1991ல் சின்னத் தம்பி திரைப்படத்தின் வெற்றி பல ‘சின்ன’ப் படங்களைத் தூண்டியது. வெற்றி என்றால் அப்படி இப்படியில்லை. தமிழில் சின்னத்தம்பி, தெலுகில் சன்ட்டி, கன்னடத்தில் ரமாச்சாரி, ஹிந்தியில் அனாரி என்று எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளிக் குவித்தது இந்தக் கதை. தமிழில் சின்னத்தம்பியின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை.

பாடல் : கண்மணியே… கண்மணியே…
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ரோஹினி,
இசை: இளையராஜா
படம் : சின்ன வாத்தியார் (1995)

சின்னத்தம்பியின் வெற்றியைத் தொடர்ந்து பல ‘சின்ன’ப்படங்கள் திரைக்கு வந்தன. சின்னக்கவுண்டர், சின்னத்தாயி, சின்னத் தேவன், சின்ன வாத்தியார், சின்ன மாப்பிள்ளை என்று வரிசையாக பல படங்கள் இரண்டு வருடங்களுக்குள் வந்தன. இவை எல்லாவற்றுக்கும் சின்ன-வைத் தவிர பெரிய ஒற்றுமை – ஆமாம் பெரிய ஒற்றுமைதான் இவற்றின் இசை இளையராஜா என்பது. இவற்றில் கவுண்டரும் மாப்பிள்ளையும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன. (மீண்டும் இளையராஜாவின் இசை இவற்றுக்கு முக்கிய பலமாக இருந்தது). தாயி, தேவன், வாத்தியார் இவர்களெல்லாம் பெட்டியில் போய்ப் படுத்துக் கொண்டார்கள். இதுக்கெல்லாம்கூட சளைக்காமல் ராஜா பல வித்தியாசமான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். இன்றைய தெரிவு

குணாவின் கண்மணி அன்போடு பாடலின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து அதேமாதிரி பாடலினூடாக வசனங்கள் வருவதைப் போல அமைத்திருந்தாலும் அந்தப் பாடலுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. வழக்கம்போல இந்தமாதிரி பாடல்களை பாலசுப்ரமணியம் இடதுகையால் வாங்கி வாசித்துவிட்டுப் போய்விடுவார். என்றாலும் இதைப் பாலுவைத் தவிர வேறு யாராலாவது இப்படிப் பாடியிருக்க முடியுமா? பாடல் முழுவதும் எள்ளல் துள்ளி விளையாடும். இடையில் வரும் தமிழ்/ஆங்கில தெவச மந்திரங்களை மொழிந்திருப்பவர் ரோஹினி (ஆமாம், நடிகை ரோஹினிதான்), பரவாயில்லை சரியாகவே செய்திருக்கிறார்.

படத்தை இயக்கியவர் சிங்கிதம் சீனிவாஸராவ். பாடலைச் சின்னத்திரையில் பார்த்தபொழுது ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது (பிரபு – ரஞ்சிதா என்று நினைவு). இருந்தாலும் படத்தின் சுவரொட்டிகளில் குஷ்பு கனபாடிகள் படத்தைப் பார்த்து நமக்கெதற்கு வம்பு என்று பேசாமல் ஒதுங்கிவிட்டேன். படம் வந்த சமயத்தில் கல்யாணம் நிச்சயமாகி இருந்தது; எனவே, தனிப்பட்டும் இந்தப் பாடலுடன் சில நினைவுகள் உண்டு (வேணாம், உட்டுங்க அதெல்லாம் இப்ப எதுக்கு).