சமீபத்திய வாசிப்பில் பிடித்த கவிதை

எனது நதி

உமாமகேஸ்வரி

சிறுவயதில் பார்த்தபோது
அம்மாவின் புடவையென
அலையோடிருந்தது.
செல்லமாய் வளைவுகளில்
சேர்த்தணைக்கும்;
வருடும் மெல்ல.
பள்ளங்களில் கால்பட்டால்
பதறிப் பாய்ந்து மிரட்டும்
பருவ காலத்தில்
ஓரம் தைத்த தாவணிகளாய்
உருவம் மாறிக் கிடந்தது
துள்ளல் போர்த்தித் துவண்டு அடங்கி
சன்னமாய் மின்னும் ஜரிகை வரிகளோடு
வேறு திசையில் எறிந்து
மாறுதலாக்கியது திருமணம்
திரும்பிவந்து தேடினால்
பிரிந்த நூலிழைகளாய்த்
திரிந்திருந்தது அதுவும்
அறுந்த
அடி நீரோட்டத்தோடு.