நேற்றைய காசியின் வலைக்குறிப்பில் கூகிளைப் பற்றி எழுதுகையில் கேளுங்கள் தரப்படும் என்ற பாடலைப்பற்றி எழுதியிருந்தார். கேட்டவுடன் கொடுக்காமல் இருக்கலாமா? அதனால் இன்றையத் தெரிவு

[youtube]http://www.youtube.com/watch?v=e_oYM1O5Wq4[/youtube]

பாடல் : கேளுங்கள் தரப்படும்
பாடியவர் : ராதாமாணிக்கம்
தொகுப்பு: கேளுங்கள் தரப்படும் (ரமி ரெக்கார்ட்ஸ்)

ஏசுவின் வாழ்க்கையை ஆறு நிமிடங்களுக்குள் சொல்ல முயற்சிக்கும் இந்தப் பாடல் சிறிய வயதில் பலமுறை என்னைத் துயிலெழுப்பியிருக்கிறது. அந்தக் காலங்களில் தினசரி காலையில் திருச்சிராப்பள்ளி வானொலியில் வரும் பக்திப்பாடல்கள் வீட்டில் தவறாது ஒலிபரப்பாகும். அப்பா அம்மாவுடன் நாங்கள் மாத்திரம் இருந்தால் இந்துப் பாடல்களைத் தொடர்ந்து வரும் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பாடல்களும் தொடர்ந்து செல்லும். (பாட்டி ஊரிலிருந்து வந்தால் தார்வாட்-குல்பர்க்காவரைத் தேடி வேறு ஏதாவது மொழியில் ஸ்லோகம் கண்டுபிடித்தாக வேண்டும்). இந்துப்பாடல் சமயத்தில் அம்மாவின் திருப்பள்ளி எழுச்சி துவங்கும் (எழுந்துக்கோடா, ரமணா), தொடர்ந்து வரும் அடுத்த பித்துக்குளி முருகதாஸில் இது தீவிரமாகும் (டேய், எழுந்துக்கறையா இல்லயா?) பின்னர் கிறிஸ்துவத்தில் இது தீவிரமடையும் (கடங்காரா எழுந்துத் தொலைடா), கடைசியில் இஸ்லாத்தில் உக்கிரமடையும் (சனியனே, எழுந்துக்கறையா இல்ல தண்ணியத் தலைல கொட்டட்டா). இந்த சமயத்தில் எழுந்துவிடுவேன். காரணம் அம்மாவின் திட்டு இல்லை; அவள் போடும் காப்பி. இந்துக் கடவுளுக்காகக் கொதிக்கத் துவங்கும் நீர், இஸ்லாத்திற்கு வரும்பொழுது பில்டரில் டிக்காக்ஷனாக இறங்கியிருக்கும். மணம் மூக்கைத் துளைக்கும் அப்பொழுது போய் பல் தேய்த்துவிட்டு வந்தால் முதலில் இறங்கிய காப்பி கிடைக்கும், இல்லாவிட்டால் பில்டரில் மீண்டும் தண்ணீர் ஊற்றப்பட்டு… இந்த வரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாற்றம் இருக்கும், சுப்ரபாதம் வந்தால் அது கிறிஸ்துவத்தை மூழ்கடித்துவிடும். அதேபோல வேறு நாட்களில் (பெரும்பாலும் ஞாயிறுகளில்) ராதாமாணிக்கத்தின் இந்தப் பாடல் வந்தால் மதுக்கூர் மதிக்கோ, நாகூர் ஹனீபாவுக்கோ இடமிருக்காது. அதேபோல ஏசு நோன்புகள் ஏற்கும் சமயத்தில் பில்டரில் காபி ரெடியாகியிருக்கும். இப்படித் தினசரி வாழ்வுடன் ஐக்கியமான பாடல் இது.

காசி சொல்லியிருப்பதைப் போல அந்த வயதில் இந்தப் பாடலைப்பற்றி அதிகம் புரியாது. ஆகமம் 56ஐயும் கற்றார் என்று வரும்பொழுது ஆயகலைகள் அறுபத்துநான்கில் ஏன் இவர் கொஞ்சம் அரியர்ஸ் வைத்தார் என்று என் அண்ணா கேட்பான். உழவர், தொழிலாளர் போன்றவர் உள்ளத்தில் ஏசு ஒன்றாகப் பதிந்துவிட்டார் என்று வரும்பொழுது ஒரு கனம் மனதில் நியூ செஞ்சுரி புக்ஹவுஸில் சிவப்பு அட்டை மார்க்ஸ், லெனின் நடுவே இன்னொருவிதமான தாடியுடன் ஏசுவும் அட்டைப்படத்தில் இடம்பிடிப்பார்.

எளிமையான ரிதத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பாடலின் சிறப்பே ராதாமாணிக்கத்தின் குரல்தான். Rustic என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதற்கு அற்புதமான உதாரணம் இது. அட நம்ம ஆளுடா என்று பாடும்பொழுது தோன்றும், பாடல் முடிந்தவுடன் தேடுங்கள் தரப்படும் என்றோ, கேளுங்கள் திறக்கப்படும் என்றோ முன்பின்னாக மாற்றி மாற்றிப் போட்டு ஹம் செய்யாத ஆளே இருக்கமாட்டார்கள். ஆரம்பத்தில் வந்த சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்தரராஜன், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி போன்றவர்களின் நல்ல பாடல்களைக்கூடப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாள் முழுதும் ‘ஏசுவைச் சிலுவையில் அறைந்தார்ஏ..ஏ’ என்று இழுத்துக் கொண்டிருப்பேன்.

இந்த ஆல்பமே வித்தியாசமானது. பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை; எல்லோம் ஏசுவே; எனக்கெல்லாம் ஏசுவே என்று ஜிக்கியும், தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே என்று பி. சுசீலாவும், ஏசுபிரான் எங்கள் ஏசுபிரான் என்று எல்.ஆர். ஈஸ்வரியும் பாடுவது பிற கிறிஸ்தவப் பக்திப்பாடல்களிலிருந்து வித்தியாசமானதாக இருக்கும். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது ஆல்பத்தின் கடைசியில் வரும் ஏ.பி.கோமளாவின் இந்தப் பாடல் “சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்” (இதை இன்னொரு நாளைக்குத் தருகிறேன்).