இன்றைய ஸ்லாஸ்டாட்டில் அஸுஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் எஸ்-பிரஸ்ஸோ என்றா புதுவடிவ கணினியைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இதைப் போன்ற வடிவம் பரவலாக விற்பனைக்கு இருந்தாலும் (எங்கள் ஊரில் 190 கனேடிய டாலர்களுக்கு இதைப் போன்ற ஷட்டில் என்ற சிறிய கணினி கிடைக்கிறது). அஸுஸ் சற்று வித்தியாசமானது.

இதில் இயக்குதளத்தைத் துவக்காமலேயே பாடல் கேட்க முடியும், டிவிடியில் படம் பார்க்க முடியும். அதாவது சிறிய பல்லூடக இயக்கச் செயலிகள் சில்லு வடிவத்தில் வன்பொருளாக கணினியின் தாய் அட்டையில் வடிக்கப்பட்டிருக்கும். இயக்கு தளத்தைத் துவக்காமலேயே என்றாலும் அடிப்படையில் இதன் சில்லுக்களில் சிறிய லினக்ஸ் இயக்குதளம் பதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதையெல்லாம் கணினி என்று சொல்வதைக் காட்டிலும் பல்லூடக இயக்கிகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன்னால் நான் எழுதிய ஏஎம்டி-பிக், ஷட்டில், இப்பொழுது அஸுஸின் எஸ்-பிரஸ்ஸோ இவை எல்லாவற்றையும் பார்க்கும்பொழுது வழக்கமான இரண்டடிக்கு முக்காலடி மேசைக்கணினிகள் மரித்துப் போகும் நாள் தொலைவில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.