சில நாட்களுக்கு முன்பு ராயர் காபி கிளப்பில் ஜோசியம், மூட நம்பிக்கைகள் பற்றி ஒரு பேச்சு வந்தது. தற்பொழுது நம் ஊரில் சீன ஜோசியம் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதுமாதிரி சமாச்சாரங்கள் வந்தால் நம் மக்கள் உடனே பற்றி கொள்வார்கள். பின்னர் கொஞ்சம் நாளைக்கு (அடுத்த முட்டாள்தனம் கிளைக்கும்வரை) இது எல்லோரையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும். இது தொடர்பாக நடந்த கருத்தாடலில், நண்பர் பிரபு இந்த சோதிடங்கள் நம்புவோருக்கு மன ஆறுதலைத் தரக்கூடும் என்றும் அந்த வகையில் இவை பரவாயில்லை என்றும் தொனிக்க எழுதியிருந்தார் அவருக்கு நம்பிக்கை கிடையாது என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் இது போன்ற விஷயங்களில் எல்லாம் விஞ்ஞானம் என்று நுழைக்கக் கூடாது என்று சொல்கிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் சொன்னது;

பிளாசிபோ எபக்ட் போல இந்த வாத்து பலன்களிலும் ஒருவித பலன் இருக்கத்தான் செய்கிறது. தருவாலா டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆஸ்தான சோசியர். இந்தியாவின் தலைசிறந்த சோசியர் என தன்னை கூறிக் கொள்வார். அவரைப் பற்றிய செய்திகள் அடிக்கடி பாம்பே டைம்ஸில் வரும். இன்று வருட பலன்கள் எழுதியிருக்கிறார். காலையில் எனது மனைவியும் மகளும் விழுந்து விழுந்து படித்தனர். நான்காவது படிக்கும் மகள் இப்படியாவது செய்தித் தாளை படிக்கட்டுமே என நினைத்தேன். அலுவலகம் கிளம்புகையில் மேசையில் விரிந்திருந்த அந்தப் பக்கம் கண்ணில் பட்டது. லேசாக, எனது பலனையும் பார்த்தேன். வேலை மாறுதல் நல்லவிதமாக அமையும். நிலம், வீடு வாங்குவதில் நல்ல பலன் இருக்கும்…இரண்டுமே நான் நினைத்திருந்த ஒன்று. இன்று முழுவதும் ஏதோ சந்தோஷமாகவே உணர்வேன். ஆனால் மனைவி கண்களில் காலையில் கிளம்பும் போது அருளே இல்லை…ஒரு வேளை கலியாணம் கை கூடி வரும் என்று எனது ராசி பலனில் முதலில் எழுதியிருந்ததை படித்திருப்பார்களோ? :-))

(நேற்று பேராசிரியர் ராமசேஷனுக்கு இரங்கல் எழுதும் பொழுதும் ஜோதிடத்தைப் பற்றிய எண்ணங்கள் வந்தன)

என்னைப் பொறுத்தவரையில் ஜோசியம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டியது. அதனால் எந்த வகையிலும் நன்மை கிடையாது (சில சமயம் என்னுடைய பாட்டியின் பலனைப் படிக்கும் போது ஸ்த்ரீ சம்போகம் என்று வந்தால் குபீரெனச் சிரிப்பு வரவழைப்பதைத் தவிர). இதை இப்படிப் பார்க்கலாம்.

ஒரு பதிநான்கு வயதுப் பையன் இருக்கிறான். அவனைப் பார்த்து ஜோசியர்

(அ) இவனுக்கு நல்ல ஜாதகம், இவன் நிறைய மார்க்கு வாங்குவான் என்று சொன்னால்;

(1) அவன் கடின உழைப்பாளியாக இருந்தால் – “நமக்குத்தான் நெறையா மார்க்கு கெடைக்குமே, நாம ஏன் படிக்கனும்” என்று டேக் இட் ஈஸி பாலிஸி என்று சொல்லிக் கொண்டு குட்டிச் சுவராகப் போவான்.

(2) அவன் கடின உழைப்பாளியாக இல்லாவிட்டால் – கேட்கவே வேண்டாம். படிக்கத் தேவையே இல்லை என்று உறுதியாக நம்பத் தொடங்குவான்.

(ஆ) இவனுக்கு ஜாதகம் சரியில்லை. என்ன படித்தாலும் மார்க்கு கிடைக்காது என்று ஜோசியர் சொன்னால்;

(1) அவன் கடின உழைப்பாளியாக இருந்தால் – தன்னுடைய தோல்விக்கெல்லாம் ஜோசியத்தின்மேல் முடிச்சுப் போடத் தொடங்கி அவனுடைய ஊக்கத்தை இழக்கத் தொடங்குவான்.

(2) சோம்பேறியாக இருந்தால் – “என்னத்தப் படிச்சு என்னத்தக் கண்டோம், எப்புடிப் படிச்சாலும் மார்க்கு வராதுன்னு சோசியர் சொல்லிப்புட்டார்” என்று குட்டிச் சுவரில் போய் உட்கார்ந்து கொள்வான்.

இதுவே பையனுக்குப் பதிலாகப் பெண்ணாக இருந்தால் (நம்மூரில்) இன்னும் மோசம், அது படிப்பை உடனடியாக நிறுத்துவதில் போய் முடியும். (நல்ல மார்க்கு வாங்கினா மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டும் (அல்லது) என்னத்தப் படிச்சு என்ன காணப்போகுது இந்தப் பொட்டப் புள்ள, ஜோசியரே படிப்புவராதுன்னு சொல்லிப்புட்டார்) சராசரி தாய், “எம் புள்ள ஜாதகத்துல எழுதியிருக்கு, அவன் நல்லா வருவான்னு” என்று சொல்லிக் கொண்டு பையனின் விலகலை எல்லாம் கண்டிக்காமல், எடுத்துச் சொல்லாமல் நல்ல வழிகாட்டாமல் போவாள்.
இதே போல நீண்ட ஆயுசு, பணக்கார மாப்பிள்ளை (ஏ புள்ள! ஒனக்கு என்னத்துக்குப் படிப்பு, ராசா மாதிரி ஒத்தன் வந்து ஒன்ன கண் கலங்காமப் பாத்துப்பான்டீ) என்று எல்லா வகைகளிலும் ஜோசியம் எதிர்மறையாகவே வேலை செய்யும்.

கடின உழைப்பை ஜோதிடம் ஒரு நாளும் பரிந்துரைப்பதில்லை. அதிக பட்சமாக அது பரிகாரங்களைத்தான் சொல்கிறது. (“பையனுக்குப் படிப்பு வராது, ஆனா எடது கை சுண்டுவெரல்ல வைடூரிய மோதெரம் போட்டுக்கிட்டு பரிச்ச எளுதினா மார்க்கு கொட்டும்”). இப்படிப் பரிகாரங்களை நாடும் மனம், ஒருக்காலத்திலும் நேர்வழி செல்லாது. வெற்றிக்கும் தோல்விக்கும் தனது கிரகங்களின் நிலையைச் சுட்டிக் கொண்டு உழைப்பை உதாசீனப்படுத்தும்.

கடின உழைப்புக்கு மாற்று மருந்து சொல்லும் எதையும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

இதைத் தவிர கிரகங்கள் நிலையைக் கணிப்பதில் நம் ஜோதிடர்கள் பல தவறுகளைச் செய்கிறார்கள் என்பது இன்றைக்கு ஓரளவு அறிவியல் தெரிந்த எவருக்கும் புரியும். அப்படியே அவர்கள் கணிப்பில்தான் பிழை, ஆனால் கிரகங்கள் மனிதனிம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன என்று வைத்துக் கொள்வோம், ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூன்று குழந்தைகள் நம் நாட்டில் பிறப்பதாகச் சொல்கிறார்கள். நான் பிறந்த அதே நேரத்தில் பிறந்தவர்கள் இந்த நேரத்தில் கணினி முன் உட்கார்ந்து தட்டிக் கொண்டிருப்பார்கள் என்று நம்புவதில் உள்ள அபத்தத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசியல் தலைவர்கள் ஜோதிடத்தை நம்புவதால் ஏற்பட்ட விபரீதங்களை நாம் நன்றாகப் பார்த்திருக்கிறோம். (அம்மா ஜெயலலிதாவின் மஹாமகக் குளியலை மறக்க முடியுமா?)

அறிவியல் நோக்கு உள்ளவர்கள் ஜோதிடம் போன்ற மடத்தனங்களை ஒரு போதும் நம்ப மாட்டார்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் மூட நம்பிக்கைக்குச் சராசரி மனிதர்கள் பலியாகும்போது, இனியும் அறிவாளிகள் ஒதுங்கி நிற்காமல் மடத்தனத்தை எதிர்கொள்ள வேண்டியது முக்கியமாகிறது. ஜோதிடம் பம்மாத்து என்று நம்பினால், உங்களுக்குத் தெரிந்தவர்களிடமாவது அதை எடுத்துச் சொல்லுங்கள்.