வாரக்கடைசியில் கணினியைக் குடைந்துகொண்டிருந்ததில் வெளியே வந்த ஒன்று. ராயர் காபி கிளப்பில் முற்செலுத்தப்பட்ட கட்டுரையின் எதிரொலியாக நான் கிறுக்கியது;

கவனிக்கவும். இது முழுக்க முழுக்க கவிதைக்குக் கருப்பொருள் பரிந்துரைப்பதைப் பற்றியது. வேறெதையும் இதில் தேடவேண்டாம்.

* * *

{

தமிழ்க் கவிதை இனி எவை பற்றிச் சொல்ல வேண்டும்?

தமிழகத்தில் மிச்சமிருக்கும் இயற்கையப் பற்றிச் சொல்ல வேண்டும்.

தமிழர்களுக்குப் பிரியமான நெற்பயிர், தானியங்கள், வயல்வெளிகள், ஆறுகள், ஓடைகள் பற்றிச் சொல்ல வேண்டும். கிராமங்கள், உழவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள் – இவர்களின் வாழ்க்கை, இவர்களின் குணங்கள், இவர்களின் உழைப்பு, இவர்களுக்குப் பிரியமான உறவு, செல்வங்கள், இவர்களின் திருவிழாக்கள் பற்றிச் சொல்ல வேண்டும்.

வேம்பு அழகான மரம். அரளிப்பூ அழகான மலர். கற்றாழை கூட அழகானதுதான். இவை பற்றியெல்லாம் சொல்ல வேண்டும். மக்களின் நியாயமான போராட்டங்கள் பற்றிச் சொல்ல வேண்டும். ஆறுகள் பற்றிச் சொல்ல வேண்டும்.

கிராமங்களில் தொன்மையான பண்பாடுகள் இன்றும் தமக்குள் தாங்கியுள்ள பெரியவர்கள் பற்றிச் சொல்ல வேண்டும். மக்களை அழிக்கும் வாழ்வில் பங்கு பெறும் கவிஞர்களின், படிப்பாளிகளின் சிறுமைக் குணங்கள் பற்றிச் சொல்ல வேண்டும்.

(தேர்ந்த சமூக, கலை, இலக்கிய விமர்சகரும் மார்க்சீய அறிஞருமான கோவை ஞானியின் “தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள்” நூலிலிருந்து – நிகழ் வெளியீடு)

} ராயர் காபி கிளப்பில் முற்செலுத்தப்பட்டது.

ஒரு கையாலாகாதவன் கவிதை

வாத்தியார் நல்லவர்தான் வகைக்கொன்றாய்த் தலைப்புதந்தார்; வாடா சிறுவனென்றார் வகைக்குள்ளே பாடிடென்றார், பாவிநா னெங்குபோக பாட்டொன்னுந் தோனவில்லை.

இயற்கையப் பாடச்சொன்னார்; இருமியே யிளைத்துப்போனேன், கரும்புகைக் காரின்பின்னே கவிதையக் காணவில்லை. கழிவுநீர்க் குட்டையெங்கும் கைவிட்டுத் துழவிப்பார்தும் கருப்பொருள் கண்டேனில்லை.

வயல்வெளி பாடிடென்றார்; வரப்புதான் கண்படுதய்யா, வருடத் தொருமகன்பெற்ற வள்ளலின் வாரிசுபிரிக்க வயலேது மிச்சமின்றி, வரப்பெனவே மாறிப்போச்சே.

ஆற்றினைச் சொல்நீயென்றார்; அணலா யதுதகிக்கும், அண்டயோர் மடையைமூட அவ்வழி நீரேயில்லை, அடிசுடும்; அந்நாளும் அவ்வாறே, ஊற்றைநான் தேடப்போக ஊரார்தினங் கழித்த நரகலைப் பாடலாமோ? நாற்றமுங் கவிக்கொப்பாமோ

தாழ்குலம் போற்றிடென்றார்; தாண்டநா னென்செய்வேன், அண்ணலே அவரைப்பாட அடிமைநான் பிறக்கவில்லை. பாவிநான் பிறந்தவிடமோ பள்ளியில் நூலோர்வகுத்த பாழாம்மேற் குலமாமன்றோ? பிறப்பினால் கவிபாடுரிமை பிடுங்குதல் வேறேங்குண்டோ

திருவிழாப் பாடேனென்றார்; திக்கொன்னும் தோன்றவில்ல திருவிழா வந்ததென்றால் திடுக்கிடும் மனந்தானய்யா| திருவல்லிக்கேணி சிலைகள் தெருவழி போகும்போது தொண்டர்கள் தீவைப்பார்கள், தெருவினில் குழப்பஞ்செய்யும் திருவிழா பாடல்முறையோ?

அரளியைப் பாடச்சொன்னார்; அழகாய்ப் பிறந்தபிள்ளை அரசாள ஆணாயின்றி அப்பாவி போலதுவும் அவலப்பெண் ணானதாலே, அரளியை யறைதுத்தின்று ஆருயிர் மாய்ந்துபோன அண்ணையர் நினவில்வரவும் அரண்டநா னென்னபாட?.

நியாயத்தை நீபாடென்றார்; நாசமாய்ப் போகக்கடவேன்| நியாயமெம் மிடந்தானென்றால் எதிரிகள் நெஞ்சிலறவார், நியாயமோ அவ்வழியென்றால் எம்மவர் எமனாயாவார்.

பண்பாடென் றொன்டுண்டோ பாவிய ரெம்மிடத்தில் பங்கிலே குறிநாமன்றோ பாவமும் நமக்கிங்குண்டோ பாடலைப் பாடநம்மின் பண்பிலே மீதமுண்டோ

சிறுமையச் சினப்பாயென்றார்; பெரியவர் சிறுமைதேடி பேனாவில் மையிட்டமர்ந்தால் சிந்திய மையென்கரத்தின் சிறுமையக் காட்டுதயா

உமக்குகர் கவியெழுத உலகினில் பலரிருக்க ஊமையாய்ப் போனவெந்தன் உசாத்துணை காட்டுமய்யா.

உதவாக்கரை யென்னை உட்கார்த்தி வைத்தெனக்கு உடுக்கடித் துந்திறனில் உபதேச முரைப்பீரய்யா.

அக்டோபர் 11, 2001.