அதிகாலை இருட்டு
சாலையோர உறைபனியில்
பெருவிரல் உயர்த்திக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்;
எவ்வளவு நேரமாகக் கடுங்குளிரில்
அங்கிருக்கிறாரோ தெரியாது.

எல்லோரைப் போலவும்
விரைவாகப்
போகவேண்டியிருக்கிறது எனக்கு.

விரையவேண்டியிருக்கிறது எனக்கும்.

தொலையில்
கறுப்பு அணில் ஒன்று
வெள்ளைப் பனியைச் சிவப்பாக்கிக்
கிடந்தது

முன் சென்றவரைப் போல
நானும்
இன்னும் கொஞ்சம் அறைத்துவிட்டு
விரைந்து கொண்டிருக்கிறேன்.

பின்னும் வாகனங்கள் வரவிருக்கின்றன.