நம்ப ஊர்ல நகை நட்டு(!) எங்கெல்லாம் போட்டுப்பாங்க? ஓட்டை போடாமல் அப்படியே ‘அணிந்து கொள்ளும்’ மோதிரம், அட்டிகை, ஒட்டியாணம், போன்றவற்றை விட்டுவிடலாம். எனக்குத் தெரிந்து காதில், மூக்கில்தான் ஓட்டைபோட்டு நம் ஊரில் மாட்டிக் கொள்வார்கள். நம்மூரில் பார்த்த அதிகபட்ச சிக்கல்கள் செட்டிநாட்டு ஆச்சிகள் காதில் தொங்கும் பாம்படமும், அந்தப் பாம்படத்தால் தொங்கும் காதுகளும்தான். மேற்கத்திய நாடுகளில் உடலில் துளையிட்டுக்கொள்வது ஒரு கலையாகக் கருதப்படுகிறது. நான் கிளாஸ்கோவில் (ஸ்காட்லாந்து) வசிக்கும்பொழுது தினசரி நானும் என் மனைவியும் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் பேருந்தில் ஒரு மாணவி வருவாள். அவளுடைய தலைமயிரில் குறைந்தபட்சம் ஐந்து நிறங்களாவது இருக்கும், (அவற்றில் கிளிப்பச்சை, மஞ்சள் இரண்டுக்கும் எப்பொழுதும் இடமுண்டு. கருப்பு, நீலம், சிவப்பு, காவி, வெள்ளை, பொன்னிறம் போன்றவை வந்து போகும்). அம்மணியின் உடம்பில் அலகு காவடி குத்துவது போல பல இடங்களில் துளைக்கப்பட்டிருக்கும். உதடு, புருவம், காதுமடலின் மேற்பகுதி, மூக்கின் நடுவில், நெற்றி, இமை, விரல் நகங்கள், தொப்புள், என்று கணக்கற்ற இடங்களில் ஒரு உலோகக்கடையே குடி கொண்டிருக்கும். தாராளமாகவே காட்டப்படும் உடம்பில் இன்னும் பல இடங்களும் இதில் அடக்கம், இடுப்பு, மார்புக்கு நடுவே என்று அங்கிங்கெனாதபடியாக தேகம் ஒரு பொத்தல்கூடு என்ற சித்தர்கள் கூற்றுக்கு நடமாடும் உதாரணமாகத் திகழ்வார். எனக்கும், என் வீட்டுக்காரிக்கும் தினசரி ஒரு பொழுதுபோக்கு. அம்மணி புதிதாக என்ன உலோகத்தை எங்கே மாட்டிக்கொண்டு வருவார் என்று எங்களிடையே பந்தயம் கூட நடக்கும். மாட்டப்படும் உலோகங்களின் வடிவங்களும் விசித்திரமாக இருக்கும், நட்சத்திரம், இதயம், பிறை நிலா வடிவங்கள் தொடங்கி (பொரும்பாலும் இதுபோன்ற வழமையான வடிவங்கள் மூக்கு, காது, என்று உபத்திரவம் இல்லாத இடங்களில் பதிந்திருக்க, வேலாயுதம், சூலாயுதம், நங்கூரம், ஈட்டி போன்ற வடிவங்கள் கீழுதடு, புருவம், இமை என்று சிக்கலான இடங்களிலும், வளையம், சங்கிலி போன்றவை நாக்கு, காதுமடல், தொப்புள் (ஆமா, பம்பரம் விளையாடுவார்களே அதே இடம்தான்) என்று ஊசலாடிக் கிடக்கும். உலோகவியல் கோணத்தில் பார்த்தால், வெள்ளி, தங்கம், பிளாட்டினம் என்று தனிமங்களாகவும் (கொஞ்சம் கலப்பு சேர்த்துதான்), பித்தளை, செம்பு, பஞ்சலோகம், என்று உலோகக்கலவைகளாகவும், பாலிவினைல் குளேரைடு, பாலி எத்திலீன் போன்ற கரிம வேதியியல் சமாச்சாரமாகவும், சில சமயங்களில் கண்ணாடி வளையத்திற்குள் பலவண்ணப் பாய்பொருள்களாகவும் பிரிக்க முடியும். ஆனால் ஒன்று மட்டும் சொல்லியாகவேண்டும்; நம்ம ஊரில் போடும் எட்டுக்கல் பேசரி, ஜிமிக்கி, புல்லாக்கு போல வேலைப்பாடுகளெல்லாம் இவற்றில் கிடையாது, இந்தக் கலையின் உன்னதமே அதன் எளிமையில்தான் இருக்கிறது.

இதெல்லாம் நாம் காணக்கிடைக்கும் இடங்களில்; படித்துத் தெரிந்து கொண்டவகையில் இன்னும் பல முக்கிய உறுப்புகளும் உண்டு. கொங்கை, அல்குல், பிருஷ்டம் போன்ற பிரத்தியேக இடங்களிலும் கூட உலோகங்கள் மாட்டுவார்களாம். ஆண்களும் சளைத்தவர்கள் அல்லர். பொதுவில் மாட்டப்படும் உலோகங்களுக்கு அவற்றின் இருத்தலைத் தவிர வேறு பயன்கள் எதுமில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு என்ன? தொப்புளில் ஆணியடிப்பது ராணிமுத்து முருகன் காலண்டரா மாட்டுவதற்கா? என்றாலும், சில சிக்கலான இடங்களைப்பற்றி சிந்திக்கும்பொழுது கற்பனை கொஞ்சம் அலைபாயத்தான் செய்கிறது. மருத்துவரிடம் வந்த இளைஞருடன் ஒரு உரையாடல் இப்படி இருக்கலாம்:

“டாக்டர், நாழு நாழா மேவாய்ழ ஒழே புண்ணு”

“எங்க ஆ காட்டுங்க பாக்கலாம்”

“ஆ… ஆ”

“ஏன் சார், எத்தன தடவ சொன்னேன் இப்படி எசகுபெசகா வாய்லல்லாம் குத்திக்காதீங்கன்னு”

“இழ்ழை டாக்டழ், இப்பழ்ழாம் நா குத்திக்கரதே இழ்ழை”

“பின்ன ஏன் இப்படி??”

“குத்திக்கிட்டழு எங்க ஆழு”

என் மனதில் பிறர் நலத்தை விழையும் உத்தம குணம் வீறிட்டெழும் சில நாட்களில் இதுபோன்ற ஆசாமி/அம்மணிகளைப் பார்த்து “ஏனுங்க, டெட்டனஸ் ஊசி குத்திக்கிடுங்க” என்று சொல்லத் துடிக்கும்.

* * *

குத்திக் கொள்வது வளையங்கள் மாத்திரமில்லை. மேற்கத்திய நாடுகளில் பச்சை குத்திக்கொள்வது கூட மாபெரும் கலைதான். இப்படித் துளையிடுவது, படம் வரைவது, தொடங்கி உறுப்பை அறுத்துக் கொள்வது (ஆமாம், மேலுதடை இரண்டாகப் பிளந்துகொள்பவர்களும் உண்டு). இதற்கெல்லாமாகச் சேர்த்து ஒட்டுமொத்தமாக மெய்கலைகள் (Body Arts) என்று பெயரிட்டிருக்கிறார்கள். பச்சை குத்திகொள்வதுகூட நம்மூர் மாதிரி வெறும் இலை தழைகளைக் கசக்கிப் பிழிந்து எழுத்தாணியால் கோலமிடுவதும், பெயரெழுதுவதும் மாத்திரமில்லை. அல்புமின் காணாத வெளிர் உடம்புகளில் எல்லா நிறங்களிலும் படங்கள் வரையப்படும். அந்தப் படங்களில் வண்ணக்கலவை, கோடுகள், பரிமாணம், ஒளியமைப்பு, நிழல்வடிவங்கள் என்று சகலவிதமான வரைகலையின் சாத்தியங்களும் உச்சத்தில் இருக்கும்.

சில நாட்களுக்கு முன்னால் நான் வேலை செய்யும் ஆய்வகத்திற்கு ஒருவர் வந்தார். வழக்கமாக அதுபோன்ற உடற்கட்டும், முகவெட்டும் கொண்ட ஆசாமிகளை ஆய்வகம், ஆய்வகம் சார் இடங்களிலும் காண்பதரிது. அவர்கள் ஹார்லே-டேவிசன் போன்ற ராட்சத மோட்டார் பைக்குகளில் ஆரோகணித்து மணிக்கு 120 கி.மீ வேகங்களில் நெடுஞ்சாலைகளில் மாத்திரமே சஞ்சரிப்பார்கள் (இவர்களெல்லாம் நெடுஞ்சாலைகளை விட்டு வீட்டுக்கு எப்பொழுது போவார்கள் என்று ஒரு நிரந்த கேள்வி எனக்குண்டு). என் மேலாளரால் விவரமானவர். அண்ணலை என் அறைக்கு ஆற்றுப்படுத்திவிட்டார். அவருக்குத் தேவையான லேசரைத் தெரிந்தெடுப்பதில் நான் உதவ வேண்டியிருந்தது.

ஆமாம், இப்பொழுதெல்லாம் பச்சை குத்தப்பட்ட படங்களை நீக்குவதற்கு லேசர்களைப் பயன்படுத்துகிறார்கள். அந்த கணத்தின் உந்தலில் தம்மையிழந்து காதலன்/காதலியின் படத்தையோ, பெயரையோ எத்தனையோ பேர் பச்சை குத்திகொள்கிறார்கள். பின்னர், காதலின் நிலையாமை நிச்சயமாகும், பொழுது மார்பிலோ, முதுகிலோ, மேல் தொடையிலோ வரையப்பட்ட படம் மாத்திரம் தங்கிப்போகிறது. சில விபரமான இரண்டாம் காதலிகள், “இந்தாய்யா, நாளைக்குள்ள அந்த சிறுக்கி படத்த எடுத்துப்புட்டு அதெ எடத்துல எம் படத்த வரஞ்சுகிட்டு வரல?…” ரீதியில் எச்சரிக்கைகூட விடுக்கக் கூடும். இது ஒன்றும் மேற்கத்தைய நாடுகளுக்கு மாத்திரமான அவஸ்தை கிடையாது, நம்மூரில் கூட ஒரு காலத்தில் கட்சிக்குத் தங்களுடைய விசுவாசத்தை நிரூபிக்க அண்ணாதுரை படம்போட்ட அ.இ.அ.தி.மு.க கொடியைப் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று புரட்சித் தலைவர் கட்டளையிட்ட, ரத்தத்தின் ரத்தங்கள் உடனடியாக அந்தக் கட்டளையைச் சிரமேற்கொண்டார்கள். (இந்த ஒரே சிந்தனைக்காக அவருக்கு நூறு புரட்சித் தலைவர் பட்டங்களைக் கொடுக்கலாம். பலபேர் ‘பீச்சாங்கையில்’ படம் வரைந்துகொண்டு அறிஞர் பெருமகனை அவமதித்தது என்னமோ உண்மைதான்). பின்னர், அரசியல் ஆதாயங்கள் மாறத்தொடங்க நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் குத்தப்பட்ட பச்சையுடன் உதயசூரியனின் ஜோதியில் ஐக்கியமாகிப்போனார்கள். என்ன, பொதுக்கூட்டத்துல சட்டையை அவிழ்த்துவிட்டு புஜத்தைக் காட்டவா போகிறார்கள். அதெல்லாம் சட்டமன்றத்திற்குள்ளே மாத்திரம்தானே. அங்கென்ன வெட்கத்திற்கு வேலையென்ன? கூடுதல் பாதுகாப்புக்குக் கலைஞரைப் போல மஞ்சள் துண்டு போட்டுக் கொண்டு விசுவாசத்தைத் திசை திருப்பக்கூட சாத்தியமிருக்கிறதல்லவா?

சில காலம்வரை இங்கே பச்சை நீக்குவதற்குச் சிக்கலான வழிகள்தான் இருந்தன. ஒன்று சுரண்டியெடுத்தல் (ஆங்கிலத்தில் பெயர் கொஞ்சம் கௌரவமாக இருக்கும், Dermabration), மற்றது குளிரச்செய்து அறுவை செய்தல் (Cryosurgery). இவற்றில் போகவில்லை என்றால் செதுக்கியெடுத்தல் (Excision) என்ற முறையில் தோலோடு சேர்த்து கொஞ்சம் சதையையும் செதுக்கிவிட்டுப் பின்னர் தையல்போட்டு மூடுவார்கள். ஆனால் இப்பொழுது அந்தச் சிக்கல்கள் எல்லாம் தேவையில்லை. நியோடிமியம் யாக் (Neodymium YAG) என்ற லேசரின் கதிர்களை படங்களின் மீது பாய்ச்சினால் அந்தப் படங்களில் இருக்கும் வண்ணக்கலவை, களிம்புகள் எல்லாம் ஆவியாக்கப்பட்டு, போயே போச், போயிந்து, காயப் என்று காதலைச் சுத்தமாக சுவடில்லாமல் அழித்துவிடலாம். இந்த முறை மிகவும் எளிதானது, ஆபத்தில்லாதது. நடப்பது என்னவென்றால், லேசர் கதிர்கள் நிறக்களிம்புகளால் மாத்திரமே உட்கிரகிக்கப்படும். அப்பொழுது களிம்புகளின் வெப்பநிலை உயர்ந்து ஆவியாகி நீங்கிவிடும். லேசர் கதிர்களை மிகவும் சிறிய புள்ளியில் குவிக்க முடிவதால், தோலில் படாமல், படத்தில் மாத்திரமே விழச் செய்யமுடியும். எனவே, தோலுக்கு உட்புறமிருக்கும் நரம்புகளை அந்த வெப்பம் சென்றடையாது. இதற்குத் தேவையான லேசரைத் தெரிந்தெடுப்பதில்தான் நான் அவருக்கு உதவ வேண்டியிருந்தது.

* * *

eyejewel.pngஇப்படி உயர் நுட்பங்கள் அபத்தங்களுக்கு மாற்றாக இருக்கின்றன என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த நினைப்பில் சென்ற வாரம் மண் விழுந்தது. நெதர்லாந்து நாட்டின் முன்னணி கண் மருத்துவ ஆய்வுக்கூடத்தின் புதிதான் கண்டுபிடிப்பு இந்தத் துளைபோட்டு மாட்டிக்கொள்ளும் அபத்தத்தின் உச்சத்தை எட்டியிருக்கிறது. ரோட்டர்டாம் நகரிலிருக்கும் ஆய்வுக்கூடத்தில் கண்ணில் அறுவை செய்து பிளாட்டினத்தாலான சமாச்சாரங்களை பதிக்கும் முறைக்குக் காப்புரிமை பெற்றிருக்கிறார்கள். இது இப்பொழுது நெதர்லாந்தில் பிரபலமாகி வருகிறதாம். இந்த அலங்கார அறுவையைச் செய்துகொள்ள பலர் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள் என்று அதன் தலைவர் பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு சென்டிமீட்டரில் மூன்றில் ஒரு பங்கு அளவுள்ள பிரத்தியேகமான ‘அணிகலன்கள்’ கண்களில் பொருத்தப்படுகின்றன. விழிக்கோளத்தின் மேற்பரப்பிலுள்ள மிக மெல்லிய சவ்வு போன்ற விழிவெளிப்படலத்தில் (Conjunctiva) நுண்ணோக்கியின் உதவியால் சிறிய கீறலை ஏற்படுத்தி அதில் இந்தக் ‘கண்குத்தியை’ (வேறு என்ன சொல்வது மூக்குத்தி போலத்தானே இதுவும்) பதிக்கிறார்கள். பதினைந்தே நிமிடங்களில் முடிந்துவிடும் இந்தக் கண்குத்தலுக்கும், நகைக்கும் ஆகும் செலவு கிட்டத்தட்ட 1250 அமெரிக்க டாலர்கள் மாத்திரமே. (“என்ன, நேக்கா கேக்றேன்? உங்காத்துப் பொண்ணுக்குத்தானே போடச் சொல்றேன்”).

சாதாரணமாகப் பார்க்கும் பொழுது இந்தக் கண்குத்தி வெளியில் தெரியாது. ஆனால் எம்.ஜி.ஆரின் கதாநாயகி போல “ஒரு பக்கம் பாக்குறா, அவ ஒரு கண்ண சாய்க்கிறா” என்று மையலுடன் பார்க்கும் பொழுதுதான் அறுபதாயிரம் ரூபாய் பிளாட்டினம் கண்ணைச் சிமிட்டும். இதுதான் இந்த அணிகலனில் இருக்கும் விசேடம் என்று சொல்கிறார்கள்.

* * *

உடனடியாக இந்த நல்ல வெள்ளி, ஈஸ்டர் விடுமுறை முடிந்தவுடன் ஆய்வகத்திற்குப் போய், சில கண் மருத்துவர்களை அழைத்து லேசரை வைத்து (எக்ஸைமர் லேசர் எனப்படுபவைதான் கண்களில் அறுவை செய்ய ஏற்றவை), இந்தக் கண்குத்தியைப் பெயர்த்து எடுக்கமுடியுமா என்று யோசிக்க வேண்டும். கண்குத்தியின் ஆரம்பகால மோகம் தணிந்தவுடன் கண்ணைக் கசக்கிக் கொண்டு பல இளம் பெண்கள் வருவார்கள். அப்பொழுது சிவாஜி கணேசனைப் போல “உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்று பாட்டுப் பாடிக்கொண்டே பணம் கரைக்கும் வழி ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்.