சுந்தரவடிவேலின் கலாச்சாரம் பாயும் திசை வலைக்குறிப்பையும் அதன் பின்னூட்டங்களையும் முன்வைத்து.

இது கொஞ்சம் அபாயகரமான உரையாடல், நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், என் நோக்கங்கள் சிலரால் திசைதிருப்பப்படும் என்ற ஐயம் இருக்கிறது. இருந்தாலும், நண்பர் சுந்தரும், இன்னும் நான் மதிக்கும் சிலரும் கருத்தியல் ரீதியாக என்னைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால் அவர்களுக்காகத் தொடர்கிறேன்.

சுந்தரின் நீண்ட விளக்கத்திற்கு நான் நன்றியுள்ளவன். துளசி மீதான என்னுடைய விளக்கம் அவரால் ஒற்றை வரியில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர் நான் சொன்னதை ஏற்றுக் கொண்டிருக்கிறாரா அல்லது மறுதலிக்கிறாரா என்று என்னால் அறியமுடிவில்லை. தொடர்ந்து ரோசா வஸந்த் சுந்தருக்கு அளித்திருக்கும் பின்னூட்டத்தில் எள்ளலுடன் நான் சொல்லவருவதை விளித்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு “Don’t attribute to malice what can be explained by ignorance”. என்னைப் பொருத்தவரை துளசியை வழிபடுவது ஒரு விதத்தில் அறியாமை (இன்னொரு விதத்தில் எல்லா தாவரங்களையும், இயற்கையையும் நாம் வழிபட்டாக வேண்டும் என்று நவீன அறிவியல் உலகளாவிய சூடேற்றம், உயிர்ப்பன்முகப் பாதிப்பு போன்றவற்றால் அறிவுருத்துகிறது). நான் கேட்டதெல்லாம் “எல்லா” விஷயங்களிலும் பார்ப்பனர்களைக் குற்றம் சொல்லாதீர்கள் என்பதுதான். அவர்களுக்கு அறியாமை என்ற உரிமையை ஒட்டு மொத்தமாகப் பறிக்காதீர்கள்.

கட்டாயமாக மூன்று தலைமுறைக்கு முன்னால் என்னுடைய முன்னோர் தங்கள் பிறப்பைப் பயன்படுத்தி சகமனிதரை இழிந்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அந்த எண்ணம் எனக்குத் தாளமுடியாத மனவருத்தத்தையும் வேதனையையும் தருகிறது. (நிச்சயமாகத் தன்னுடைய வேதாரண்யம் வீடுகளை விற்று சுதந்திரப் போராட்டத்தில் வித்தியாசம் பார்க்காமல் சோறு போட்டு அடுத்த தலைமுறையை வீதியில் நிறுத்திய என் தாத்தாவோ, நான் நன்கு அறிந்த என் தந்தையோ அப்படியானவர்கள் இல்லை என்று என்னால் நெஞ்சு நிமிர்த்திச் சொல்லமுடியும்). தங்களுக்கு இருந்த ஓரளவிற்கான அறிவைத் தங்களுக்குள்ளே தக்க வைத்துக் கொண்டு, அறியாமை என்னும் சுமையை மற்றவர்கள் மீது ஏற்றிவிட்டதுதான் வேறெல்லாவற்றையும் விட என் மூதாதையர் செய்த மாபெரும் தவறு என்று நாம் நம்புகிறேன்.

* * *

அதே சமயத்தில் நடப்பு நிலைகளை சற்று உன்னிப்போடு கவனிப்பது நல்லது என்று தோன்றுகிறது. முடியாட்சியில் பார்ப்பனர்கள் மன்னர்களுக்கு அடுத்த அதிகார நிலையில் இருந்தது உண்மை, இந்த நிலை சுதந்திர இந்தியாவிற்கு முன் தொடர்ந்து நீடித்தது. இப்பொழுது அதிகார வர்க்கத்தில் அவர்களுடைய பங்கு மிகவும் குறைவு (இல்லை என்று சொல்லவில்லை). ஆனால் ஒதுக்கீட்டின் உரிமைகளைப் பயன்படுத்தி முன்னுக்கு வந்த சமூகம் இப்பொழுது பழங்காலத்தில் பார்ப்பனர்கள் செய்த அதே காரியத்தைச் செய்துவருகிறது. ஒருபுறம் தங்கள் கீழுள்ளவர்கள் கல்வியறிவு பெற்றுவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறது, மறுபுறம், கடந்த காலத்தைச் சுமற்றி நடந்த, நடக்கிற, நடக்கப்போகும் எல்லாத் தவறுகளுக்கும் பார்ப்பனர்கள்தான் ஒரே காரணம் என்று பழியைத் தந்திரமாகக் கடத்திக் கொண்டிருக்கிறது. உண்மைதான் பல நூறு வருடங்களாகப் பார்ப்பன சாதி செய்த தவறை ஐம்பது ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அவர்களது கல்வியும், அறிவும் நிகழ்கால அறிவியல் சமூகத்தில் எந்தவிதத்திலும் பயனுள்ளவை அல்ல.

சமகாலத்தில் எல்லாமே வெள்ளத்தின் வேகத்தில் நடக்கின்றன. சுந்தர் சொன்ன கலாச்சாரம் இப்பொழுது பார்ப்பனர்களிடம் தொடங்கி தரையிறங்கி வரவில்லை. இது வியாபார உலகம். இங்கே நதியா வளையலும், குஷ்பு குடமும்தான் அடையாளங்கள். இதை ஒட்டு மொத்தமாக மறுப்பது கண்களை மூடிக்கொள்வதற்குச் சமம். இந்தக் கால வாணிப உலகில் எம்ஜியார் கூளிங் கிளாஸ், நாஞ்சில் மனோகரன் துண்டு, ரஜினி ஸ்டைல், கமல் பெல்ஸ் என்று கலாச்சாரம் வேறு திசையில் பாய்கிறது.

மதத்தை வைத்துப் பண்டிகைகள் செய்யப்பட்ட நிலைமாறி இப்பொழுது வாலென்டைன்ஸ் டே, மதர்ஸ் டே, போன்ற வணிகத் தினிப்புகள்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஐயர் வந்து பெயரிட்ட நிலை மாறி, திரை நட்சத்திரத்தைப் போல ஐஸ்வர்யா, த்ரிஷா என்ற பெயர்கள்தான் புதிய திணிப்புகள்.

அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் இல்லாதவர்கள் இருப்பவனின் நிலையை அடையத்தான் முயற்சி செய்வார்கள். ஐயரைப் போலக் குளித்துச் சாப்பிடுவதை உயர்வாகச் சொல்லிக் கொள்ளக் காரணம், விபரம் தெரிந்தவுடன் அதன் சுகாதாரத்தை அறிந்துகொள்வது. இதற்கு ஐயர் எந்த விதத்தில் காரணமாக முடியும். தன்னை தலித்துகளின் தலைவர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட அம்பேத்காரின் முதல் அடையாளம் தலித்தாகத்தானே இருக்கமுடியும். இப்படி எல்லாவற்றும் ஒரே காரணத்தைச் சொல்வது தர்ம அடி வாங்குபவனை ஒத்த கையாலாகாதத்தனத்திற்கு இட்டுச் செல்கிறது.

வெள்ளைக்காரர்கள் நாட்டிலும் ஸ்பூனையும் முள்கரண்டியையும் எப்படிப் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்ற வகைகள் இருக்கின்றன. இதில் கீழ்த்தட்டில் இருப்பவர்கள் எப்பொழுதும் மாட்சிமை தாங்கிய ராணியையும் அரச குடும்பத்தையும் கவனித்துச் செயல்படுவார்கள். ஒரு விதத்தில் இதெல்லாம் இருப்பவன் இல்லாதவன் நிலையைத்தான் காட்டுகின்றன. வெள்ளம் மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் பாய்கிறது. இதற்கு அன்றும் இன்றும் பிறப்பைக் காட்டுவது சரிதானா? அன்றைய மேடு பிறப்பு, இன்றைய மேடு வாணிகம். தங்கமணியின் மேற்குடியாக்கம் புரிகிறது, சமஸ்கிருதமயமாக்கம்?? வணிக உலகில் எதன் பங்கு அதிகமிருக்கிறது? அதை ஏன் தொடர்ச்சியாகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்? இதற்கு மருந்தாக அறிவுப் பரவலாக்கத்தைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்? இதைச் செய்வது கற்வர்கள் ஒவ்வொருவரின் கடமையுமல்லவா? வேறெல்லா வெற்றுப் பிரச்சாரங்களைக் காட்டிலும் இது நேரடிப் பயன்தருவதல்லவா?

இந்த இடத்தில் குளிப்பது என்னுடைய உரிமை. பறப்பயலுக்கு என்னடா குளியல் வேண்டியிருக்கிறது என்ற ஆணவத்தைப் பழங்காலத்தில் பார்ப்பனர்கள் காட்டியதை மறந்துவிடக்கூடாது. இதைத்தான் நான் அறிவுமறுத்தல் என்று சொல்கிறேன். அந்தக் கொடுமையை அவர்கள் இப்பொழுது குறைத்துக் கொண்ட (அல்லது செய்ய இயலாமல் போய்விட்ட) நிலையில் வேறுசிலர் அதைக் கையிலெடுத்திருக்கிறார்கள். இவர்களுடைய தந்திரம் இறந்த காலச் சுமையை ஒருசிலரின் முதுகில் சுமர்த்தி அவர்களது முதுகை வளைப்பது, இன்னொருபுறம் அறிவுமறுத்தலைத் தொடர்ந்து செய்து கீழே இருப்பவனை நிமிரவிடாமல் செய்வது.

யாருக்கு இப்பொழுது சாதி வேறெல்லாரையும்விட அதிகம் தேவையாக இருக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.

என்னுள்ளும் பிறருள்ளும் இயங்கும் ஆதிக்க மனப்பான்மையை அடையாளம் காணுவதில் சமகால உண்மைகளின் பங்கு மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.