கடந்த வாரம் இந்தியவின் ஆளும் கூட்டணி தங்களுடைய குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில் தமிழ் செம்மொழியாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரம் கிடைக்கவில்லை.

இந்த விஷயம் குறிந்த சில எளிய சந்தேகங்களை பத்ரி எழுதியிருந்தார். தொடர்ந்து மெய்யப்பன் செம்மொழியாக அங்கீகரிக்கப்படுவதால் கிடைக்கும் ஆதாயங்கள் சிலவற்றைக் குறிந்து விளக்கினார். அதில் சுட்டப்படிருக்கும் மணவை முஸ்தபாவின் தீராநதி பேட்டியைக் குறிந்த சந்தேகங்கள் சில பத்ரியால் எழுப்பப்பட்டிருக்கின்றன. என்னுடைய வலைக்குறிப்பிலும் கிருஷ்ணன் செம்மொழியாவதன் ஆதாயங்கள் என்னவாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார். இவை எல்லாவற்றின் மீதன என் கருத்துக்கள்.
* * *
தமிழ் கட்டாயம் செம்மொழியாக வேண்டும். இதனால் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு அறிவியல்பூர்வமாக தமிழ் மொழி அதற்குரிய இடத்தில் வைக்கப்படவேண்டும்.

கடந்த தமிழ் இணைய 2002 மாநாட்டின்பொழுது நான் சந்தித்த பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவான கருத்துக்களைக் கொண்டவர். தமிழ் ஏன் செம்மொழியாக அறிவிக்கப்படல் வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தை அவர் பல்கலைக்கழகத் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். செம்மொழி என்பதை எப்படி அடையாளம் காணலாம் என்று அவர் விரிவாக எழுதியிருக்கிறார். கூடவே பத்ரிக்குத் தோன்றிய “தெலுகுவும், கன்னடமும் அரசியல் வலுப்பெறும் காலங்களில் அவர்களும் இப்படி மத்திய அரசை வற்புறுத்துவார்களோ?” என்ற ஐயத்திற்கும் பேராசிரியர் ஹார்ட் தெளிவான விடையைத் தருகிறார்.

இதைச் செய்வதை மத்திய அரசின் கடமையாக நான் கருதுகிறேன். எனென்றால் அவர்கள் சமஸ்கிருதம், பாரசீகம், அராபி மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை அளித்திருக்கிறது. இவற்றில் சமஸ்கிருதம் தவிர்த்து பிற இரண்டு மொழிகளுக்கும் புவியியல் ரீதியாக இந்தியாவில் வேர்கள் கிடையாது. இவை வருமொழிகள். அதிகமானபேர் பேசுகிறார்கள் (பேசினார்கள்) என்ற காரணத்தால் இந்தியாவில் கி.பி. 2400 ஆம் ஆண்டில் ஆங்கிலம் செம்மொழியாக அறிவிக்கப்படுவது என்பது எந்த அளவிற்கு அபத்தமோ அதேயளவிற்கு அரபியும் பாரசீகமும் இந்தியாவின் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்படுவது.

உலகிலிருக்கும் மொழிகளை அவற்றின் இலக்கண, சொல்வளக் கூறுகளின் அடிப்படையில் பத்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்; இவற்றில் இந்தோ-ஐரோப்பியன் (லத்தீன், சம்ஸ்கிருதம், கிரேக்கம், ஆங்கிலம்,…), திராவிடியன் (தமிழ், தெலுகு, ப்ராஹ்ய், குருக், கோண்டி…) இரண்டு மாத்திரமே இந்தியாவுடன் புவியியல் ரீதியாக வேர்களைக் கொண்டவை. பாரசீகம், அராபி போன்றவை ஆ·à®ªà¯à®°à¯‹-ஏஷியாட்டிக் (ஆப்ரிக்க-ஆசிய) மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை (இவற்றுள் ஹீப்ரூ மொழியும் முக்கியமானது). மனித இன வரலாறு, நாகரீகப் பரவலாக்கம், வரலாற்றுத் தனியிடம் போன்றவற்றை ஆராய உலக அளவில் அறிஞர்கள் செம்மொழிக் கூறுகளைப் பயன்படுத்துகிறார்கள். அந்த நிலையில் பத்து முக்கிய மொழிக்குடும்பங்களுக்குள்ளே குறைந்தபட்ச முக்கியத்துவம் கொண்டதாக நிறுத்தப்பட்டிருக்கும் மொழிக்குடும்பங்களில் திராவிடமும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் இதன் வேர் தேசமான இந்தியாவிலேயே திராவிட மொழிகளுக்குரிய பாரம்பரி முக்கிய இடம் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் தமிழ் செம்மொழியாவது இந்தியாவின் பெருமையை அதிகரிக்கும். உதாரணமாக திராவிடத்தின் பிந்தைய மொழிக்குடும்பமாக அறுதியிடப்பட்ட மலேய-பாலினேஷியக் குடும்பம் (மலாய், இந்தோனேஷியன், ஹாவாயீ,..) மற்றும் காக்கேஷியன் (ஜார்ஜியன், செச்சென், …)போன்றவற்றின் வரலாற்று முக்கியத்துவம் உலக அளவில் பல்கலைக்கழக ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் மீதான அறிதல் விரிவுபடுத்தப்படுகின்றது. ஆனால் திராவிடம் அவ்வளவு முக்கியமானதாகக் உணரப்படவில்லை.

உலக அளவில் பல்கலைக்கழகங்கள் அந்தந்த வேர்தேசங்களில் என்ன செல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இந்திய தேசம் அராபியையும், பாரசீகத்தையும் முன்வைக்கும்பொழுது அவர்களுக்கு சமஸ்கிருதத்தை விட்டால் இந்தியாவிற்கென்று எதுவும் இல்லை என்ற தோற்றம் கிடைக்கிறது. அப்பொழுது தமிழ் மீதான கவனம் வருவதில்லை. மாறாக இந்தியா சமஸ்கிருதத்துடன் தமிழையும் முன்னிருத்தினால் தமிழின் மீதும், கூடவே இந்திய பாரம்பரியம், நாகரீகம் மீதும் உலகின் கவனம் திரும்பும்.

உலக அளவில் பல பெரிய பல்கலைக்கழகங்கள் மொழி மீதான தனித் துறைகளை நிறுவும்பொழுது அவற்றின் தொன்மை, வரலாற்று முக்கியத்துவம், தனித்துவம் போன்றவற்றுக்கு முக்கிய இடம் தருகிறார்கள். இவை சமகால பிரபலத்தைவிட முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இதற்குக் காரணம் தொல்மொழிகளிடமிருந்து பிற துறைகள் (வரலாறு, புவியியல், தொல்லாராய்ச்சி, மானுடத்தோற்றவியல், மொழியியல், அரசியல், பொருளாதாரம்) இவற்றுக்கு நிறைய ஆதாயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, உலகின் மிகப்பழைய ஐந்து மொழிகள் என்று இவற்றைக் குறிப்பிடுகிறார்கள்; லத்தீன், ஹீப்ரூ, சமஸ்கிருதம், அராபிக், தமிழ். இந்த ஐந்தில் சமகாலத்தில் தொன்மையுடன் மிக அதிக அளவில் நெருக்கம் கொண்டு உயிர்த்திருக்கும் மொழியாகத் தமிழ் அடையாளம் காணப்படுகிறது. (லத்தீன், ஹீப்ரூ, சமஸ்கிருதம் மூன்றும் தொல்வடிவில் பேச்சுவழக்கொழிந்து போய்விட்டன). ஒரு மொழி நாட்பட உயிர்த்திருக்கத் தேவையானவை எவை என்று ஆராயும் மொழியியல் அறிஞருக்குத் தமிழ் மொழிப் பேராசிரியரிடமிருந்து நிறைய அறியக்கிடைக்கும். இப்படி ஒன்றினூடாக ஒன்று என்று மானுடவியல் துறைகள் வளருவதில் தமிழின் பங்கு இப்பொழுது உரிய அளவில் இல்லை. இந்திய அரசு தொல்மொழியாகத் தமிழை முன்னிருத்துவன் மூலம் இது வலுவடையும்.

* * *
பெர்க்லியில் தமிழ்ப் பேராசிரியர் இடத்தை நிறுவ அமெரிக்கத் தமிழர்கள் எடுத்த பிரம்மப் பிரயத்தனங்களை நான் அறிவேன். தமிழுக்கு அரசு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட செம்மொழி நிலை இருந்தால் இது கொஞ்சம் எளிதாக நடந்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். இதே போல வருங்காலங்களில் பல பல்கலைக்கழங்களில் தமிழ்த் துறைகள் வர கட்டாயம் இது உதவும். பத்ரி சொல்லியிருப்பதுபோல மனித வள மேம்பாட்டுத்துறையின் பணமும் இதற்கு உதவலாம், ஆனால் இந்திய அரசாங்கம் பணத்தால் உதவுவதைவிட நேர்வழியில் தமிழை சமஸ்கிருதத்திற்கு இணையாகப் பேசுவதே பலருடைய கவனத்தையும் ஈர்க்க உதவும். காசைக் கொடுத்து ஒரு அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்வது எந்தவகையிலும் உதவப்போவதில்லை. (பத்ரி அதைமாத்திரம் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை என்றாலும், எதை முதலில் செய்வது என்றவகையில் அங்கீகாரம் முக்கியம் என்று நான் கருதுகிறேன்).

* * *

இவை தவிர்த்து மெய்யப்பன் சுட்டியதுபோல நேரடியாக இந்தியப் பல்கலைக்கழங்களில் தமிழ்த்துறைகள் அதிகரிக்கப்படுவது தொடங்கி, நூலங்களில் புத்தகங்கள் பெருகுவதுவரை இந்திய அரசாங்கத்தால் உதவப்பட்டு அதிகரிக்கும்.

நான் படித்த இயற்பியல் சித்தாந்தங்களில் படிகம் (crystal) வளர குறைந்தபட்ச கரு (Critical Nucleus) தேவை. ஒரு திரவத்தில் கரைக்கப்பட்டிருக்கும் உப்பு மூலக்கூறுகள் நெருங்கி வந்தாலும் சிதறிக்கொண்டிருக்கும், ஆனால் கொஞ்சம் திரவம் ஆவியானபின் உப்பின் அடர்த்தி அதிகரித்துக் குறைந்தபட்சக் கரு உருவாகும். பின்னர் அதன் அருகில் வரும் திரவக் கரைசலில் இருக்கும் மூலக்கூறுகள் அந்தக் கருவில் படியத்தொடங்க படிகம் மொதுவாக வளரும். அந்த வகையில் தமிழ் செம்மொழியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுது குறைந்த பட்சக் கருவை உறுதி செய்வதுதான்.