tuxpaint.png

சந்தோஷங்கள் எதிர்பாராத விதத்தில் வந்து நம்மை சிலிர்க்கச் செய்கின்றன. இன்று காலை நண்பர் முகுந்திடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், தளையறு மென்கலனான டக்ஸ்பெயிண்ட் என்ற நிரலியைத் தான் தமிழ்ப்படுத்தியிருப்பதாகச் சொன்னார். முழுக்க முழுக்க சிறுவர்களை மனதில் கொண்டு வடிக்கப்பட்ட இது அற்புதமாக இருக்கிறது. லினக்ஸ் மற்றும் மைக்ரோஸாப்ட்டின் எல்லா இயக்குதளங்களிலும் இது வேலை செய்யும். டக்ஸ்4கிட்ஸ் (குழந்தைகளுக்கான டக்ஸ்) என்ற ஒருங்கிணைப்பின்கீழ் தயாரிக்கப்படும் பல நிரலிகளில் இதுவும் ஒன்று. சொல்ல வேண்டாம் க்னூ தளையறு மென்கலன் என்பதால் இது முற்றிலும் இலவசம் (ஆணைமூலம் உட்பட).

நண்பர் முகுந்தராஜ் இதை அற்புதமாகத் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். இன்று மாலை இதை கணினியில் நிறுவினேன். அடுத்த நொடியிலேயே இது எங்கள் பொடியன்கள் விக்ரம், வருண் இருவரிடையேயும் பிரபலமாகிவிட்டது. பத்து மணிக்கு, உரக்கக் கத்தியபின் கணினியைவிட்டு எழுந்திருக்கிறார்கள். மனசில்லாமல் விலகும்போது சின்னப் பொடியன் என்னை கட்டிக்கொண்டு “ப்பா, என்கு ஒன்ன ரொம்ப ப்டிக்குங்” என்று முகத்தை எச்சில்படுத்திவிட்டுப் போயிருக்கிறான். புதுவருடத்தின் அற்புதமான பரிசு இது (பார்க்கப்போனால் முகுந்துக்குப் போகவேண்டும் :). பெரியவன் விக்ரம் (ஏழு வயது) கட்டளைகளில் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். தமிழ் இப்பொழுதுதான் கற்றுக்கொள்கிறான். மிகவும் கஷ்டப்பட்டு ‘வட்டம்’ என்பதை முயற்சி செய்துவிட்டு நாளை சொல்கிறேன் என்று போய்விட்டான்.

இன்றைய சந்தோஷத்தை எனக்களித்த முகுந்துக்கு நன்றிகள்.

இறக்கிக் கொள்ள,

விண்டோஸ் வழங்கி -1

விண்டோஸ் வழங்கி -2

லினக்ஸ் RPM பொதி