இரண்டு வாரம் ஆசிரியராக இருந்துவிட்டு போகும் பொழுது முத்து ஒரு வலைக்குறிப்பில் என்னவெல்லாம் இருக்கலாம் என்று எழுதியிருக்கிறார். இதே போல ஒரு பட்டியலை பத்ரியும் முன் வைத்திருந்தார். பத்ரியின் பட்டியல் அவசியமான விஷயங்களை மட்டுமே உள்ளடக்கியிருந்தது. முத்து அவற்றின் கூட சேர்த்த விஷயங்கள் (அரட்டைப் பெட்டி, வருகைக்காட்டி,…) போன்ற விஷயங்கள் வலைக்குறிப்புப் பரப்பின் வெளியே வருபவை. இவை எல்லாவிதமான இணையதளங்களுக்கும் பொதுவானவை. இதில் முக்கியமாக என் கண்ணில் பட்ட விஷயம் – முத்து இயங்கு எழுத்துருக்களை இன்றியமையாதவை என்று பரிந்துரைத்திருப்பது. * * *

என்னுடைய கருத்தின்படி இயங்கு எழுத்துருக்கள் (Dynamic Fonts) முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். (இன்னும் சில காலங்களுக்காகவாது). வலைக்குறிப்புத் தளங்களை வைத்திருப்பவர்களில் 99% சதவீதத்தினர் இயங்கு எழுத்துருக்களைத் தர நான் மட்டும் தனியாளாக நின்று இதற்கு எதிர்குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

1. இயங்கு எழுத்துருக்கள் உலகளாவிய இணையத் தரக்குழுவின் பொதுநிர்ணயத்திற்கு உட்பட்டவை அல்ல. அதாவது முழுவதுமாக W3C -யின் கொள்கைகளுக்கு உட்பட்டு இயங்கு உலாவிகளில் இவை வேலை செய்யாது.

2. இயங்கு எழுத்துருக்கள் ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் தொழில்நுட்பம், இது ஒரு மூடிய தொழில்நுட்பம், தரம் கிடையாது (Closed Technology, not a standard). (கவனிக்கவும், மைக்ரோஸாப்ட் விண்டோஸ் போன்ற மூடிய ஆணைமூல, வர்த்தக மென்கலன்களைப் பாவிப்பதில் எனக்கு எந்த தடையும் இல்லை. எனக்குத் தேவை என்றால் நான் காசு கொடுத்து வாங்கி அதைப் பயன்படுத்துவேன். ஆனால் என்னளவில் பொதுவில் முதலிடம் தளையறு மென்கலன்களுக்கு (Free Software) மாத்திரமே).

3. மூடிய தரத்தின் பங்கு வேறு – இது மூடிய மூலங்களைப் போல இல்லாமல், பொதுவில் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்துபவை.

4. தமிழில் நாம் ஒருங்கமைந்த ஒற்றை எழுத்துருத் தரக்குறியீடு இல்லாமல் தவிக்கிறோம். இந்த நிலையில் குமுதம், விகடன் தொடங்கி குப்பன் சுப்பன் வரை அவர்களது தகவல்களை அவர்களுக்கான எழுத்துரு தரத்தில் போட்டுக்கொள்கிறார்கள். இது பொதுவில் தகவல் சிதறிபோக வைக்கிறது (ஒரு தேடல் இயந்திரத்தின் மூலம் தேட முடியாது).

5. இந்த நிலை மாற உலகெங்கிலும் இருக்கும் தொழில்நுட்ப தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து தஸ்கி போன்ற தரக்குறியீட்டை வடித்தார்கள். இப்பொழுது யுனிகோட் உலகம் முழுமைக்குமான ஒற்றைப் பொதுக் குறியீடாக மாறிவருகிறது.

6. இந்த நிலையிலும் குமுதமும், விகடனும் பிறரும் தங்கள் தளத்துக்கு வருபவர்கள் தடையில்லாமல் படிக்க வசதியாக இயங்கு எழுத்துருக்களைத் தருகிறார்கள். இது முற்றிலும் சுயநலம்.

7. இப்படி இயங்கு எழுத்துருக்களைத் தருவதால் பலரும் ஒற்றைத் தரத்தின் அவசியத்தை அறியாமல் போகிறார்கள். அன்றைய காரியம் முடிந்தால் அத்துடன் சரி என்று மறந்து போகிறார்கள்.

8. இயங்கு எழுத்துருக்கள் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வார்கள்? உடனே கஷ்டப்பட்டு தேடி, யுனிக்கோட் எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். குமுதம், விகடன் போன்ற தளங்களும் இதன் தேவையை உணர்ந்து, எல்லோரிடமும் யுனிகோட் எழுத்து இருக்கிறது, எனவே நாம் ஏன் கஷ்டப்பட்டு இயங்கு எழுத்துருக்களையெல்லாம் போடவேண்டும் என்று யுனிகோட் பக்கம் போவார்கள்.

ஆமாம், கஷ்டம்தான். இன்றைக்கு எழுத்துருக்கள் இல்லாதவர்கள் உங்கள் பக்கத்திற்கு வரும்பொழுது படிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். உங்களிடம் கூச்சல் போடுவார்கள். ஆனால் நம்மில் ஒரு பத்துபேர் இதைச் செய்தால் உடனே எல்லோரும் யுனிகோட் எழுத்துக்களைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் இல்லையா? ஏன் இப்பொழுதே என்னுடைய பக்கங்களுக்குச் சராசரியாக ஒரு நாளில் 150 பேர் வருவதாக என் வழங்கியின் கணக்கு சொல்கிறது. இதில் நம் வலைக்குறிப்பு சமூகத்தில் பலரும் அடக்கம். என்னுடைய பக்கங்களை இயங்கு எழுத்துருக்கள் இல்லாமல் படிக்கமுடியும் என்றால் உங்களுடையது படிக்கப்படும். அவர்களுக்கு உதவியாகத் இறக்கிக்கொள்ள வசதியாக உங்கள் பக்கங்களில் தளையற்றுக் கிடைக்கும் எழுத்துருக்களைப் பற்றிய தகவலைப் போட்டுவையுங்கள்.

இப்படி நாம் எல்லாருமாகச் சேர்ந்து வற்புறுத்தினால்தான் புதிதாக வருபவர்களும் ஒரே தரக்குறியீட்டுக்கு வரமுயற்சிப்பார்கள்.

என்னுடைய அப்பா என் சிறுவயதில் அடிக்கடி சொல்லும் வசனம் இது; தென்னை மரத்தில் ஏற முயற்சிப்பவனுக்கு ஒரு அளவிற்குத்தான் தூக்கிவிடவேண்டும், முழுவதுமாக ஏணி வைத்து ஏறக்கொடுத்தால் மரமேறும் தொழில் வசப்படாது. நம் சமூகத்தை அப்படி முடவர்கள் சமூகமாக்க நாம் துணைபோகவேண்டாம்.