சுருட்டப்பட்ட நூறு டாலர் நோட்டுகள், கைத்துப்பாக்கி, ஏ.கே. 47, ஹலால் அல்லாத மாமிசம், மார்ஸ் சாக்லேட் பார் இவைகளுடன் கூட ஒரு பொந்துக்குள் சதாம் ஹுசேன் அமெரிக்கர்களால் பிடிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது. பேரழிவு ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டவரிடம் அதிகபட்சமாக சாக்லேட்கள்தான் சிக்கின. பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. தொடர்ந்தும் அமெரிக்கர்கள் ஈராக்கைத் தாக்கி அழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஹமீத் கார்ஸாய் என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தின் (UNOCAL) முன்னாள் கன்ஸல்டன்ட் கிடைத்ததுபோல சரியான ஜால்ரா கிடைக்கும் வரை இராக்கின் எண்ணெய் வயல்களுக்கு அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பும், இராக்கிய ஏழைகளுக்கு அமெரிக்காவின் துப்பாக்கிச் சூடுகளும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சதாமைப் பிடித்த செம்புலரி நடவடிக்கை (Operation Red Dawn) குறித்த என்னுடைய சந்தேகங்களைச் சென்றவருடம் குறித்திருந்தேன்.

சதாம் ஹுசேன் கைது – என் சந்தேகங்கள்

User Friendly Tyrants

<%image(1/20041213-saddam_capture.png|300|225|சதாம் கைது)%>

அமெரிக்கத் தேர்தல் சமயத்தில் சதாம் தான் எந்த பொந்தில் அணுகுண்டுகளை ஒளித்து வைத்திருக்கிறார் என்று சொல்லக்கூடும் என்று ஊகித்திருந்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கெல்லாம் தேவையில்லாமல் அமெரிக்கர்கள் பேரழிவு ஆயுதங்கள் இல்லாவிட்டால் என்ன பரவாயில்லை என்று புஷ்க்கு இன்னொரு நான்கு வருடங்களைத் தட்டில் வைத்துத் தந்துவிட்டார்கள். இனியென்ன…

அந்த சமயத்தில் ஓஸாமா பின் லாடன் என்ற பொன்முட்டையிடும் வாத்தை அமெரிக்கா ஒருநாளும் பிடிக்காது என்று சொல்லியிருந்தேன். இதுநாள் வரை அது சரியாக நடந்து கொண்டிருக்கிறது. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, சென்ற முறை அனுப்பிய காஸெட்டில் ஒளிப்பதிவு சரியாக இல்லாததற்கு ஒஸாமா வருத்தம் தெரிவித்திருக்கிறார். புதிய ஸோனி டிஜிட்டல் வீடியோ காமெரா ஒன்று சிஎன்என்னிடமிருந்து கிறிஸ்துமஸ் பரிசாகக் கிடைத்திருக்கிறது, இனிமேல் வீடியோக்களின் தரம் நன்றாக இருக்கும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

ஆமாம், சதாம் இப்பொழுது எங்கிருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா?