நேற்று இரவு தமிழினி பதிப்பகத்திலிருந்து என்னுடைய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவந்திருப்பதாகப் பதிப்பாளர் திரு வசந்தகுமார் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை. நான் இன்னும் புத்தகத்தைப் பார்க்கவில்லை. ஆனால் நண்பர் பா.ரா சேலத்தில் விற்பனையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

குவாண்டம் கணினிகள் : அறிவியல் கட்டுரைகள்

தமிழினி பதிப்பகம், 144 பக்கங்கள், விலை ரு.55 (இந்தியாவில்)

கட்டுரைகள் கிட்டத்தட்ட் மூன்றாண்டு கால இடைவெளியில் எழுதப்பட்டவை. இன்றைக்கு அறிவியல்/தொழில்நுட்பம் இவற்றில் மிக முக்கியமானவை என்று கருதப்படுபவனவற்றுள் சில. கூடியவரை அந்தத் துறை சம்பந்தமான ஒரு குறைந்தபட்ச புரிதலுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்டவை. இதன் உள்ளடக்கம்.

 1. காமஞ் செப்பாது கண்டது மொழிமோ- மெய்காணலில் அறிவியல் வழி – What is Scientific Method?
 2. மரபியல் மருத்துவம் – Gene Therapy
 3. கணினி உலகின் புதிய விண்மீன் – Software based microprocessors
 4. சூட்டைத் தணிக்க வாரிகளா – Global Warming
 5. கைப்பிடியளவு கணினி – Handheld Computers
 6. யாகூவும், பில் கிளின்டனும், வலைப்புணர்ச்சியும் – Web Security
 7. வரமா, சாபமா? – மரபு மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள் – Genetically Modified Foods
 8. அதிபார்வை – Adaptive Optics
 9. காலடியில் புதையுண்ட எமன் – கண்ணிவெடிகள் – Landmines
 10. குவாண்டம் கணினிகள் – Quantum Computers
 11. நகலாக்கம் – Cloaning
 12. கொந்தரைப் போற்றுதும்; கொந்தரைப் போற்றுதும் – In praise of the hacker culture
 13. கூகிள் எனும் இயந்திரத்தின் மானுடம் – Google Search Engine
 14. மின்புத்தகங்கள் – eBooks
 15. நினைத்ததை முடிப்பவன் – எண்ணங்களால் இயந்திரத்தை இயக்குதல் – Controlling Robots through Thoughts

இன்னும் Nanotechnology, Optical Tweezers, Molecular Scaffolds, Crystal Engineering, உள்ளிட்ட பல துறைகளைப் பற்றி எழுத ஆசை. ஆனால், ஒரு புத்தகத்திற்குப் போதுமான அளவு இதுதான் என்று பல நண்பர்கள் சொன்னதால் இந்தத் தொகுப்பு உருவெடுத்தது. பல காலமாக என்னுடைய கட்டுரைகளைப் பதிப்பிக்க நண்பர்கள் ஊக்கமளித்து வந்தார்கள். குறிப்பாக காஞ்சனா தாமோதரன், இ.ரா. முருகன், சுந்தர ராமசாமி ஆகியோர். கடைசியில் நடந்தது என்னமோ ஜெயமோகனின் முயற்சியால்தான். இவர்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஊக்கங்களுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டவன்.

விமர்சனங்கள்/கருத்துகளை வரவேற்கிறேன்.