நேற்று கனடாவிற்கான அமெரிக்க தூதுவர் பால் செல்லூச்சி கனடா அமெரிக்காவின்
“தீவிரவாதத்திற்கெதிரான போரில்” முனைப்புடன் சேர்ந்துகொள்ள வேண்டும் என்று மறு அழைப்பு
விடுத்திருக்கிறார். இதற்குக் காரணமாக அவர் காட்டியிருப்பது சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த குண்டு வெடிப்புகளை. நேற்று ஸ்பெயினுக்கு நேர்ந்தது நாளை கனடாவிற்கு நேரலாம் என்று எச்சரித்திருக்கிறார். இதைத் தவிர்க்க கனடா அமெரிக்காவுடன் கைகோர்த்து இராக்-ஆப்கானிஸ்தான்-(நாளை அமெரிக்கா எங்கெல்லாம் குண்டுபோடுமோ அங்கெல்லாம்) போராட வேண்டுமாம்.

அபத்தத்தின் உச்ச எல்லையை செல்லூச்சி தொட்டிருக்கிறார்.

சென்றவருடம் புஷ் இளையர் பேரழிவு ஆயுதங்கள் இராக்கிடம் இருப்பதாகச் சொல்லி போரைத்
துவங்கியபொழுது கனடாவின் அன்றைய பிரதமர் திரு ழான் க்ரெச்யென் கனடாவின் வழக்கத்திற்கு மாறாக அதன் அபத்தத்தை அமெரிக்காவிடம் எடுத்துச் சொல்லி இந்தப் போரில் பங்கேற்க முடியாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். வழக்கமாக, அமெரிக்கா சர்வதேச ரீதியில் என்ன செய்தாலும், கனடா அதன் பின்னால் துணைபோய் கொண்டிருக்கும். இதற்குக் காரணங்கள் பல உண்டு. முக்கியமான சில;

உலகின் நீண்ண்ண்ட பாதுகாப்பில்லாத தரயெல்லை அமெரிக்கா-கனடாவிற்கு இடையிலானது. கனடாவின் வர்த்தக சாத்தியங்கள் கிட்டத்தட்ட அமெரிக்காவுடன் பிண்ணிப் பிணையப்பட்டவை, கலாச்சார ரீதியாக கனேடியர்கள் அமெரிக்கத் தொலைக்காட்சியினால் கட்டிப் போடப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா என்னும் வல்லரசின் பொருண்மையால் அருகிலிருக்கும் கனடா அழுத்தப்படுவது இயற்கைதானே.

இந்த நிலையில்தான் சென்ற வருடம் க்ரெட்ச்யென் அமெரிக்கர்களைப் பகைத்துக்கொண்டார். அந்த நேரத்தில் அமெரிக்க ஊடகங்களில் கனடாவை மறைமுகமாகப் பகடி செய்தும், நேரடியாகத் தாக்கியும் வந்த அபத்தங்களைப் பார்த்தவர்களுக்குத்தான் அமெரிக்காவின் பாசிசப் போக்குகள் பிடிபட வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக, டைம் இதழ் “உலக வரைபடத்தில் கனடா ஒரு நாள் காணமல்போனால்” என்று தலைப்பிட்டு தன்னுடைய முழு வார இதழையும் வெளியிட்டு ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டது.

ஆயிற்று; ஒரு வருடத்திற்கு மேலானபிறகு இன்றைக்கு கனேடியர்கள் துணிவுடன் எடுத்த முடிவுக்காகத் தங்களைப் பாராட்டிக்கொள்ள வேண்டும். அந்த நாளில் கனடா அமெரிக்காவிடம் ஒரு மாற்றுத்திட்டத்தை முன்வைத்தது; அதன்படி இராக்கிலிருக்கும் ஐநா ஆயுதக் கண்காணிப்புக் குழுவிற்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும், ஆனால் இந்த முறைத் தெளிவாக இறுதிநாளை வரையறுக்க வேண்டும். அந்த இறுதிநாளுக்குள் இராக் முழு ஒத்துழைப்பு தந்து சந்தேகமான இடங்களுக்கெல்லாம் குழுவை அனுமதிக்க வேண்டும். அப்படி இராக்
ஒத்துழைக்கவில்லை என்றால் இறுதிநாளுக்குப் பிறகு அமெரிக்கா போர் தொடுக்கலாம், நாங்களும்
சேர்ந்துகொள்ள முடியும் என்று கனடா வரையறுத்தது. வெறிகொண்ட காதுகளில் அது விழவேயில்லை.

பேனாவோடும் நோட்டுப்புத்தகங்களோடும் சென்ற ஐநா ஆயுதக் கண்கானிப்பாளர்கள் இராக்கை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டார்கள். அவர்களுக்குப் பதிலாக பல நூறூ ஆயுதமேந்திய அமெரிக்க/பிரிட்டிஷ் குண்டர்கள் வந்திறங்கினார்கள். ஓசாமாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை, பேரழிவு ஆயுதங்களை இனிமேல்தான் அமெரிக்கா இராக்கில் கொண்டுபோய் வைக்க வேண்டும், பிடிபட்ட(?) சதாம் உசேன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இராக்கின் எலிவளையிலிருந்து பிடிக்கப்பட்டு அமெரிக்காவின் பெருச்சாளிப் பொந்தில் வைக்கப்பட்டதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை.

ஆனால், மற்ற சோகமான விஷயங்களெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன; வாரத்திற்கு நூறு இஸ்லாமியரும், பத்து அமெரிக்கப் படைவீரர்களும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க ஆயுத வியாபாரிகள் கொழுத்துக் கொண்டு வருகிறார்கள், அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க-பிராண்ட் ஜனநாயகத்தின் காவலர்களாக நின்று துதிபாடி வருகிறார்கள். கொஞ்சமும் வெட்கமில்லாமல் இதையெல்லாம் தன்னுடைய அடுத்த வெற்றிக்குப் பிரச்சாரங்களாகப் பயன்படுத்த புஷ் தயாராகிவிட்டார். இதுவரை நடந்தவற்றிலேயே மோசமான விளைவு ஸ்பெயினுக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் வியாபார உத்தியை விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள். போருக்குமுன் பிரிட்டனில் 65% சதவீதம் இருந்த அமெரிக்க ஆதரவு இப்பொழுது 43% சதவீதமாகக் குறைந்திருக்கிறது. என்னுடைய வேண்டுதல்களெல்லாம் ஸ்பெயின் கொடுத்த விலைபோதும், பிரிட்டனும் அனுபவிக்க வேண்டாம்.

இந்த நிலையில் எந்த மூஞ்சியைவைத்துக் கொண்டு அமெரிக்கத் தூதர் பால் செல்லூச்சி கனடாவிற்கு அழைப்புவிடுக்கிறார் என்று தெரியவில்லை.

அமெரிக்கா கடந்த ஒரு வருடமாகப் பலவழிகளிலும் கனடாவிற்கு நிர்ப்பந்தங்களைக் கொடுத்துவருகிறது. டொராண்டோ நகர் ஸார்ஸ் தொற்றுநோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபொழுது எந்த விதத்திலும் உதவ அமெரிக்கா முன்வரவில்லை, மாறாக டொராண்டோவின் வர்த்தகத்தைப் பாதிக்கும் வகையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. தொடர்ந்து பைத்தியப் பசு வியாதி ஒன்றிரண்டு மாடுகளுக்கு இருப்பதாகத் தானே முன்வந்து அல்பர்ட்டா மாநிலம் அறிவித்தபொழுது (கவனிக்கவும், இது மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே தானாக முன்வந்து கனேடியர்கள் அறிவித்தது, யாரும் எந்தவகையிலும் பாதிக்கப்படவில்லை), அல்பர்ட்டாவின் முக்கிய வர்த்தகங்களில் ஒன்றான பசு இறைச்சியை அமெரிக்கா தடை செய்தது. ஸார்ஸ், பைத்தியப்பசு போன்றவற்றால் நேரடியாக கனடாவிற்குப் பலத்த இழப்பு. கனடாவில் பல அமெரிக்க கார் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புக்கூடங்களை வைத்திருக்கிறார்கள் (உற்பத்திச் செலவு குறைவு), இவற்றில் சிலவற்றை மூட அவர்கள் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

பதவியேற்று ஒரு காலம் முடிந்து மறு தேர்தலுக்குத் தயாராகிவரும் புஷ் இன்றுவரை கனடா பக்கம் ஒரு முறைகூட வரவில்லை. கனேடியப் பிரதமரை இன்னும் அழைக்கவில்லை. (முக்கிய காரணங்கள், முன்னால் பிரதமர் ழான் க்ரெட்ச்யென் பில் கிளிண்டனுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தது, கனடா வளைகுடா போரில் கலந்து கொள்ளாதது). இந்த நிலையில் பலவீனப்பட்டுவரும் உறவைப் புதுப்பிக்க ஸ்பெயின் காலிசெய்யவிருக்கும் இடத்திற்கு கனடாவை அழைக்கிறது.

இப்பொழுதுள்ள கனேடியப் பொதுமக்கள் மனநிலையில் இது கொஞ்சமும் சாத்தியமற்றது.