வைரமுத்துத்தனமான இந்தத் தலைப்பின் அடிப்படைச் செய்தி என்னைச் சற்றே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. நேற்றைய ஒப்பந்தப்படி சன் மைக்ரோஸிஸ்டமும் – மைக்ரோஸாப்டும் தங்களுக்குள்ளே இருக்கும் பிரச்சனைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். மைக்ரோஸாப்ட் 2 பில்லியன் டாலர்கள் கொடுத்து சன்-னைச் சமாதானப்படுத்தியிருக்கிறது.

இது வழக்கமான வர்த்தகச் சமாச்சாரமாக எனக்குத் தோன்றவில்லை. பல காரணங்கள் இருக்கின்றன.
முதலாவது சன்னும் மைக்ரோஸாப்டும் பரமவைரிகள். சன் தலைவர் ஸ்காட் மக்நீலி, மைக்ரோஸாப்ட்டைப் பற்றியும், ஏன் பில் கேட்ஸைப்பற்றித் தனிப்பட்ட முறையிலும் கூட நிறையச் சர்ச்சைகளை உண்டுபண்ணியிருக்கிறார். சன்னுடைய ஜாவா தொழில்நுட்பத்தை மைக்ரோஸாப்ட் திருட்டுத்தனமாக விநியோகித்தது, பல வருட வழக்குகளுக்குப் பிறகு மைக்ரோஸாப்டின் திருட்டு நிரூபிக்கப்பட்டது. பின்னர் மைக்ரோஸாப்ட் திருட்டுத்தனமாக இல்லாமல் நேரடியாகவே மைக்ரோஸாப்ட் ஜாவாவை விண்டோஸ் கூட இணைத்தது. தொடர்ந்து அதற்கும் சன் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஜாவா-வை மைக்ரோஸாப்ப்ட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிட்டார்கள். யாருக்கு நஷ்டம் – கட்டாயம் சன்னுக்குத்தான்.

ஜாவா ஒற்றை உதாரணம்தான், பல வழக்குகளில் சன் மைக்ரோஸாப்ட்டுக்கு எதிரியாக இருக்கிறது. உதாரணமாக, பத்து நாட்களுக்கு முன்னால் ஐரோப்பியக் கமிஷன் மைக்ரோஸாப்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் மீடியா பிளேயரை இயக்குதளத்திலிருந்து பிரிக்க வேண்டும் என்றும், ஏகபோக நிலையைப் பயன்படுத்தி பிற நிறுவனங்களின் வளர்ச்சியைப் பாதித்ததற்காக 600 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பானது. இந்த வழக்கில்கூட சன் ஒரு முக்கியமான பாதிக்கப்பட்ட நிறுவனமாகச் சுட்டப்பட்டது. இந்த நிலையில்தான் சன்-மைக்ரோஸாப்ட் சமரசம் வந்திருக்கிறது.

இதனால் என்ன நடக்கும்;

1. ஐரோப்பிய கமிஷன் தீர்ப்பை மைக்ரோஸாப்ட் எதிர்க்கவிருக்கிறது. இந்த நிலையில் சன் அதன் பக்கம் சேர்வது மைக்ரோஸாப்ட்டைப் பலப்படுத்தும்.

2. இப்பொழுதைக்கு மைக்ரோஸாப்ட்டின் கறவைமாடு அதன் ஆபீஸ் பொதிதான். அதற்கு ஒரே மாற்றாக இருப்பது சன்-னின் ஸ்டார் ஆபீஸ். (கோரல் நிறுவனத்தின் வேர்ட் பர்பெக்ட் முழுமையான அலுவலகப் பொதியில்லை). இதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒரளவுக்கு மேல் வளரவிடாமல் பார்த்துக்கொள்வது மைக்ரோஸாப்ட்டின் உத்தியாக இருக்கலாம்.

3. ஒரு அளவிற்குமேல் வளராமல் இருப்பதைவிட முற்றாக அழியாமல் இருப்பது மிகவும் முக்கியம். அப்படி ஒரு மாற்று இருப்பதாகக் காட்டிக்கொள்வது தன் மேல் சுமத்தப்படும் ஏகபோக வழக்குகளுக்கு மிகவும் நல்ல எதிர்சான்றாக இருக்கும். இதே காரியத்தைத்தான் சில வருடங்களுக்குமுன் ஆப்பிள் நிறுவனம் தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில் அதற்குக் கைகொடுப்பதன் மூலம் மைக்ரோஸாப்ட் சாதித்தது. இயக்குதள ஏகபோகத்திற்கு ஆப்பிள் மக்கிண்டோஷ் எவ்வளவு முக்கியமோ அதே அவளவுக்கு ஆபீஸ் பொதிக்கு ஸ்டார் ஆபீஸாக அமையும்.

4. தன்னுடைய டாட்நெட் உத்தியின் மூலம் இணையத்தை வளைத்துப்போட மைக்ரோஸாப்ட் அடித்தளம் அமைத்துவருகிறது. .நெட் கருவிகளில் ஒன்றில் கடவுச்சொல் கொடுத்து உள்ளே வந்தால் போதும், எல்லாவற்றையும் பயன்படுத்த முடியும் (உதாரணமாக, ஹாட்மெயிலில் உள்ளே வந்தால், இன்டெர்நெட் மெஸெஞ்சருக்கு மீண்டும் கடவுச்சொல் தரத்தேவையில்லை. டாட் நெட் உத்தி இதைவிட மிகவும் பரந்த வலை. மைக்ரோஸாப்ட் தளத்திற்கு வெளியிலும் மைக்ரோஸாப்ட் கடவுச் சொல்லைப் பயன்படுத்தும் உத்தி). இதற்கு மாற்றாக இருக்கும் ஒரே விஷ்யம், சன்னின் ஜாவா தொழில்நுட்பம் அடிப்படையிலானது. இன்றைய ஒப்பந்தப்படி டாட் நெட் மற்றும் ஜாவா ஒரே பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்த முடியும். அப்படியென்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். உங்களுக்கு இல்லை மைக்ரோஸாப்ட்டுக்குத்தான். இணையத்தை டாட் நெட் மூலமாக ஏகபோகமாக வளைக்கிறது என்ற கூக்குரல் வராது, ஜாவாவும் சேர்ந்திருக்கிறது அல்லவா. மேலே இருக்கும் பத்தியை மீண்டும் படியுங்கள். விண்டோஸ் இயக்குதளம் – மக்கின்டோஷ் இயக்குதளம், மைக்ரோஸாப்ட் ஆபீஸ் – ஸ்டார் ஆபீஸ், டாட் நெட் – ஜாவா இப்படி ஒரு சோனிப்பிச்சான் எதிரியை உருவாக்கித் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்வது மைக்ரோஸாப்ட்டின் அதி அற்புத உத்தி.

இந்த இரகசியப் பேச்சு வார்த்தைகளுக்காகத்தான் சன் ஜாவாவைத் திறக்க வேண்டும் என்று ஐபிஎம் வற்புறுத்தியும் இணங்கவில்லை என்று தோன்றுகிறது. திறந்த ஜாவா கட்டாயம் மைக்ரோஸாப்ட்டின் டாட் நெட் உத்திக்கு ஒரு பெரிய சவாலாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தன்னுடைய பணபலத்தால் மைக்ரோஸாப்ட் இந்தமுறையும் வென்றிருக்கிறது.

சில மாதங்களூக்கு முன்னால் ஸ்கோவைத் தூண்டிவிட்டு லினக்ஸ் உலகில் பீதியைக் கிளப்பிவிட்டது மைக்ரோஸாப்ட். பயம்-நிச்சயமின்மை-சந்தேகம் (பநிச என்று சொல்லலாமா:), Fear Uncertainity Doubt, FUD) பரப்புவதன் மூலம் திறந்த ஆணைமூலங்களின் வளர்ச்சியைத் தடுக்க ஸ்கோவை மைக்ரோஸாப்ட் கருவியாகப் பயன்படுத்துகிறது.

மறுபுறத்தில் தன் மீது இருக்கும் வழக்குகளுக்கெல்லாம் பதில் சொல்லும்வகையில் தானே சோகையான எதிரிகளை வளர்ப்பில் வைத்துக் கொள்கிறது. கீழ்த்தரமான செய்கைகளெல்லாம் பணத்தால் சாதிக்கப்படுகின்றன. கேவலம்.

அதெல்லாம் சரிதான் – கடைசியாக மைக்ரோஸாப்ட் ஒரு உருப்படியான தொழில்நுட்பத்தைத் தானாக, சுயமுயற்சியில் எப்பொழுது செய்தது என்று நினைவிருக்கிறதா? பல பில்லியன்கள் செலவழித்து அதனால் நடத்தப்படும் ஆய்வுக்கூடங்களால் உருப்படியாக எந்தத் தொழில்நுட்பத்தையும் உருவாக்க முடிந்ததில்லை. அது ஹாட்மெயிலாக இருக்கட்டும், தேடல் இயந்திரமாக இருக்கட்டும், எம்பி3 இயக்கியாக இருக்கட்டும், இணைய உலாவியாக இருக்கட்டும், சுயமாக மைக்ரோஸாப்ட் ஒன்றையுமே சாதித்ததில்லை. இருந்தும் அதிஅற்புதமான முதலிட நிறுவனமாக அது செழிப்பதற்குக் காரணம் அதன் கீழ்த்தரமான வியாபார உத்திகள்தான்.

இந்த நூற்றாண்டின் விந்தைகளில் மைக்ரோஸாப்ட்டுக்குத்தான் நான் முதலிடம் தருவேன்.