நேற்றைய எனது இடுகை சற்று திசை திரும்பியிருக்கிறது. பிரகாஷ் சொன்னதுபோல் நடந்த விவாதங்கள் என்னுடைய நீண்ட வலைக்குறிப்புக்குப் பெரிதும் சம்பந்தமில்லாமலேயே நடந்திருக்கிறது. ஆனாலும், நான் இதை வெட்டித்தனமாகக் கருதவில்லை. இதை நேரடியான முறைக்கு எடுத்துச் செல்லும் என் அடுத்த முயற்சி;

நான் சொல்லியிருப்பதை முன்னொட்டி பிரகாஷ் கேட்டது

உங்கள் மூலப்பதிவுக்கு மறுமொழியாக , நான் சொல்லவந்ததன் சாராம்சம் இதுதான், ” ஐஐடி என்பது ஒரு அட்டர் ·à®ªà¯à®³à®¾à®ªà¯à®ªà®¾à®© மாடல் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நிஜமாக அப்படித்தான் நினைக்கிறீர்களா? ஒரே ஒரு விஷயம் கூட நல்லது இல்லையா? “

இதற்கு என்னுடைய பதில். ஆமாம் . இதற்கு முதல்காரணம் உயர்கல்வி நிறுவனங்கள் மீதான் என்னுடைய எதிர்பார்ப்பு மிகவும் அதிகம். என்னுடைய எதிர்ப்பார்ப்புகளுக்குப் பல தகுதிகள் உண்டு. 1. ஐஐடிக்கள் இந்தியாவின் தகுதியை மீறிய மானியங்களைப் பெறுகின்றன. இந்த மானியங்கள் இவற்றுக்கு உயர்தர ஆய்வகங்கள், நூலகங்கள் போன்றவற்றை உறுதிசெய்கின்றன. ஐஐடி பேராசிரியர்கள் மானியம் பெறும் ஆராய்ச்சிகளில் முன்னுரிமை பெறுகிறார்கள்.

2. ஐஐடிக்களுக்கு உதவ முன்னேறிய நாடுகளின் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. உதாரணமாக, சென்னை ஐஐடிக்கு ஜெர்மானிய பல்கலைக்கழகங்கள், கான்பூர் ஐஐடிக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் போன்றவை பாடத்திட்டம், பயிற்று முறை இவற்றைத் தயாரிப்பதில் உதவியளித்தன. (இது இப்பொழுதும் தொடர்கிறதா என்று தெரியாது)

3. ஐஐடிக்கள் ஏற்கனவே புத்திசாலியான மாணவர்களை மாத்திரமே உள்ளெடுக்கின்றன. இந்த மாணவர்களுக்கு கல்வியில் அதீத ஆர்வம் இருக்கிறது. (மற்ற பல்கலைக்கழங்களைப் போல இவர்கள் வேலைநிறுத்தம் போன்றவற்றில் ஈடுபட முயற்சிப்பதில்லை). பெரும்பாலான ஐஐடி மாணவர்கள் பொருளாதரத்தில் உயர்மத்திய, உயர்தர அடுக்குகளிலிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு அடுத்த வேளை சாப்பாடு போன்ற சராசரி இந்திய மாணவர்களின் பிரச்சனைகள் கிடையாது.

4. ஐஐடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் தகுதிக்கு மாத்திரமே முன்னுரிமை தரவேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. பல தரவுகள் சுட்டிக்காட்டுவதைப் போல இங்கே தலித்துகளுக்கு சலுகை என்பது பெயரளவில்தான் இருக்கிறது. இப்படி தகுதியின் மீது ஏகபோக உரிமை வேறு எந்தக் கல்வி நிறுவனத்திற்கும் இந்தியாவில் கிடையாது. (சமூகரீதியாக இதனுடைய நன்மை தீமைகளைப் பிறகு ஆராயலாம். இப்பொழுதைக்கு தரம் வேண்டும் அவர்களது எதிர்பார்ப்பு அரசாங்கத்தால் உறுதியாகத் தரப்படுகிறது)

5. மாணவர்களுக்கு வளாகத்தினுள் விடுதி வசதியிருக்கிறது. ஐஐடி வளாகங்கள் எல்லாம் மாநகரை நகரையொட்டி இருந்தாலும் அற்புதமான இயற்கைச் சூழல் உள்ளவை. சென்னை ஐஐடி கிண்டி தேசியப் பூங்காவில் அமைந்தது, மான்களும் குரங்குகளும் விளையாடும் சூழல். பம்பாய் ஐஐடி பொவாய் ஏரிக்கரையில் இருக்கிறது. கான்பூர் ஐஐடியின் வளாகத்தில் மயில்கள் ஆடக் காணலாம். இப்படியான கனவுச் சூழல் மாணவர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது.

இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க, உலகத்தின் அதியுன்னத பல்கலைக்கழக மாணவர்கள் சிக்கலான, தொல்லைகள் நிறைந்த சூழலில்தான் கல்வி பயில்கிறார்கள். இவர்களில் பலர் படிக்கும்பொழுதே வேலைசெய்து தங்கள் படிப்புச் செலவை ஈடுகட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் ஐஐடி மாணவர்களுக்கு மானியம்கூடக் கிடைக்கிறது.

6. ஆசிரிகளுக்கு பிற கல்வி நிறுவனங்களைக் காட்டிலும் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு வாளகத்திற்குள்ளேயான வதிவிடம் உறுதிசெய்யப்படுகிறது. இந்த நிலையில் சராசரியாக பிற குடிமக்கள் படும் அல்லல்கள் இவர்களுக்குக் கிடையாது (சென்னைக்குள்ளே ஐஐடியில் குடிநீர்ப் பிரச்சனை மிகவும் குறைவு). தினசரி பேருந்து, இரயில் போன்று போக்குவரத்துகளில் அல்லல்பட வேண்டிய அவசியம் கிடையாது.

7. ஆசிரியர்களுக்கு பணி சுதந்திரம் இருக்கிறது. தாங்கள் நடத்த வேண்டிய பாடத்தை பெரும்பாலும் அவர்களாகவே தெரிந்தெடுக்கும் உரிமை இருக்கிறது. அந்தப் பாடத்தினுள்ளே பாடத்திட்டம், தேர்வுகள் போன்றவற்றை முற்றிலும் அவர்களாகவே வடிவமைக்க உரிமை இருக்கிறது.

8. நிறுவன ரீதியாகவும் ஐஐடிகளுக்கு சுதந்திரம் இருக்கிறது. பயிற்றுவிக்கும் பாடங்கள், ஊழியர் நியமனம், இப்படிப் பலவகைகளிலும் கல்வி ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பிறர் தலையீடு மிகவும் குறைவு.

9. ஐஐடி என்ற நிறுவனத்திற்கும், ஐஐடி மாணவர்களுக்கும் சமூகத்தில் பெரிய மதிப்பு இருக்கிறது. இந்த சமூக அங்கீகராத்தை பல வழிகளில் திறமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, உள்ளூர் அளவில் ஒரு சிக்கல் வந்தால் ஐஐடி தலைவர் மாநில முதல்வரை நேரடியாக அணுகி அதைத் தீர்த்துக் கொள்ளமுடியும்.

10. நாட்டின் பெரிய அவலக்கேடான அரசியல் தலையீடு ஐஐடிகளில் கிட்டத்தட்ட முற்றாக இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படியான பல கனவுச் சூழல்களை அமைத்துக் கொடுத்திருப்பதன் மூலம் ஐஐடிகளின் தரம், சமூகத்திற்கான ஐஐடிகளின் பங்களிப்பு இவற்றின் மீதான எதிர்பார்ப்புகள் இயல்பாக எழுகின்றன. ஆனால் நடப்பது என்ன? நேற்றைய என்னுடைய வலைக்குறிப்பில் விரிவாகக் காட்டியதைப் போல நிறுவன ரீதியாக ஐஐடிக்கள் பெரிய தோல்வியையே சந்தித்திருக்கின்றன.

இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன?