முதல் பகுதி

பதினைந்து காசு அஞ்சலட்டை உங்களுக்குப் பிரமிப்பூட்டவில்லை என்றால், இதோ இன்னொரு தகவல்.

“அச்சிடப்பட்ட விஷயம்” (Printed Matter) என்றொரு பிரிவு உண்டு, இந்தப் பிரிவின் கீழ் அனுப்புவதற்கு உங்கள் நிறுவனம் செய்தி நிறுவனம் என்று பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படியிருந்தால், உங்கள் சஞ்சிகைகளை முழுவதுமாக மறைக்காமல் நடுவில் (கோவணத் துணிபோல 🙂 நீண்ட) முகவரிக் காகிதத்தைச் சுற்றி அதில் முகவரி எழுதி, ஆறு காசுகளுக்கு இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் (நான் சொல்வது 1980ம் ஆண்டு). தனியார் நிறுவனங்கள் பங்காளர்களுக்கு அனுப்பும் காலாண்டு நிலவரம், ஐக்கிய நாடுகள் செய்தித்தாள், எனப் பல விஷயங்கள் இப்படி “அச்சிடப்பட்ட விஷயங்களாக” ஆறு காசுகளுக்கு பம்பாயிலிருந்து பரமக்குடிவரை பயணிக்கும்.

* * *
அச்சிடப்பட்ட விஷயம் பற்றி எனக்குத் தெரிந்து நடந்த சுவையான சம்பவம் ஒன்று; எங்கள் ஊரில் ஒரு கஞ்சப் பிரபு, தனக்கு வரும் அதுமாதிரி அச்சிடப்பட்ட செய்தித்தாள்களை, மேலுறையிலிருந்து அப்படியே உருவி எடுப்பார். பின்னர் தான் எழுதும் கடிதத்தை அதில் சன்னமாக மடித்து நடுப்பக்கத்தில் செருகிவிடுவார். பின்னர், மீண்டும் அந்தச் செய்தித்தாள் உறைக்குள் நுழைக்கப்படும். பிறகு அவருடைய முகவரி அடித்து அதில் அவருடைய உறவினரின் பெயர் எழுதப்படும் (திருப்பியனுப்பல், Redirection). அதுமாதிரி கடிதம் கும்பகோணத்திலிருந்து பம்பாய், டெல்லி என்று அவர் உறவினர்கள் இல்லங்களுக்குப் பயணிக்கும். அதாவது பைசா காசு செலவில்லாமல் மனுஷர் உறவினர்களுக்குக் கடிதம் போடுவார். இதற்கென்றே, யு.என். நியூஸ் தொடங்கி, இரட்சிப்பு நற்செய்திவரை எல்லா இலவச அச்சிடப்பட்ட விஷயங்களுக்கும் மனுஷர் பட்டியலில் சேருவார்.

இவருடைய நடவடிக்கையில் எனக்குப் பல நாட்களாகச் சந்தேகம். ஒரு நாள் இதை எங்கள் தெரு போஸ்ட்மேன் ரெங்கையனிடம் சொல்லிவிட்டேன் (ரெங்கையனைப்பற்றி கட்டாயம் எழுதியாக வேண்டும், என்னுடைய மானசீக குருக்களுள் அவரும் ஒருவர்). ரெங்கையன் காலையில் வீடுகளுக்குத் தபால் பட்டுவாடா செய்துவிட்டு, மாலையில் சாக்கு மூட்டை ஒன்றுடன் வந்து தெருக்களில் இருக்கும் பெட்டிகளிலிருந்து கடிதங்களை அள்ளிக் கொண்டு போவார். இது போல அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது ஒருமுறை நான் சொன்னதுபோல் திருப்பியனுப்பட்ட கடிதம் கையில் சிக்கியிருக்கிறது. அதற்கேற்றபடி நானும் தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க என்னைக் கூப்பிட்டுக் காட்டினார். நான் அவரிடம் இதில் ஏதோ குழப்பம் இருக்கிறது. ஐயாவை இன்று காலையில் நான் பார்த்தேன், அவருக்கு வந்தக் கடிதம் ஏன் திருப்பியனுப்பப்பட வேண்டும் என்று கேட்க, ரெங்கையன் பேப்பரை உருவினார். உள்ளேயிருந்து கடிதம் விழுந்தது. உடனே எங்கள் இருவருக்கும் விஷயம் புரிந்து போயிற்று. அந்த ஒரு கடிதத்தை மட்டும் பெட்டியிலேயே திருப்பிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் மேலும் மூன்று கடிதங்கள் அதே ரீதியில் வர, ரெங்கையன் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, அவருடைய கடிதங்களை மாத்திரம் பெட்டியிலேயே போட்டுவிட்டுப் போய்விடுவார். மொத்தம் நான்கு கடிதங்கள் கையில் கிடைத்தவுடன் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்குப் போனார். ஐயா வீட்டில் இல்லை. அவருடைய மனைவியிடம் “சாருக்கு நான்கு ரிஜிஸ்தர் லெட்டர் வந்துருக்குங்க, போஸ்டாபீஸ்ல வந்து வாங்கிக்கச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். மனுஷர் வீட்டுக்கு வந்தவுடன் அரக்கப்பரக்க அடித்துக் கொண்டு போஸ்டாபீஸ் ஓட எல்லார் முன்னாலும் ரெங்கையன் அவரை கடிதங்களைப் பிரிக்கவைத்துக் குதறியெடுத்துவிட்டார். பரமசாதுவான ரெங்கையனின் இன்னொரு முகத்தை அன்றைக்குத்தான் பலரும் பார்த்திருக்கிறார்கள்.

ஆறு காசுக்கு கடிதச் சேவை செய்வதே இந்திய அஞ்சல்துறைக்குப் பெரிய சாதனை. அதிலும் இதுபோல கேசுகள் வேறு. எல்லாவற்றையும் சமாளித்துத்தான் அஞ்சல்துறை நடக்கிறது.

{இவ்வளவு எழுதிவிட்டு இதையும் சொல்லியாக வேண்டும் மைக்ரோஸாப்டின் பேட் கோப்பு அமைப்பு பற்றி எழுதியபொழுது சுவரில் பூசப்பட்ட சாணியைக் காசாக்க முயன்ற ஒரு கஞ்ச மகாபிரபுவைப் பற்றி எழுதியிருந்தேன். இதுவும் அதே நபரின் இன்னொரு லீலைதான்)

எச்சரிக்கை: இந்தத் தொடர் நீளக்கூடும்.