செய்யும் தொழிலும் – விருப்பங்களும் குறித்த சில விளக்கங்கள்

என்னுடைய இடுகையில் நான் வரம்பு மீறியிருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. நேற்றைக்கு சுந்தர் அவருடைய வலைக்குறிப்பில் “இந்த வார ஸ்பெஷல் – கும்மோணம் கொத்துபரோட்டா” என்ற தலைப்பில் நான் அவருடைய தனிக்கருத்தை விமர்சித்ததால் சேதாரப்பட்டிருப்பதாக விளக்கியிருக்கிறார்.

என்னுடைய இடுகையை மீளவாசித்தால் குழப்பம் எனக்குப் பிடிபடுகிறது. முக்கியமாக, கடைசி இரண்டு பத்திகளை (சுந்தரைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது) நான் வழக்கமாகச் செய்வது போல * * * குறியிட்டுத் தனிப்பகுதியாகத் தடுத்து எழுதியிருந்தால் அந்தக் குழப்பம் வந்திருக்காது என்று நம்புகிறேன்.

இது சுந்தருக்கான தனிப்பட்ட பதிலில்லை என்று தெளிவாக எழுதியிருந்தேன். இது நம்மவர்களைப் பற்றிய ஆதங்கம் என்றும் எழுதியிருந்தேன். இருந்தபொழுதும் முன்வைத்து எழுதப்படும் குறிப்பை நேரடியாகச் சுட்டியிருந்ததால் அவருடைய தொழில் திறனையும், அர்ப்பணிப்பையும் விமர்சித்ததாகப் பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. கொத்துபரோட்டா என்று தலைப்பிட்டு கோபப்படச் செய்திருக்கிறது. அவரைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

இருந்தபொழுதும் அந்தக் குறிப்பில் சுந்தரை நேரடியாக விளித்ததை என் நேர்மையாகக் கருதுகிறேன். என் பழக்கம் அப்படி, சுற்றிவளைத்து “சிலர் சொல்லுகிறார்கள், இணையத்தில் பேசிக்கொள்கிறார்கள்” என்ற ரீதியில் எழுதுவதை நேர்மை குறைவாகக் கருதுகிறேன்.

* * *
ஒருவனைத் தாக்க எளிதான வழி “நீங்கள்ளாம் படிச்சவங்க, நான் ஒன்னும் தெரியாதவன்’ என்று தன் கண்ணை மூடிக்கொண்டு மண்ணைப் போட்டுக் காட்டி, மற்றவனிடம் திறந்த கண்களுக்குச் சவால் விடுவது. அந்த வகையில் நான் ஒரு பொருட்டாக மதிக்காத என்னுடைய படிப்பையும் தொழிலையும் (அவர் பெரிய விஞ்ஞானி) சுட்டியது குறித்து கொஞ்சம் வருத்தம்தான்.

என்னுடைய தகுதியால் நான் வரித்துக்கொள்ளாத ஒளிவட்டம் என் தலையில் முள்கிரீடமாகப் சுமத்தப்பட்டிருக்கிறது. குன்றேறி ஒளிவட்டத்துடன் நிற்பதாக நான் ஒருக்காலும் நினைத்ததில்லை. என் தோல்விகளும் ஏமாற்றங்களுடனும் என்னுடன். இன்றைக்கும் என்னைவிடப் பொருளிலும் புகழிலும் சாதித்த மென்கலன், பிறதுறை நண்பர்கள் எனக்கு நிறைய உண்டு.

என் படிப்பும், என் வேலையைப் பற்றி வெட்கமின்றி நான் பறைசாற்றும் பிடிமானமும் என்னுடைய பெரிய பலவீனங்கள். இவற்றை வைத்துச் சாதாரணன் என்ற தகுதி எனக்கு எளிதில் மறுக்கப்படுகிறது. இவற்றை ஆயுதங்களாக்கிப் பலமுறை தாக்கப்படுகிறேன். அந்த வேளைகளில் பிறருக்கு என் கவசங்களாகக் காட்சியளிப்பவை என்னைக் கையாலாகாதவனாக ஆக்குகின்றன. சமநிலையில் நண்பர்களாகப் பழகிக்கொண்டிருப்பவர்கள் திடீரென இப்படித் திரும்பும்பொழுது அதிர்ச்சியடைகிறேன். வரித்துக்கொள்ளாத தகுதியால் பிறரை இழிவுபடுத்துவதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு மறுப்பதற்குக் கடினமானது. அதன் வேதனை மிகஅதிகம்.