இந்த சுஜாதா-தமிழ்லினக்ஸ் விவகாரம் நிறையவே என்னுடைய நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சுகின்றது. இன்னும் அதில் எழுத வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. என்றாலும், அயர்வுதான் மிஞ்சுகிறது. கொஞ்சம் ஒத்திப் போட்டுவிட்டுப் பிற விஷயங்களைக் கவனிக்கலாம் என்று எண்ணம். நாளை காலை உள்ளூர் தொலைக்காட்சியில் என்னுடைய வழக்கமான அறிவியல் நிகழ்ச்சிக்காக செவ்வாய் கிரகத்தைப் பற்றிய சமீபத்திய கண்டுபிடிப்புகளை ஒளிப்பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அளவுக்கு அதிகமாக வேலை குவிந்தால் என்ன ஆகும்?

பல நாட்களாக நண்பர் தங்கமணியின் வலைப்பதிவுக்கு சென்று கருத்துகள் எழுதவேண்டும் என்று ஆசை (தங்கமணி மாத்திரமல்லர், இன்னும் சிலரும் என்னுடைய விருப்பப்பட்டியலில் இருக்கிறார்கள்). ஆனால் ஒத்திப் போட்டுக்கொண்டே வருகிறேன். இதற்கு முக்கியமான காரணம், யார் எப்பொழுது வலைப்பதிகிறார்கள் என்று தெரியாமல் போவதே. இதையெல்லாம் ஒழுங்கமைக்கத்தானே RSS செய்தியோடைத் தொழில்நுட்பம் இருக்கிறது. (இதன் தொழில்நுட்பத்தைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக). தமிழில் நாம் இன்னும் வலைக்குறிப்புகளின் அணைத்து சாத்தியங்களையும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. இதோ என்னுடைய செய்தியோடைத் தொகுப்பில் முதல் முயற்சி. கொந்தர்கள் (Hackers) உலகில் ஒரு சொலவடை உண்டு, The best programmers are the laziest. ஏனென்றால் அவர்கள்தான் ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்ய மறுப்பவர்கள். கணினி அதே சமாச்சாரத்தில் கில்லாடி. எனவே, வழமையான வேலைகளைக் கணினி பக்கம் திருப்புவதுதான் நல்லது. இதற்கு ஒரு நிரந்தர வழி செய்தாக வேண்டும். வழக்கம் போல திறந்த ஆணைமூல நிரலிதான் கைகொடுத்தது. இதன் பெயர் RSSFeedMagic என்பது. இது செய்தியோடை வசதி தருபவர்களின் ஓடைகளைத் திரட்டி ஒரே பக்கத்தில் கொடுக்கும். அதாவது நீங்கள் இரவு படுக்கைக்குப் போகுமுன் சமீபத்தில் நான் எழுதியிருக்கிறேனா, பத்ரி எழுதினாரா, காசி என்ன எழுதினார், தங்கமணியின் அடுத்த கவிதை எப்பொழுது, என்று ஒன்றொன்றாகப் போய்ப் பார்க்கத் தேவையில்லாமல் இவற்றின் சமீபத்திய இடுகைகளை எல்லாம் திரட்டி ஒன்றாக மேயும் வசதி.

முயற்சி செய்து பாருங்கள்; http://www.tamillinux.org/venkat/rssfeedmagic/tamilblogs/

என்னுடையது நேரடியாக யுனிகோடில் தெரிகிறது.ஆனால் நான் கட்டிவைத்த கட்டத்திற்குள் நிற்க மாட்டேன் என்கிறது. பதிரியின் ஓடை ஒழுங்காகப் பாய்கிறது, ஆனால் நீங்கள் யுனிகோடை உலாவியில் தெரிந்தெடுக்க வேண்டியிருக்கும். அடுத்ததாகக் காசியின் நியூக்ளியஸ் தரும் ஓடையைச் சேர்த்தேன். சரிவரவில்லை, பிறகு என்னுடைய வலைப்பக்கத்தின் ஓடை (வலைக்குறிப்பு அல்ல) அப்படியே. பிஹெச்பிவெப்சைட் என்னும் தொகுப்பின் அடிப்படையிலான அதுவும் நியூக்ளியஸ் போலவே பிஹெச் பியில் ஓடையத் தருகின்றது. இந்த பிஹெச்பி ஓடைகள் சரிவரவில்லை. பத்ரியின் ஓடையும், என்னுடைய ஓடையும் எக்ஸ்எம்எல் கொண்டவை. ஆனால், போல வலைப்பூக்கள் சஞ்சிகையின் ஓடையும் சரியில்லை.

இன்னும் கொஞ்சம் நோண்டியதில் காசியின் ஓடை சரியாக வரவில்லை என்று தெரிகிறது (அதை யாராவது வேறு திரட்டியில் சரியாகப் படித்திருக்கிறீர்களா?).

அவ்வளவுதான், ஹாவ்… தூக்கம் கண்களைத் தழுவுகின்றது.