசாரியின் மீது மோதுவது என்பது தெய்வகுற்றத்திற்கு ஈடானது என்பதால் அதன் நிகழ்தகவு குறைவாக இருக்கிறது. (அமெரிக்காவில் அதிகபட்ச தண்டனை பெற காரை எப்படிப்பயன்படுத்தலாம். 1. நான்கு விஸ்கி/வோட்கா அருந்துவது, 2. காரை வேக உச்சவரம்பிற்கு மேல் நாற்பது மைல் கூட ஓட்டுவது, 3. சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் சென்று கடந்து கொண்டிருக்கும் பாதசாரியின் மீது மோதுவது 4. உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் கடக்கும் பாதசாரியின் தகுதி இப்படியிருக்கலாம்; குழந்தையைப் பராமரிக்கும், உடல் ஊனமான கணவனைப் பிரிந்து தனித்து வாழும் ஹிஸ்பானிக் பெண்மனி).
ஆனால் அந்தக் காலங்களில் சாலையில் ஓட்டுபவர்கள் எல்லோருமே மனதார பொதுநலம் விரும்பிகள் என்றும் வட அமெரிக்க சாலைகள் ஒழுங்கின் உச்சம் என்றும் நினைத்திருந்தேன். பிறருக்கு உதவுதல், பொறுமையாக இருத்தல், சாலையில் கண்ணியமாக நடந்து கொள்வது போன்றவற்றை நிரூபித்துக் காட்டினாலே நமக்கு உரிமை கொடுத்து ஓட்டச் சொல்லுவார்கள் என்று கனவு கண்டிருந்தேன். முதலாவது சாலைத் தேர்வு முடிந்தவுடன் என்னுடைய தேர்வு முடிவில் ஆய்வாளர் இப்படி எழுதியிருந்தார்; திறமையின்மை, அதீத மந்தத் தன்மை, தனக்குரிய உரிமைகளை எடுத்துக் கொண்டு சாலையில் விரைந்து செல்லாமால் போக்குவரத்தை நிலைகுலையச் செய்தல், விரைவாகத் திரும்பாமல் எதிரில் வரும் பாதசாரிகளுக்குக் குழப்பம் விளைவித்தல்,…
வீட்டுக்கு வந்தவுடன் செய்த முதல் காரியம் என்னுடைய பயிற்சிப்பள்ளியை மாற்றியது. இந்த முறை எனக்குக் கிடைத்தவர் இளைஞர். சாலையில் பச்சைவிளக்கிற்கு மாறி ஒரு மைக்ரோநொடியானால் உடனடியாக ‘ம்ம்’ என்ற மிரட்டல் வரும். அடுத்த சில வகுப்புகளில் என்னுடைய ஓட்டும் திறமையின்மீது எனக்கே நம்பிக்கை வந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இவர் வகுப்பு முடிந்தவுடன் என்னுடைய வீட்டு வாசலில் கொண்டுவந்து விட்டுவிட்டு பத்து நிமிடங்கள் நான் ஓட்டியவிதம்பற்றியும் சாலையில் மற்றவர்கள் ஓட்டுவதைப் பற்றியும் கதைத்துவிட்டுத்தான் போவார். அவருடைய கணிப்பில் நான் நன்றாக ஓட்டுகிறேன் என்று தீர்மானம் ஆனபின் எனக்கு அடுத்தத் தேர்வுக்கு நாள் குறிக்கப்பட்டது.