{இரண்டு}

ஐஐடி ஆசிரியர் தேர்வு குறித்து; பொதுவாக ஐஐடியில் முன்னாள் ஐஐடி மாணவர்கள் ஆசிரியர்களாக வந்து சேர்வது அதிகம். இது சுயகலப்பு (Inbreeding) என்ற நெருக்கமான நிலையை உருவாக்குகிறது. அந்தந்த ஐஐடிகளில் அவற்றின் மாணவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பொதுவில் உயர்தரமான பல்கலைக்கழகங்களில் தங்களுடைய மாணவர்களை தாங்களே வேலைக்கு அமர்த்தமாட்டார்கள். இது ஆராய்ச்சிக்கூடங்களில் பல்வேறு பிண்ணனிகள் கொண்ட ஆசிரியர்கள் ஒருங்கவும் தங்களுக்குள்ளே கருத்துகளையும் திறமைகளையும் கலக்கவும் வழிவகுக்கும். ஆராய்ச்சிக்கூடங்களில் ஆசிரியருக்குக் கீழ் அவருடைய மாணவரே அடுத்த தலைமுறையாகத் தொடர்வது கருத்துத் தேக்கத்திற்குத்தான் வழிவகுக்கும். (ஒரே மாதிரியாகச் சிந்திக்கும் இருவர் ஒரே பல்கலைக்கழகத்திற்குத் தேவையில்லை). விரிந்த பரப்புக்கு மாணவர்கள் செல்வது அயல்மகரந்தச் சேர்க்கையைப்போல கருத்துக்கள் பரவுவதற்கு வழிசெய்யும்.

எனக்குத் தெரிந்தவகையில் இந்தியாவில் ஐஐஎஸ்ஸியில்தான் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு ஓரளவுக்கு நன்றாகச் செயல்படுத்தப்படுகிறது. நான் பயின்ற ஐஐஎஸ்ஸி இயற்பியல் துறையில் கடந்த பதினைந்து வருடங்களில் இரண்டே இரண்டு முன்னால் மாணவர்கள்தான் ஆசிரியர்கள் ஆகியிருக்கிறார்கள். (இவர்களும், எட்டு/பத்து வருடங்கள் அயல்நாட்டிலும், வேறு ஆராய்ச்சிக்கூடத்திலும் பணியாற்றியபிந்தான் திரும்ப வந்தார்கள்). மாறாக எம்ஐடி, கார்னெல், பிரின்ஸ்டன், பெல் ஆராய்ச்சிக்கூடம் போன்ற உலகின் முதல்தர ஆய்வகங்களிலிருந்துதான் ஆசிரியர் பணிக்கு நியமனம் நடந்தது/நடக்கிறது (இதனால் என்னைப் போன்ற முன்னாள் மாணவர்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டாலும், நேர்மையான இந்த நடைமுறைக்கு நான் தலைவணங்குகிறேன்) ( ஐஐஎஸ்ஸி – இயற்பியல் துறையின் இணையபக்கம் . ஆசிரியர்களின் பக்கங்களில் அவர்களது கல்வித்தகுதி தரப்பட்டிருக்கிறது).

மறுபக்கத்தில் ஐஐடி – தில்லியின் இயற்பியல்துறையில் மூன்று நான்கு பேர்களைத் தவிர எல்லோரும் அங்கேயே படித்தவர்கள். (இந்த மூன்று நான்கும் பழைய, முதிய பேராசிரியர்கள்). எனக்குத் தெரிந்து இவர்களில் பலர் பிஹெச்டி முடித்து அடுத்த நாளே அதே இடத்தில் ஆசிரியர் ஆனவர்கள். இவர்கள் மூத்த ஆசிரியர்கள் தங்களுடைய வேலைப்பளுவை தலையில் இறக்கிவைக்கப் பயன்படுகிறார்கள். இவர்களும் ஆராய்ச்சிக்காலத்தைப் போலவே ஆசிரியர் பணியிலும் தங்கள் ஆசானுக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஆனால் நேர்மையான ஆராய்ச்சி மற்றும் பயிற்றுதிறனுக்கு இரண்டாமிடம்தான்.

வேறு வகையில் பார்த்தால், மாற்று ஆய்வுக்கூடங்களில் நேரடியாக வேலைவாய்ப்புப் பெறத் தகுதியற்ற தங்கள் மாணவர்களுக்கு தாங்களே வேலை போட்டுக்கொடுப்பதன் மூலம் இவர்கள் தங்களுடைய திறமையின்மையை மூடி மறைக்கிறார்கள். முதல்தர ஆய்வுக்கூடங்களிலிருந்து இளம் ஆசிரியர்கள் வந்தால் இந்தப் பழந்தின்று கொட்டைபோட்ட வௌவால்களில் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குத் தள்ளப்பட்டு மாண்டுபோவார்கள்.

இந்தத் தகவல்களைத் தொகுக்கும் பொழுது, நான் முதலில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்த ஐஐடியின் உயவியல் (Industrial Tribology) துறையின் பக்கதைப் போய்ப்பார்த்தேன். நிலமை இன்னும் மோசமாக இருக்கிறது. அங்கே எல்லோரும் அதே ஐஐடியிலேயே பயின்றவர்கள். இதுபோல ஒரே பின்புலமுள்ளவர்கள் ஒன்று சேரும்பொழுது அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாஃபியா மனப்பாண்மையுடன் செயல்படத் தலைப்படுவார்கள். வேற்று ஆசாமிகளை உள்ளேவிடமால் தடுப்பது, மாற்றுக் கருத்துகளை உள்ளே விடாமல் தடுப்பது என்பதன் முற்றிப்போன, புரையோடின கட்டம். இதற்கு ஒரே மாற்று அறுவை சிகிச்சையைப் போல அடுத்த பத்து வருடங்களுக்கு ஐஐடிக்காரங்களுக்கு இங்கே வேலையில்லை என்று சட்டமாக்குவதுதான்.

இதுதான் இப்பொழுதிருக்கும் ஐஐடி மாஃபியாக்களிடமிருந்து ஐஐடியை விடுவிப்பதன் முதல் கட்டமாக இருக்கும்.

(இந்தக் குறிப்புக்காக நான் தெரிந்தெடுத்த இந்த இரண்டு ஐஐடி துறைகளும், ஐஐஎஸ்ஸி துறையும் என்னுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டவை என்பதால் அங்கே போய்ப்பார்த்தேன். இவற்றை நான் பொறுக்கியெடுக்கவில்லை. கட்டாயமாக எந்த ஒரு ஐஐடி/ஐஐஎஸ்ஸி துறையை எடுத்து எடைபோட்டலும் இப்படித்தான் இருக்கும்).

* * *
ஐஐடிக்களில் தன்னுடைய சிஷ்யன்தான் வேலைக்கு வரவேண்டும் என்று மூத்தோர் உறுதியாக இருக்கையில் ஆராய்ச்சித் திறமை ஒரு வேலைத் தகுதியாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விசுவாசம் என்பதே இங்கே முதல் தகுதி, அதுவே முழுத் தகுதியுமாக பெரும்பாலான நேரங்களில் மாறிப்போகிறது. இதுவே ஆராய்ச்சித்துறையில் ஐஐடிக்கள் மதுரைக் காமராஜ், புனே, பரோடா (உயிர்நுட்பத் துறை), அண்ணா பல்கலை (ஒரு சில பொறியியல் துறைகள்), ஜவாஹர்லால் நேரு பல்கலை, ஹைதராபாத் மத்திய பல்கலை (இயற்பியல்) என்று பல பல்கலைக்கழங்களைக் காட்டிலும் தாழ்வாக இருப்பதன் காரணம். ஐஐஎஸ்ஸி, டிஐஎ·à®ªà¯à®†à®°à¯ போன்றவற்றின் அருகில்கூட ஐஐடிக்கள் இல்லை.

* * *

ஐஐடிக்களில் ஆசிரியர் பணிக்கு நியமனம் நடக்கும்பொழுது அவர்களின் ஆராய்சித்திறன் அதிகம் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை (வேறு எதைவைத்து நியமனம் நடக்கிறது என்பதும் தெரியவில்லை). பாடம் நடத்தும் திறனை நேரடியாக அளப்பதற்கு அளவுகோல்கள் கிடையாது. அப்படிப்பட்ட அளவுகோல்கள் எதையும் குறிப்பக ஐஐடிக்கள் கையாள்வதாகவும் தெரியவில்லை. உலகின் பெரிய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களைத் தெரிந்தெடுக்கும்பொழுது அவர்கள் எத்தனை ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள், அவற்றில் எத்தனை முதல்தர சஞ்சிகைகளில், அந்தக் கட்டுரைகளை மற்றவர்கள் எந்த அளவிற்கு மேற்கோள் காட்டுகிறார்கள், எத்தனை ஆராய்ச்சித் திட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள், பாடம் நடத்துவதில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறது, புதிய பயிற்று முறைகளை உருவாக்க வல்லவரா (இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொல்வார்கள்), எத்தனை காப்புரிமைபெற்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார், போன்ற பல அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள். ஐஐடிக்களில் இவையெல்லாம் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று தெரியவில்லை (அப்படியிருந்தால் கட்டாயம் ஒரு துறை முழுவதும் பழைய மாணவர்களால் நிறைக்கப்ப்ட்டிருக்காது).

ஐஐடி போன்ற முதல்தர பள்ளிகளில் ஆசிரியர்கள் உலகத் தர ஆராய்ச்சியாளராக இருப்பது அவசியம். அதிபுத்திசாலி மாணவர்கள் வரும்பொழுது அவர்களிடையே ஆசிரியருக்கு மதிப்பை உண்டாக்க இது அவசியம். (இன்னொரு வழி பயமுறுத்தி மதிப்பெண்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது, நான் அரசினர் கல்லூரியில் படிக்கும்பொழுது “டேய், எங்கிட்ட மொறச்சே, இன்டெர்னல்ல கைய வச்சிடுவேன்” என்று நேரடியாக மிரட்டுவார்கள். முதல்தர ஆராய்ச்சியாளர்கள் நேரடியாக தங்கள் உலகத்தரத்தை மாணவர்களுக்குப் புகட்டமுடியும். மாறாக ஆராய்ச்சியில் திறனற்ற ஆசிரியர் குழு இடைத்தரகர்களாகத்தான் அதிகபட்சமாகச் செயல்பட முடியும்.

என்னுடைய அவதானத்தில் ஐஐடி மாணவர்களிடையே ஆசிரியர்களைக் குறித்த பயங்கலந்த குருபக்தி இருக்கிறது. ஒரு வகையில் படாத பாடுபட்டுச் சேரும்பொழுதே ஐஐடியில் இருப்பவர்கள் தெய்வங்கள் என்ற முன் மதிப்பீட்டில் வருகிறார்கள். தொடர்ந்தும் மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வுத்திட்டம் செயல்படும் இடத்தில் இந்தப் பயம் உறுதிப்பட்டுப் போகிறது. ஐஐஎஸ்ஸியில் என்னுடைய நண்பன் ஒருவன் தன் ஆசிரியர் கருத்து சரியில்லை என்று முறைத்துக் கொண்டு தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைத் தனியாளாக பிசிக்கல் ரிவ்யூ லெட்டர் என்ற முதல்தர சஞ்சிகையில் வெளியிட்டான். இந்த அளவு சுதந்திரம் ஐஐடிக்களில் கிடையாது என்பதே என் அனுமானம்.

முதல்தர ஆராய்ச்சியாளர்களாக, தங்கள் ஆய்வுத்திறனில் நம்பிக்கையில்லாதவர்களாக ஐஐடி ஆசிரியர்கள் இருப்பதால் தொழிற்சாலைகளின் சிக்கல்களை நேரடியாக மோதி அவற்றில் வெற்றி காணத் தயங்குகிறார்கள். இது ஐஐடிக்களைத் தொழில்கூடங்களின்று தனிமைப்படுத்துகிறது. எனவே இங்கே பயிலும் மாணவர்களும் இந்தியத் தொழில்துறையின் நேரடி சவால்களை ஒதுக்கிவைக்கிறார்கள்.

எனவே, என்னுடைய அவதானத்தில்

1. ஐஐடிக்களில் ஆசிரியர்களை வேலைக்கெடுக்கும் முறையை திறந்த வகையில் ஆக்க வேண்டும்.

2. சில காலங்களுக்கு ஐஐடி நியமனங்களுக்கான குழுக்களில் பிறரும் இடம்பெறச் செய்ய வேண்டும் (IISc, TIFR, CCMR, AIIMS, Infosys, Wipro, …). இது மாஃபியாக்களைப் போல வாழையடி வாழைகள் பெருகுவதை நிறுத்தும்.

3. ஆசிரியர் நியமனத்தில் மேலே சொன்ன முதல்தர ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை, ஆராய்ச்சி முன்னெடுப்புத் திறன், காப்புரிமைகள், மானிய நிர்வாகம், தொழில்துறை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி, முதல்தர ஆய்வுக்கூடங்களில் முன் அனுபவம். போன்றவற்றின் அடிப்படையிலான பரிந்துரைகள் ஒவ்வொரு நியமனத்திற்கும் முன்னரே உறுதி செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே தேர்வுகள் நடைபெற வேண்டும்.

4. அடுத்த பத்து வருடங்களுக்கு ஐஐடி மாணவர்களுக்கு ஐஐடியில் ஆசிரியர் வேலைதருவது நிறுத்தப்பட வேண்டும்.

* * *
பின்குறிப்பு: இந்த உள்கலப்பு, மா·à®ªà®¿à®¯à®¾ மனப்பாண்மை இந்திய அணுசக்தித்துறை, ராணுவ ஆய்வுத் துறை போன்றவற்றில் இன்னும் உறுதிப்பட்ட நிலையில் இருக்கிறது. ஐஐடியிலாவது புதிய மாணவர்கள் புதிய கருத்துக்களோடும், எதிர்ப்பார்ப்புகளோடும் உள்ளே வருகிறார்கள். ஆசிரியர்கள் இவர்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறது. அணுசக்தித் துறையில் இருபது வயதில் எம்எஸ்ஸி முடித்துவிட்டு உள்ளே வருகிறார்கள், நிர்வாக அடுக்குகள் மேலதிகாரிகளை இவர்களிடமிருந்து பிரிக்கின்றன. அடுத்த நாற்பது வருடங்களுக்கு வெளியுலகையே காணமால் கிணற்றுத்தவளைகளாகக் கொழுக்கிறார்கள். இதைப்பற்றி விரிவாகப் பின்னொருநாளில்.