நாத்திகம் பயில்? என்று தலைப்பிடப்பட்ட என்னுடைய குறிப்பிற்கு கார்த்திக் எழுதிய சில கருத்துகளுக்கு என்னுடைய பதில்கள் :

கொஞ்சம் சிரமத்தைப் பார்க்காமல் அருள் செல்வனின் நாத்திகம் பயில் (கேள்விக்குறி இல்லாமல்) வலைக்குறிப்பைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள்.

{அருள் சிக்கிரம் திரும்பி வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கள், கொஞ்சம் பெண்முதல் சமுதாயங்கள், தந்திரம், சார்வாகம், சாங்கியம், அதர்வண வேதம், நம்மாழ்வார், தேபிப் ரஷோத் சட்டோபாத்யாயா, ராதாகிருஷ்ணன், என்று ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கலாம். வெட்டிப் பேச்சு என்று சொல்லிவிடாமல் இருக்க, இடையிடையே சீரியஸாக அஷ்டாங்க யோஹா, குண்டலினி, வாஸ்து, விசிறி சாமியார், விளக்குமாத்து மாதா என்று நாட்டுக்கு உருப்படியான விஷயங்களையும்தான்}.


ஞானிகள் எல்லோரும் கடவுளுக்கு ப்ரோ? அது ஏன்? அல்லது ஓரிறைக் கொள்கைக்காவது -ப்ரோ. அதாவது இறையின் மீதும், இறைக்கொள்கை மீதும் சார்புடையவர்களாக எளிதில் காணலாம். யாரை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். பக்கம் பக்கமாக எழுதியிருப்பார்கள் அல்லது இறையைப் பற்றி நிறைய விளக்கங்களைப் பேசி, அவற்றை அருகிலிருப்ப்வர்கள் எழுதியிருப்பார்கள்.

பக்கம் பக்கமாக எழுத வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. எனென்றால் நிரூபிக்க வேண்டிய சுமை (Burden of Proof) அவர்களுக்குத்தானே. ஆத்திகம் – நாத்திகம் இரண்டும் கற்பிதங்களில் இருக்கிறது என்று சொல்பவர்களுக்குத்தான் எங்கே/ஏன்/எதற்கு/எப்படி/எத்தனை போன்று பல கேள்விகளுக்கு விடையளித்தாக வேண்டிய கட்டாயம். இல்லாதவர்களுக்குப் பக்கம் பக்கமாக எழுதவேண்டிய கட்டாயம். பக்கம் பக்கமாக எழுதப்பட்டனவற்றுள் பிழையாக இருக்கும் ஒற்றை வாத்தத்தை நிரூபித்தாலே போதும், அது தகர்ந்து போகிறது.

படிப்படியாக அரிசியை வடித்துக் கொட்டுகிறார்கள், ஆனால் அவனோ பசியில்லை என்று எழும்பிப் போகிறான். யாரிடம் தவறு?


நாத்திகர்களில் யாரவது ஞானி உண்டா? அப்படியே உண்டு என்று சொன்னால், அவர் வாழ்வின் மிக உயர்ந்த நிலையாகிய , விடுபட்டத் தன்மையை இந்த அளவுக்கு பேசியோ எழுதியோ உள்ளனரா, என்பது மிகவும் யோசிக்க வேண்டிய கேள்வி. ஆனால் அவசியக் கேள்வி.

நாத்திகர்களில் ஞானிகளுக்குத் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில் கண்கூடாகத் தெரியும் விடயங்களைத் தாண்டிக் கற்பிதமாக ஒரு கேள்வியை வரையறுத்துக் கொள்வதில்லை. நீங்கள் தினசரி வாழ்வியல் விஷயங்களைச் சொல்வதற்கு சிந்தனையாளன் தேவையில்லை என்று சொல்கிறீர்கள். நாத்திகம் அதைத் தாண்டிய கேள்விகளின் தேவையின்மையை வலியுறுத்துகிறது. கேள்வியே தேவையில்லை என்று அவர்கள் சொல்லும்பொழுது அந்தக் கேள்வி ஒரு அற்புதமான சிந்தனை என்று ஆத்திகர்கள் சொல்கிறார்கள்.


அதி அமானுஷ்யம் என்பது பேயோ பிசாசோ அல்ல. வெளி காலம் என்று பேசப்படும், வாழ்வியல் சாராத ஆனால் மனித அறிவுக்கு என்றுமே சவாலைத் தரக் கூடிய விடயங்களாம்.

இன்றைக்குப் பிரமிப்பூட்டும் அமானுஷ்ய விஷயங்களின் உண்மைத் தெரிய வர நாளை அதன் அமானுஷ்யத் தன்மை குறைந்துபோகிறது. (இன்றைய உதாரணம் பேய், பிசாசுகள்) இப்படி இல்லாத ஒன்றைக் காணல்நீராகத் தேடி அலையவேண்டிய அவசியத்தைத்தான் நாத்திகர்கள் கேள்வியாக முன் வைக்கிறார்கள்.

ஆனால் வேறு அமானுஷ்யங்கள் புலப்படத் தொடங்கையில் மீண்டும் ஆத்திகம் மேலெழும்புகிறது. ஆர்வம் கொண்ட நம்மில் பலருக்கு அந்தக் கேள்விகளில் இருக்கும் கவர்ச்சித்தன்மை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சில சமயம் அதைத் துரத்துவதில் இருக்கும் ஆசுவாசம் தலையெடுக்க ஓய்வெடுத்துக் கொண்டாலும், ஓட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.


ஆனால் , நான் மேலே சொன்ன, ஞானிகள் என்று நத்திகர்களாலும் ஒத்துக் கொள்ளக் கூடியவர்கள், இந்த காலம், வெளி போன்றவற்றை வெகு எளிதில் எடுத்து தமது பாடல்களிலும் உரைகளிலும் கையாண்டிருப்பதைக் வெகு இடங்களில் காணலாம். உதாரணம், திருமூலர். எனவே திருமூலர் செய்ததைச் செய்தால் நாமும் அந் நிலைக்கு செல்ல முடியும் என்பது வாத்துக்கு ஒத்துக் கொள்ளகூடியதாம். ஆனால் சிக்கல் அவர் என்ன செய்தார் என்று நமக்கு தெரியாதது தான்.

அப்படியே தெரிந்துபோனாலும், திருமூலர் செய்ததைத் திருப்பிச் செய்தால் மெய்ஞ்ஞானம் கிட்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இது அறிவுத்தேடல் இருப்பவர் ஒவ்வொருவரும் காலம்காலமாகத் தமக்குள்ளே நிகழ்த்திப் பார்த்துக் கொள்ளவேண்டிய கட்டாயம். இதில் பாதை போட்டுத்தர யாரும் இல்லை. இருந்தபொழுதும் புத்தர், திருமூலர், நம்மாழ்வார், ஏசு, நபிகள் போன்றவர்கள் நடந்த பாதையில் கவர்ச்சி இருப்பது உண்மைதான்.


விடை தேட முயல்பவர்கள் , இவர்களை விட ஒரு தட்டு மேல். இவர்களுக்கும் விடை கிடைத்ததா? என்ற கேள்வி இவர்கள் சாகும் வரையில் இவர்கள் இதயத்தில் இருந்து , இவர்கள் செத்தாலும், கேள்வி மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

ஒரு விதத்தில் எனக்கும் விடை தேட முயல்வதன் அவசியம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் பல நேரங்களில் இந்தக் கேள்வியை முற்றாக ஒதுக்குவதில் என்னவோ தோல்வியை ஒப்புக்கொண்டு ஓய்ந்துபோவதைப் போன்ற ஒரு தோல்வியுணர்ச்சி, தாழ்வுமனப்பாண்மை தலையெடுக்கிறது. எத்தனையோ விஷயங்களை அவற்றின் தேவையின்மை தெரிந்தும் செய்கிறோம் அல்லவா, அதே போல் இதையும் அவ்வப்பொழுது தொட்டுத் தொடர்ந்து செல்வதில் ஒரு ஆர்வம் இருக்கிறது. (ஆஹா, அதி முக்கியமான கேள்வியை வெட்டிவேலை என்ற நிலைக்குக் கொண்டு வந்தாகிவிட்டது!).

-தொடரும் (தொடர ஆள் இருக்கும்வரை)