liberal.png

இப்பொழுது மணி இரவு 11:20 ஆகிறது ஒண்டாரியோ, க்யூபெக், தொடங்கி அல்பெர்ட்டா வரை வாக்கெடுப்பு முடிந்து இரண்டு மணி நேரம் ஆகப்போகிறது. முடிவுகள் பெரும்பாலும் வெளிவந்துவிட்டன.

மொத்த இடங்கள் – 308

லிபரல் – 123 (14 தொகுதிகளில் முன்னணி)
கன்ஸர்வேடிவ் – 82 (12)
ப்ளாக் க்யூபெக்வா – 51 (3)
புது ஜனநாயகம் – 17 (5)
சுயேச்சை – 1

பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 155 இடங்கள் தேவை. இந்த நிலையில் லிபரல்களுக்கு 137 இடங்கள் கிடைக்கவிருக்கிறது. கன்ஸர்வேடிவ் கட்சிக்கு 94 இடங்கள்தான் சாத்திமாகிறது. கருத்துக்கணிப்புகளெல்லாம் கன்ஸர்வேடிவ்க்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றன. குறைந்தபட்சம் லிபரல்கள் தோற்றுப்போவார்கள் என்று சொல்லப்பட்டது.

நான் கடைசியாக எழுதிய வலைக்குறிப்பில் லிபரல்கள் தோற்றுப்போக சாத்தியம் இருக்கிறது என்று தொனிக்க எழுதினேன். ஆனால் கடைசி ஒருவாரத்தில் லிபரல் இயந்திரம் மிகவும் திறமையாகச் செயல்பட்டு கன்ஸர்வேடிவ் கருத்துகள் கனடாபோன்ற முன்னோக்கு உள்ள நாட்டிற்கு இழிவைத்தரும் என்று அறைந்து சொல்லின. ஒருபுறம் கன்ஸ்ர்வேடிவ் தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பர் தனிப்பெரும்பான்மை நிச்சயம் என்று தொனிக்க பேச, நடப்புப் பிரதமர் பால் மார்ட்டின் (லிபரல்) அடக்கியே வாசித்தார். இது ஓரளவு லிபரல்கள் தங்கள் தவறுக்கு வருந்துவதைப்போன்ற எண்ணத்தை விதைக்க போக்கு திரும்பத் தொடங்கியது. (இவற்றையெல்லாம்பற்றி விரிவாகப் பின்னர் எழுத முயற்சிக்கிறேன்).

இப்பொழுதைக்கு லிபரல் பெரும்பான்மை பலம் இல்லாத ஆட்சியை அமைக்கப்போகிறது. ஜனநாயகக் கட்சி அதற்கு ஆதரவு கொடுத்தால் (இரண்டுக்கும் இடையில் ரொம்ப வித்தியாசம் கிடையாது. என்னைப் பொருத்தவரை ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள்தான் சிறந்தவை, ஆனால் லிபரல்களிடம் திறமை இருக்கிறது). மார்ட்டினால் நிலையான அரசு அமைக்கமுடியும். கன்ஸர்வேடிவ்கள் ஏற்கனவே ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்போம். இடைத்தேர்தல் சாத்தியம் என்ற ரீதியில் சொல்லிவருகிறார்கள்.

ப்ளாக் க்யூபெக்வாவின் வெற்றி எதிர்பார்த்ததுதான். இதைப்பற்றி தனியாக எழுதவேண்டும்.