இரண்டு வருடங்கள் கழித்து மீளவாசித்ததில் ‘வேற்றாகி நின்ற வெளி’ என்ற ஈழக்கவிதைத் தொகுப்பில் மனதைக் கவர்ந்த சேரனின் கவிதை;

கேள்

எப்படிப் புணர்வது என்பதைப் பாம்புகளிடம். எப்படிப் புலர்வது என்பதை காலையிடம்.பொறுமை என்பது என்ன என்பதை மரங்களிடம். கனவுகளுக்கு வண்ணங்கள் உண்டா என்பதைத் தூக்கத்தில் நடப்பவர்களிடம். கண்ணீர்த்துளிகள் சிறைக்கூடங்களாக மாறியது எப்படி என்பதை அகதிகளிடம். பயம் என்பது என்ன என்பதை நடு இரவில் இந்த நகரில் நடக்க நேர்கிற கறுப்புத்தோல் மனிதர்களிடமும் பெண்களிடமும். மோகம் முப்பது நாள்கள்தானா என்பதை மூக்குத்தி அணிந்த காதலர்களிடம். முழுநிலவில் பாலத்தின் கீழ் உறைந்த பாற்கடலின் பாடும் மீன்கள் எங்கே போய் விட்டன என்பதைக் கார்காலத்திடம். மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத் திசை தொலையப் புலம் பெயர்ந்தவர்களிடம். துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும் என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின் உயிர்ச் சுவட்டை எறிந்தவளிடம். அவளிடம் இவளிடம். இரவின் கடைசி ரயிலும் போய்விட்ட பிற்பாடு தண்டவாளங்களும் குளிரில் துடித்துப் பிளக்க, ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப் பூவுடன் காத்திருப்பது எப்படி என்பதை என்னிடம் கேள்

-- சேரன்

வேற்றாகி நின்ற வெளி, தேர்ந்தெடுக்கப்பட ஈழத்துக் கவிதைகள், விடியல் பதிப்பகம், கோவை, 2001. விலை: ரூ. 20