இன்றுடன் நான் வலைக்குறிப்பு எழுத ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியிருக்கிறது. சத்தியமாக ஒரு வருடத்திற்கு முன்னால் என்னால் இதைத் தொடர்ந்து செய்யமுடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் இப்பொழுது கிட்டத்தட்ட தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகிப்போயிருக்கிறது. இந்த வலைக்குறிப்பின் பயன் என்ன என்று நான் யோசித்துப் பார்த்தபொழுது எல்லாவற்றிலும்கூட முக்கியமானதாகத் தோன்றியது எனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்கள். பத்ரி, காசி, குமரகுரு, பரி, பா.ராகவன், சுந்தரவடிவேல், தங்கமணி, பாலாஜி-பாரி, பாஸ்டன் பாலாஜி, ‘என் மூக்கு’ சுந்தர், ஐகரஸ் பிரகாஷ், டைனோ என்று பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானது வலைக்குறிப்புகளின் வாயிலாகத்தான். இந்த நட்புகள் தொடரும், தொடரவேண்டும் என்பதே என்னுடைய இந்த நேரத்து நம்பிக்கையாகவும் விழைவாகவும் இருக்கிறது.

ஒருவகையில் இந்தக் குறிப்புகள் என்னுடைய எழுதும் பழக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியிருக்கின்றன. இவற்றில் தொடராக நான் எழுதிய ஒன்றிரண்டு கட்டுரைகள் பின்னர் என் குவாண்டம் கணினி புத்தகத்தில் இடம்பெற்றன. கடந்த இரண்டு வருடங்களாக இருந்துவரும் வேலைப்பளுவினிடையே இப்படியொரு பழக்கத்தை எனக்கு நானே சுமத்தியிருக்காவிட்டால் இந்தக் கட்டுரைகள் எழுதப்படிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

நான் எழுதிய இந்தக் குறிப்புகளின் மீது பாரபட்சமில்லாத விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. டைனோ, என் ‘மூக்கு சுந்தர்’ போன்றவர்களும் கடந்த சில வாரங்களில் ரவி ஸ்ரீனிவாஸ், ரோஸா வஸந்த் போன்றவர்களும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவை நான் எழுதுவன உற்றுநோக்கப்படுகின்றன என்று தொடர்ச்சியாக எனக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மேம்போக்காக எழுதாமல் கவனம் செலுத்த இவர்கள் உதவியாயிருக்கிறார்கள். இவர்களுக்கு என் நன்றிகள். தொடர்ச்சியான வாக்குவாதங்களுக்குப் பிறகு இந்த நண்பர்களில் சிலருக்கு என்னையும் என் நோக்கங்களைப் பற்றியுமான புரிதல் கிடைத்திருக்கும் என்பது என் நம்பிக்கை (இன்னும் இல்லை என்றால் வரும் நாட்களை நம்பிக்கையோடு எதிர்நோக்க வேண்டியதுதான்). எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றுமில்லை எனக்கு.

வரும் நாட்களில் என்னுடைய வலைக்குறிப்புகளின் போக்கில் சில மாற்றங்களைச் செய்ய உத்தேசம். இப்பொழுதைக்கு தோற்றத்தில் மாத்திரம்…

நன்றிகளுடன் தொடர்கிறேன்.