புத்தாண்டின் துவக்கத்தில் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் லினக்ஸ் வளர்ச்சிக்கென புதிய இணைய தளம் http://www.thamizhlinux.org

அமைக்கப்பட்டிருக்கிறது. இது பழைய tamillinux.org தளத்தின் மீளுருவாக்கம். அந்தத் தளத்தின் உரிமையை நாங்கள் இழந்தபின் நண்பர் சிங்கை மணியன் அவர்களின் உதவியுடன் புதிய தளம் பதிவு செய்யப்பட்டது. இப்பொழுது அதன் ஆரம்பகட்ட அமைப்புகள் முடிந்து பொதுப்பயனுக்குத் திறக்கப்படுகிறது. பழைய தளத்தின் முக்கிய பக்கங்கள் நாளடைவில் இங்கு உள்ளிடப்படும்.

இந்தப் புதிய தளம் யுனிகோட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழிலும் ஆங்கிலத்திலும் பக்கங்களை உருவாக்க முடியும். விரைவில் KDE, Gnome, XFCE, மற்றும் லினக்ஸ் பொதிகளுக்கான விபரங்கள் இங்கே தரப்படும். பயனர்களின் கருத்துப் பரிமாறல்களுக்காக மன்றமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும்விட முக்கியமாக இந்தத் தளத்தில் தமிழ் லினக்ஸ் மற்றும் திறமூல நிரலிகளின் உதவிக்கென விக்கி ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக பயனர்களே இதன் பக்கங்களை மாற்றியமைக்க முடியும். இந்த விக்கியின் உதவியுடன் தமிழில் லினக்ஸ் அனுபவத்தை எளிமையாக்கவும் இனிமையாக்கவும் முயல்வோம். முதல் கட்டமாக இந்த விக்கியில் The Linux Documentation Project -ன் ஒரு பகுதியான Tamil Linux HowTo என்ற உதவி ஆவணம் உள்ளிடப்பட்டிருக்கிறது. இதன் தகவல்கள் சற்றே பழையன ஆனாலும் புதிதாக லினக்ஸ்க்கு வருபவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். விக்கியில் இருப்பதால் இந்தப் பக்கங்களை எளிதாக இற்றைப்படுத்த முடியும். இந்த விக்கியின் முகவரி: http://www.thamizhlinux.org/wiki

இந்தத் தளத்தின் அமைப்பிலும் நிர்வாகத்திலும் பங்குபெற ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன். (இதற்கு அதிகம் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை). ஆர்வமுள்ளவர்கள் என்னுடைய வலைக்குறிப்பின் முகப்பிலிருக்கும் தொடர்பு இணைப்பின்மூலம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

சராசரிப் பயனருக்கு ஏற்ற வகையில் தமிழில் லினக்ஸ் முன்னேறிவரும் இந்த வேளையில் தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம்.

மிக்க அன்புடன்
வெங்கட்ரமணன்

பி.கு: இந்த அஞ்சலை ஆர்வமுள்ளவர்களுக்கோ தொடர்புடைய குழுமங்களுக்கோ முற்செலுத்தவும்.