பெங்களூரில் படிக்கும் காலத்தில் கன்னட நண்பர்களின் உதவியுடன் வீரசைவ வசனங்களுக்கு அறிமுகம் கிடைத்தது. (குறிப்பாக சேஷாத்ரி, நான் இளையராஜாவைத் சிலாகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் ஜி.கே வெங்கடேஷை சிலாகித்துக் கொண்டிருந்தான், இது எங்களிடையே பலத்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அவன் மாஸ்திக்கும், அரவிந்த் மாளஹத்திக்கும் அறிமுகம் தரத் தயாராக இருந்தபொழுது எனக்கு சமகால கன்னட இலக்கியத்தின் வீச்சு பிடிபடாமல் இருந்திருக்கிறது. இப்பொழுது அவன் விட்டுப்போன ராஜாவையும், நான் விலகிப்போன மாஸ்தியையும் பற்றி புலம்பிக்கொண்டிருக்கிறோம்). பழைய நினைவுகளிலிருந்து கிளம்பும் தகவல்களுடன், அங்கங்கே பொறுக்கிவைத்திருந்த கவிதைகளையும் கலந்து எழுத உத்தேசம். இந்தத் தகவல்களில் தமிழில் வந்தவையும் உண்டு (இயன்றவரை பெயர்களைத் தருகிறேன்). இவற்றில் பல என்னுடைய ஆங்கிலவழித் தமிழாக்கங்கள் (ஓரளவுக்குக் கன்னடம் தெரியும் என்றாலும் வசனங்களின் முழு வீச்சையும் அறிந்துகொள்ள முடியாது). அக்கமஹாதேவி

12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அக்கமஹாதேவி கன்னட மொழியின் முதல் பெண் கவிஞர் என்று அறியப்படுகிறார். சிறுவயதில் பிற சிறுமியர் வழமையான விளையாட்டுகளில் மகிழ்ந்திருந்த காலத்தில் அக்கா சென்னமல்லிஹார்சுனனையே தன்னுடைய விளையாட்டுத் தோழனாக வரித்து மூழ்கியிருந்தாள். மயக்கும் அழகுடையவளாகிய அவளைப்பலரும் நாடி நிற்க அவளோ தன்னுடைய பொத்திவைத்த கரங்களுக்குள்ளே மல்லிஹார்சுனர் இருக்கும் இருமாப்பில் அவர்களைத் துச்சமாக நினைத்தார்.


மலையில் அல்லாது புல்மேட்டில் ஆடிடுமோ மயில்

ஏரியில் அல்லாது சகதியில் களித்திடுமோ அன்னம்

மாம்பூக்கள் வெடித்திராதவிடில் கானமுண்டோ குயிலுக்கு

நறுமணம் இல்லாத பூவன்றி வேறெதும் விழையுமோ தும்பி

எந்தன் தேவன் மல்லிஹார்சுனனை அல்லாது

வேறெவரையும் நாடாதே என்கிறது என் மனம்

கேட்கிறீர்களா!


கிரி அல்லாதே huல்லு மொரளி யல்லாடுவுதே நாவிலு

கொலவ அல்லாதே ஷிறுவல்ல கெய்ளிசுவுதே ஹன்ஸே

மாமர தலிதல்லாதே ஸ்வரகையுவுதே கோகிலே

பரிமளவில்லாத புஷ்பகெய்ல சுவுடே ப்ரஹ்மர

என்ன தெய்வ மல்லிஹார்சுன ஹல்லாதே

அன்ய கெய்ல சுவுடே யென்ன மனா பெய்லிரெ

ஹெய்லதியரிரா!

தமிழுக்கு எவ்வளவு அருகில் வருகிறது கன்னடம் என்பதைக் கவனியுங்கள். ஆண்டாளுக்கு அருகில் வருபவள் அக்கமஹாதேவி.

தொடர்ந்து எழுத உத்தேசம்.