grave_display.pngஅமெரிக்காவில் காப்புரிமைப்பதிவு என்பது மிகவும் பிரபலமான ஒன்று. தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கிடையில் தங்கள் கண்டுபிடிப்பின் முழுப் பொருளாதாரப் பலனையும் தாங்களே அனுபவித்தாக வேண்டும் என்ற வெறி இருக்கிறது (ஆனால் பெரும்பாலான சமயங்களில் இந்தக் காப்புரிமை கண்டுபிடிப்பவர்களால் இடைத்தரகர்களிடம் விற்கப்படுகின்றன. அல்லது ஆய்வுக்குப் பணம்போட்ட நிறுவனம் மொத்தமாக அதன் கண்டுபிடிப்பு உரிமையை எடுத்துக் கொள்கிறது. என்னுடைய ஒரு காப்புரிமைப் பத்திரம் என் முன்னாள் நிர்வாகத்தால் பத்து டாலர்களுக்கு விற்கப்பட்டது). காப்புரிமை பெற்று பணம் சம்பாதித்துத் தள்ளவேண்டும் என்ற வெறி இருப்பதால் பலர் அபத்தமான விஷயங்களுக்குக் கூட காப்புரிமையை பெற்றுக் கொள்கிறார்கள். மிகச் சமீபத்தில் நான் செய்த ஒரு கருவியில் வழக்கமாக காமெரா முன்னே இருக்கும் வட்டத்துளைக்குப் பதிலாகச் சதுரமாக ஒரு துளையை மாற்றிப்போட்டு ஒரு நிறுவனம் காப்புரிமை செய்துகொண்டது.

காப்புரிமை என்பது உயர்தொழில்நுட்பங்களுக்கு மாத்திரமல்ல. பல “சிந்தனாவாதிகள்” எந்தவிதமான தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் சில அபத்தமான எண்ணங்களைக்கூட பதிவு செய்துவிட்டுப் பின்னர் பணம் சம்பாதிக்கிறார்கள். இதில் சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றி அவ்வப்பொழுது எழுத முயற்சிக்கிறேன். இன்றைக்கு முதல் தவணையாக, செத்தபிறகு உங்கள் பேச்சை ஒளி/ஒலிபரப்ப கல்லறையில் உயர்தொழில்நுட்பம் என்ற காப்புரிமைப் பத்திரத்தைப் பற்றி: * * *

கலிபோர்னியாவைச் சேர்ந்த ராபர்ட் பாரோவ்ஸ் (Robert Barrows) என்பவர் அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் சமீபத்தில் ஒரு பத்திரம் பதிவு செய்திருக்கிறார். இது இறந்துபோனவர்கள் தங்கள் கல்லறைக்கு வரும் உறவினர்/நண்பர்களுடன் உறவாடுவதைக் குறித்தது. அதாவது, மரணத்துக்கு முன்னால் நீங்கள் உங்களுடைய கல்லறைக்கு வரவிருப்பவர்களிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை இவருடைய நிறுவனத்தில் துல்லியமான ஒளிப்படமாகப் பதிவு செய்துகொள்ளலாம். பின்னர் நீங்கள் இறந்தபிறகு உங்கள் கல்லறையில் இந்தப் படம் போட்டுக் காட்டப்படும். எப்படி? இங்குதான் உயர்தொழில்நுட்பம் வருகிறது.

கல்லறைத் தூண்/சுவர் முழுவதுமாக கான்கிரீட் அல்லது கருங்கல்லால் இல்லாமல் உள்ளே வெற்றாக இருக்கும். இதில் தொடு உணர்வு கொண்ட எல்சிடி திரை பொருத்தப்பட்டிருக்கும். கல்லறையின் உள்ளே ஒரு சிறிய கணினியும் செத்துப் போனவருடன் சேர்த்துப் புதைக்கப்படும். கல்லறைக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் செத்துப்போனவர் விட்டுவிட்டுச் சென்ற பலதரப்பட செய்திகளையும் தொடு உணர்வுத் திரையில் (touch sensitive screen) வரும் பட்டியலிலிருந்து அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்துகொள்ளமுடியும். பின்னர், செத்துப் போனவர் அவர் வாழ்ந்த காலத்தில் சொல்லாத இரகசியங்களை அவர் வாயாலேயே சொல்லக் கேட்கலாம். இப்படி ஒரு கல்லறைத் தோட்டத்தில் பலரும் இந்த “சாவுச் செய்தி”யை விட்டுப் போக, வருபவர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் பல ஆவிகளின் செய்தியைக் கேட்க முயற்சித்தால் கல்லறைத் தோட்டம் சந்தைக் கடையாக மாறிப்போகும் சாத்தியம் இருக்கிறதல்லவா? இதற்கு மருந்தாக, இன்னொரு உயர் தொழில்நுட்பம் – கம்பி இணைப்பு இல்லாத காதுகளில் பொருத்திக்கொள்ளும் ஒலிப்பான்கள். பாரோவ்ஸ் திட்டத்தின்படி இடுகாட்டுக்குள் நுழையும்பொழுதே உங்கள் கடனட்டையைக் கொடுத்து இந்த ஒலிப்பான்களை வாடகைக்குப் பெற்றுக் கொள்ளலாம். காசு அதிகம் இருந்தால் ப்ளாஸ்மா திரைகூடப் பொருத்தலாம்.

Link to Patent Application

இந்தக் காப்புரிமை விண்ணப்பத்தில் இவர் எடுத்துவிட்டிருக்கும் வார்த்தைகளைப் படித்தால் தலையைச் சுற்றுகிறது. உதாரணத்திற்கு கொஞ்சம்:

…The tombstone further includes one or more of the devices in the group consisting of telecommunication devices including telephonic equipment, digital data processing equipment, faxes, modems, cable and internet access, including DSL or cable or ISDN, T1 data lines, television, satellite and radio and microwave and RF communications systems, other types of receivers and transmitters. The tombstone further includes one or more of the devices in the group consisting of power sources, UPS systems, back-up power systems, power distribution and transformation and other power conditioning systems for operating and control, recording, broadcast and viewing, data acquisition, storage, processing, receipt and transmission, etc., and other processes. The tombstone further includes one or more of the devices in the group consisting of computer processors, math and RISC processors and co-processors, PC and MAC operating systems, other computer and electronic architecture and systems, associated software, firmware and hardware.

யாருக்காவது முழு காப்புரிமை விபரமும் வேண்டுமானால் சொல்லுங்கள் அனுப்புகிறேன். (படிப்பதற்கு ஜாலியாக இருக்கும்). நேரடியாக நான் வலையில் போட்டுவைக்க அமெரிக்க காப்புரிமை அலுவலகம் அனுமதிக்காது.

* * *

ம்ம்ம்… அப்படிச் செத்துப் போனவருக்கு விட்டுச் செல்ல என்னதான் இருக்கும்? ராபர்ட் பாரோவ்ஸ் நிறைய இருக்கலாம் என்று உற்சாகமாகப் பதில் சொல்கிறார். உதாரணமாக,

சொந்தக்காரர்களை இனிமேலும் சண்டைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்கலாம். பல சமயங்களில் உயிருடன் இருப்பவர்கள் வார்த்தையைவிடச் செத்துப் போனவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்தானே!

தான் செய்த பாவங்களைப் பொதுவில் சொல்லி மன்னிப்புக் கேட்கலாம். இதில் ஒரு வசதி இருக்கிறது, பாதிக்கப்பட்டவர் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் குற்றவாளியே சொல்லக் கேட்டாலும், வேறொன்றும் செய்யமுடியாது. செருப்பைக் கழற்றி அவரை அடிக்க முடியாது, மூகத்தில் காறித் துப்பமுடியாது. வாழ்ந்த காலங்களிலெல்லாம் பெண்டாட்டி/கணவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு எதிர்ப்பேச்சு பேசமுடியாமல் இருந்தவர்கள் செத்தபிறகாவது துணிவுடன் பேசலாம்.

பொதுவாக சிலபேருக்கு மைக் முன்னால் நின்றால் பேச்சை நிறுத்தத் தோன்றாது, அப்படிப்பட்ட மைக்காசுரர்கள் நிறுத்த ஆளில்லாமல் அறுத்துக் கொண்டே இருக்கலாம்.

இன்னும் கிசுகிசு, வெட்டிப் பேச்சு, இலக்கிய விவாதம் என்று வாழ்ந்த காலத்தில் இயலாத எதைப் பற்றியாவது செத்தபிறகு பேசித் தொலைக்கலாம்.

அல்பத்தனமான ஆசைகள் (ராத்திரி பண்ணிரண்டு மணிக்கு பாஸ்டன் நகரில் சொக்கலால்ராம் சேட் பீடி குடிக்க வேண்டும், அல்லது 1431 பயோரியா பல்பொடியைக் காப்பியில் கலந்து அருந்த வேண்டும்,..) இருந்து சொல்லமலேயே போய்த் தொலைய வேண்டியிருந்தால் செத்தபிறகு ஆவியாக அலையாமல் மனதைவிட்டுக் கேட்டுத் தொலைக்கலாம். உறவினர்களில் யாராவது மனமிறங்கி அடுத்த முறை வரும்பொழுது வாங்கி வரலாம்.

இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகள், சொல்லத் துடிக்குது மனது…

* * *
இப்படியாக எனக்கொரு வசதி கிடைத்தால் என் கல்லறைக்கு வருபவர்களிடம் நான் என்ன சொல்வேன் என்று யோசித்துப் பார்த்தேன்.

1. என்ன அப்பூ, ஏமாந்துப் போயிட்டீஹளே, இங்கென படுத்திருக்கறது நா இல்லை. என்ர டூப்பு.

2. See you soon.

3. பாத்தாச்சில்ல, நகருய்யா, அடுத்தவன் பாக்க வேணாமா!

4. இந்த டீவியை அணைச்சுட்டு மனுஷனை நிம்மதியா தூங்கவுடுங்கப்பா.

5. சாரிங்க, உங்ககிட்ட இருந்து இரவல் வாங்கின புத்தகத்தை இன்னும் ஒரு வாரத்துல திருப்பித் தந்துடுறேன்.

6. The following video has mature subject matter. Viewer discretion is required.

7. யோவ், மறந்துடாம பாப்கார்ன் கவரைக் குப்பத்தொட்டில போட்டுடுப் போய்யா!

8. என்னது, ஒனக்கும் எடம் வேணுமா? தள்ளிப் படுக்கமுடியாது, போய்யா!

9. தயவு செஞ்சு சார்லி, விவேக் இவங்களையெல்லாம் இனிமே காலேஜ் ஸ்டூடண்டா நடிக்க வேண்டான்னு சொல்லுங்க.

10. யோவ், குளிச்சுட்டு வரக்கூடாது, கப்பு அடிக்குதுய்யா!

11. அடிக்கடி வந்துபோயிகிட்டு இருந்தாத்தான ஒறவுமொற வுட்டுப்போகாம இருக்கும்.

12. ஹாய் வீயூவர்ஸ், கேர்புல்லா பாருங்க, ஸொல்றத எல்லாம் லிஸன் பண்ணுங்க. ப்ரோக்ராம் எண்ட்ல நான் த்ரீ க்வெஸ்டின்ஸ் கேப்பேன். அதுக்கு ஸரியா ஆண்ஸர் பண்ணீங்கன்னா உங்களுக்கு ஒரு… ஸாரி, நான் ஸொல்ல மாட்டேன். இட் ஈஸ் எ டெட்லி ஸர்ப்ரைஸ்.

* * *

உங்கள் கல்லறையின் செய்தி என்னவாக இருக்கும்?