என்னுடைய பள்ளி நாட்களில் தொண்டை கரகரத்து சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக என் அம்மா ஒரு குவளை சுடுதண்ணீரில் கொஞ்சம் உப்பைப் போட்டு நன்றாக வாயைக் கொப்பளிக்கச் சொல்வாள். இதை அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, அடிக்கடி செய்தால் தொண்டைவலியை ஓரளவுக்குக் குறைக்க முடியும். சில சமயங்களில் இப்படி உப்புநீரைக் கொடுக்கும்பொழுது அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் என் அம்மா சேர்ப்பார்கள். மஞ்சளுக்கு நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் உண்டு. சுடுநீர் தொண்டைக்கு இதமளிப்பதுடன் மஞ்சளின் நோய் எதிர்ப்புத் திறனும் சேர்ந்துகொள்ள் அந்தக் கலவை அற்புதமாக வேலைசெய்யும். இன்றளவுக்கும் நான் பயன்படுத்திவரும் கைவைத்தியம் இது.

இதேபோல் என் அம்மாவிடம் பல கலவை மருந்துகள் உண்டு, சுக்கு, மிளகு, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி, அதிமதுரம், கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், பச்சைக் கற்பூரம், மென்தால், ஓமம், என்று பல மருந்துப் பொருள்கள் வீட்டில் புட்டிகளில் அடைக்கப்பட்டு கிடக்கும். எங்களுடைய தேவைக்கு ஏற்ப இவற்றின் கலவை மாற்றப்பட்டு பல விதமான கஷாயங்களும், சூர்ணங்களும், பொடிகளும் தயாரிப்பாள் என் அம்மா. பெரியவர்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் சுக்கு, கடுக்காய் போன்றவை அடிக்கடி காணப்படும். சிறுவர்களுக்கானதில் ஓமம், மாசிக்காய் போன்றவை பெரும்பாலும் முக்கிய மருந்துகளாக இருக்கும்.

எனக்குத் தெரிந்த வகையில் பெரிய ஆச்சரியம் – ஏன் இப்படி மருத்துவர்கள் (அலோபதி) ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளைக் கலவையாக்கித் தருவதில்லை. கவனிக்கவும். ஒரு ப்ளூ காய்ச்சலுடன் மருத்துவரிடம் சென்றால் அவர் ஒரு ஆண்டிபயாடிக் (உதாரணமாக, எரித்ரோமைசின்), ஒரு உடல்வலி மாத்திரை (உ-ம் ப்ரூபென்), ஒரு காய்ச்சல் மாத்திரை (பாராசிட்டமால்) இவற்றைப் பரிந்துரைக்கக் கூடும். ஆனால் இவற்றின் கலவையைத் துல்லியமாக நோயாளிக்கு ஏற்றபடி மாற்றியமைத்து (உதாரணமாக 375 மில்லிகிராம் எரித்ரோமைசின், 432 மில்லிகிராம் ப்ரூபென், 230 மில்லிகிராம் பாராசிட்டமால்) என்று கலந்து ஒரு மருத்துவரும் தருவதில்லை. தலைவலி அதிகமிருந்தாலும் சற்றே உடல்வலி இருந்தாலும் ப்ளூ காய்ச்சலுடன் போனால் இவையெல்லாம் குத்துமதிப்பான அளவில்தான் பரிந்துரைக்கப்படுகின்றன.

இதற்கு ஒரு படி மேலே போய்ப் பார்க்கலாம்; என்னுடைய பாட்டி குழந்தைகளுக்கு வயிற்றில் சீரணக் கோளாறு ஏற்படும் சமயத்தில் வெற்றிலையை ஓமத்துடன் கசக்கிச் சாறெடுத்து அத்துடன் ஒரு சொட்டு தேனையும் குழைத்து நாக்கில் தடவுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை என் பாட்டியிடம், “ஏன் பாட்டிம்மா, வெத்தல சாற தனியா கொடுத்து ஓமத்தைத் தனியா கொடுத்தா என்ன? ஏன் ரெண்டையும் போட்டுக் கசக்கிக் கொடுக்கற” என்று கேட்டிருக்கிறேன். என் பாட்டி, “அதெல்லாம் தனித்தனியா கொடுத்தா வேல செய்யாதுடா, ரெண்டுமா சேந்தாதான் சூடு ஏறி கட்டியாப் போன வயிறு இளகும்” என்று சொல்லியிருக்கிறாள். அதாவது என்னுடைய பாட்டியின் கணிப்பின்படி சூடு சம்பந்தமான வயிற்று வலிக்கு இரண்டு மருந்துகளின் கலவை மாத்திரமே வேலை செய்யும். தனித்தனியாக அவை வேலை செய்யவதில்லை.

இது நாள் வரை மேற்கத்திய மருத்துவத்தில் இப்படியான் கலவை மருந்துகளின் பயன் வரையறுக்கப்படவில்லை. இப்பொழுது புதிதாகத் தொடங்கியிருக்கும் ஒரு நிறுவனம் கணினிகளின் உதவியுடன் இதைச் செய்யத் தொடங்கியிருக்கிறது. விஷயம் ரொம்பச் சாதாரணமானதுதான். x (தலைவலி), y (வயிற்றுப்போக்கு நிறுத்தம்) எனற இரண்டு மருந்துகளை ஒரு துல்லியமான வீதத்தில் கலந்து கொடுக்க x:y என்ற அந்தக் கலவை புற்றுநோயைக் குணப்படுத்துகிறது. இத்தகைய மருந்துக் கலப்பு முறையை இப்பொழுது மருத்துவத்தில் புதிய சாதனையாகக் கருதுகிறார்கள். இது எப்படி வேலை செய்கிறது என்பதை வரும் நாட்களில் விவரிக்கிறேன்.