japan_girl_shoes.png நான் டோக்கியோவில் வசித்த 1999-2001 ஜப்பானில் ரஜினி அலை வீசிக்கொண்டிருந்த நேரம். என்னுடைய ஆய்வகத்திற்கு இரண்டுமாதம் கோடை மாணவர்களாக வந்த இருவர் மெதுவாக என்னிடம் முத்து திரைப்படத்தில் குறுந்தகடு இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று சொல்ல அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம். முத்து படத்தில் தொடங்கி இன்று ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்து ரஜினியைப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை அவருடைய இரசிகர் மன்றத் தலைவரையாவது பார்த்து காலில் விழுந்துவிட்டுப் போகலாம் என்ற அளவிற்கு முத்திப் போயிருப்பதன் இரகசியம் என்ன? எனக்கு விபரம் தெரிந்த வகையில் தொன்னூறுகளின் இறுதியில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட ‘ராஜ பன் கயா ஜென்டில்மேன்’ என்ற திரைப்படம்தான் இந்தப் புரட்சிக்குத் துவக்கமிட்டது. தொடர்ந்து முத்து படம் டோக்கியோவிற்கு வந்தது. சில நாட்கள் சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்திற்குத் திடீரென யோகம் அடித்தது. இரசிகர்கள், குறிப்பாக இளம் பெண்கள் மொய்க்கத் தொடங்கினார்கள். எங்கு பார்த்தாலும் “எம்மாம் பெரிய கண்ணு!” என்ற பேச்சு காதில் விழுந்து கொண்டிருந்தது. அரையடி உயர பிளாட்பாரம் கட்டைச் செருப்பின்மீது நின்று கொண்டு பெண்கள் தங்கள் குறுங்கண்களை அகலவிரித்து மீனாவின் கரியவிழிகளை வியக்கத் தொடங்கினார்கள். பிறகு அலை திரும்பத் தொடங்கி கவனம் மெதுவாக கருப்பு உடம்பையும் கூரிய கண்களையும் கொண்ட கதாநாயகனின் மீது வீசத் பாயத்தொடங்கியது. மெதுவாக “ஒருவன் ஒருவன் முதலாளி…” என்று பாடல்கள் சோனி மினிடிக்ஸ்களில் பதிவு செய்யப்பட்டு பரபரப்பான டோக்கியோ மத்தியில் இரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் காதுகளில் ஒலிக்கத் தொடங்கின. சில நாட்களில் நகரெங்கும் ‘முத்து’ என்பதுதான் பேச்சாக இருந்தது. அந்த வருடத்தில் டோக்கியோ பெருநகரில் வசூலில் இரண்டாமிடத்தைப் பிடித்தது முத்து திரைப்படம். முதலிடம் எதற்கு என்று சொன்னால் இதன் தீவிரம் புரியும் – டைட்டானிக்.

* * *

japan_rajini_tshirt.pngதொடர்ந்து ரஜினியின் பல பழைய படங்கள் திரைக்கு வந்தன. பாட்சா, அருணாச்சலம் போன்ற படங்கள் நேரடியாக முதல்நாளே திரையிடப்படன. பாட்சாவின் திரைப்பட உரிமை ஜப்பானில் எட்டுகோடி ரூபாய்களுக்கு விலைபோனது. ரஜினிகாந்த படம்போட்ட டி-ஷர்ட்கள், ஸ்டிக்கர்கள், சிறிய ரஜினி பொம்மைகள் என்று ‘என் வழி தனி வழி…’ என்று திரைப்படங்களில் கூவிக்கொண்டிருந்த அந்த மனிதரின் வழியெங்கும் பிளாட்பாரக் கடைகள் ஜப்பானில் விரிந்தன. முத்துவைப் பார்த்து போதாது என்று ஜப்பானியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ‘நத்து’ என்ற திரைப்படம் (இதில் ஜப்பானியர் ஒருவர் ரஜினிகாந்த் மீசை வைத்துக்கொண்டு, ஜப்பானியப் பெண்ணைக் காதலிப்பார். வழக்கம்போல தங்கச்சி ரேப், அம்மா தாலியறுத்தல் போன்ற தமிழ்த் திரைப்பட உன்னதங்கள் இதிலும் உண்டு. ஒரே ஒரு வித்தியாசம் தாலி அறுபடும்பொழுது ஜப்பானிய மொழியில் கதறி அழுவாள் அந்த ‘மறச் சப்பானிச்சி’. இந்தக் குறும்படத்தின் இரண்டாவது பக்கத்தில் “The Making of Nattu” என்று இவர்களின் கோடம்பாக்கத் தல யாத்திரை பற்றிய செய்தித் தொகுப்பும் உண்டு. அங்கே குந்திக்கிட்டு கையேந்தி சாம்பார் சாதம் சாப்பிடுவது, குழு நடனத்திற்காக பிருஷ்டத்தை அசைக்கக் கற்றுக் கொள்வது, பத்துமுழம் மல்லிகைப் பூவை எழேகால் சென்டிமீட்டர் கூந்தலில் சூடிக்கொள்வது போன்ற அற்புதங்களும் உண்டு. இடையில் சத்தமே இல்லாமல் ஜீன்ஸ் படம் திரைக்கு வந்தாலும் மீனாவைக் கண்ட கண்களுக்கு ஐஸ்வர்யாராயின் கண்கள் இரசிக்காமல் பெட்டிக்குப் போனது.

தொடரும்…