புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழில் வலைப்பதிவோருக்கு உதவுவதற்காக “தமிழ் வலைப்பதிவு விக்கி” செயல்முறைப்படுத்தப்படுள்ளது. சமீபத்திய இணைய நுட்பங்களில் முக்கியமானது விக்கி. ‘விக்கி’ என்பதற்கு ஹவாயியன் மொழியில் ‘விரைவு’ என்று பொருள். இந்தப் பயன்பாடு அதிவிரைவாக இணைய பக்கங்களை உருவாக்கவும் மாற்றியமைக்கவும் உதவுகிறது. விக்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் மிகப்பெரிய பல்லூடகக் கலைக்கலைஞ்சியம் விக்கிபீடியா மிகக் குறைந்த காலத்தில் உருவாகியிருக்கிறது. முதலில் சில நிரலர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு என்று கருதப்பட்டாலும் இப்பொழுது விக்கி தொழில்நுட்பம் முதிர்ச்சியடைந்து வர்த்தக நிறுவனங்கள், உலகின் மாபெரும் செய்தி நிறுவனங்கள் போன்றவை இவற்றைப் பயன்படுத்திவருகின்றன. விக்கிப்பீடியாவின் பக்கங்கள் தமிழிலும் உருவாகின்றன என்பது சிறப்புச் செய்தி.

வலைப்பதிவு தொழில்நுட்பத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விக்கியின் முகவரி http://www.domesticatedonion.net/wiki. தமிழ் வலைப்பதிவு தொடர்பான வழக்கமான கேள்விகள், சந்தேகங்கள், சிறப்பு உதவிகள் போன்றவற்றை யாராலும் இங்கே உள்ளிடமுடியும். விக்கியின் உதவியுடன் இணைய பக்கங்களை உருவாக்கவோ, மாற்றியமைக்கவோ அதிகத் தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. வலைப்பதிவு நண்பர்கள் இந்த அமைப்பைப் பயன்படுத்தி தமிழில் நுட்பத்தகவல்களைக் கட்டமைக்க வாருங்கள். நீங்கள் ஏற்கனவே புரிந்துகொண்டிருப்பீர்கள்; இது பலர்கூடி இழுக்கும் தேர், தனிமனித எத்தனம் இதை விரைவாக முன்னெடுத்துச் செல்லமுடியாது.

இதேபோன்ற விக்கி ஒன்று சில மாதங்களுக்கு முன்பு பழைய tamillinux.org தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இது முழுவதும் ஆங்கிலத்தில் இருந்தது. இப்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் விக்கியில் பெரும்பாலும் தமிழிலேயே விளக்கங்கள் வடிக்கப்படும். இது விக்கிபீடியா அமைந்த மீடியாவிக்கி என்ற அதே நிரலியில் அமைக்கப்படுகின்றது.

வலைப்பதிவுக்கென அமைக்கப்பட்டிருந்தாலும், கணினியி தமிழில் எழுதுவது, தமிழ் இணைய பக்கங்களை படிப்பது, வலைப்பக்கங்களை உருவாக்குவது என்று வலைப்பதிவு கடந்த பொதுப்பயனுக்கும் இந்தப் பக்கங்கள் உதவக்கூடும். எனவே, கணினி-தமிழ் தொடர்பான எந்த விடயங்களையும் இங்கே உள்ளிடலாம். இப்படி ஒரே இடத்தில் விளக்கமாக அமைக்கப்பட்ட பக்கங்களை உருவாக்குவதன் மூலம், ஒரே கேள்விக்குப் பலர், பல முறை பதில் சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர்க்கலாம். இதன்மூலம் நுட்பத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

இதே சமயத்தில் தமிழ்மணம் தளத்தில் வலைப்பதிவோர் ஊடாடுவதற்கென ஒரு விவாதமன்றமும் அமைக்கப்படுகின்றது. இங்கே புதியவர்கள் சந்தேகங்களைக் கேட்பது, விற்பன்னர்கள் நுட்பக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது போன்றவை சாத்தியம் (இது குறித்த விபரமான அறிவிப்பை காசியிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்). இந்த ஊடாடல் மன்றத்திலிருந்து திரட்டப்படும் கருத்துகள் விக்கியில் செறிவாக்கப்பட்டு நிரந்தரமாக்கப்படும்.

இந்த விக்கியின் நிர்வாகத்தில் என்னுடன் இணைந்து பணியாற்ற ‘மூக்கு’சுந்தர் முன்வந்திருக்கிறார். இன்னும் சில நண்பர்கள் இதன் நிர்வாகத்தில் உதவ முன்வந்தால் விரைவில் இதை வலுவுள்ள தளமாக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

இந்த விக்கி அமைப்பு தமிழ் வலைப்பதிவு சமூகத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்
வெங்கட்