நள்ளிரவு நிலவரம்

லிபரல் – 130 (6)
கன்ஸ்ர்வேடிவ் – 85 (7)
ப்ளாக் க்யூபெக்வா – 53 (2)
புது ஜனநாயகம் – 18 (5)
சுயேச்சை – 1
_ _ _

பெரும்பாலும் எந்த மாறுதல்களும் இல்லை. கன்ஸர்வேடிவ் எதிர்பார்த்ததைப் போலவே பசிபிக் மாநிலங்களில் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது.

தலைவர்களில் இருவர் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஒருவர் எளிதாக வெற்றி பெற்றிருக்கிறார். ஒருவர் தலை தப்பித்தது.

பால் மார்ட்டின் (லிபரல்) – பிரெஞ்சு பேசும் க்யூபெக் மாநிலத்தில் மாண்ட்ரியல் நகரில் லா-சால்லே-ஏமார் தொகுதியில் சுலபமாக வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் ஆரம்ப நிலையில் மார்ட்டின் பின் தங்கியிருந்தார். நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

ப்ளாக் க்யூபெக்வா தலைவர் கில் டூஸெப் அங்கே லாரியே (Laurier) தொகுதியில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்.

கன்ஸர்வேடிவ் தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பர் எதிர்பார்த்ததைப் போலவே அல்பர்ட்டா மாநிலத்தில் கால்கரி தென்மேற்கு (Calgary Southwest) தொகுதியில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். முப்பது சதவீத வாக்குகள் எண்ணிய நிலையிலேயே இவரது வெற்றி உறுதியாகிவிட்டது.

ஆனால் புது ஜனநாயகக் கட்சியை முந்தையத் தேர்தலைவிட நல்ல நிலைக்குக் கொண்டுவந்த ஜாக் லேய்ட்டன் டொராண்டோ-டான்போர்த் (Toronto – Danforth) லிபரல் வேட்பாளரிடம் மூச்சுத்திணறித்தான் வெற்றி பெற்றிருக்கிறார். இவரது மனைவியும் அந்தக் கட்சியின் முக்கியப் பெண் தலைவருமான ஒலிவியா சௌவ் (Olivia Chow) எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக லிபரல் பெண் வேட்பாளரிடம் தோற்றுப்போயிருக்கிறார். (இவர் போட்டியிட்ட தொகுதியில்தான் நான் வேலைசெய்யும் டொராண்டோ பல்கலைக்கழகம் இருக்கிறது).

எதிர்ப்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த டொராண்டோ மாநகரில் லிபரல்கள் தங்களது தொகுதிகளைப் பெரும்பாலும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். கண்ஸர்வேடிவ்கள் ஒட்டுமொத்தமாக டொராண்டோவைச் சூறையாடுவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லின. இவையெல்லாம் முழுமையாகப் பொய்த்துப் போய்விட்டன. இந்தத் தேர்தலில் கருத்துக்கணிப்புகள் முற்றிலும் பொய்யாகவே முடிந்திருக்கின்றன.