இன்றைக்கு தன்னுடைய வலைக்குறிப்பில் பத்ரி இந்திய அஞ்சல்துறை நடத்திய கருத்துத்திரட்டல் பற்றி எழுதியிருக்கிறார்.

என்றாவது ஒரு நாள் என்னுடைய வலைக்குறிப்பில் விரிவாக எழுதவேண்டும் என்று நான் நினைத்திருந்த விஷயம் இது. இந்தியாவைவிட்டு வெளியே வசிப்பதாலும், கிட்டத்தட்ட இந்தியாவிலிருந்து எனக்கு மண்ணஞ்சல்கள் எதுவும் வருவதில்லை என்பதாலும் கிட்டத்தட்ட இந்திய அஞ்சல்துறையின் பாதிப்பு என்னுடைய வாழ்க்கையில் கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டது. என்றாலும் பலவருட அனுபவங்களினால் எனக்கு இந்திய அஞ்சல்துறையின் மீது இருக்கும் எண்ணங்களைப் பற்றி எழுதியே ஆகவேண்டும். இப்பொழுது இந்தியாவில் அஞ்சலட்டைகளின் விலை என்ன என்று தெரியவில்லை? கூகிளில் தேடினால் துள்ளிவந்து விழுவது ஆச்சரியம்; அஞ்சலட்டையின் இன்றைய விலை 25 காசுகள். ஔரங்காபாத் வட்டார அஞ்சல் அலுவலகம். (மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தகவல் தளம். என்னுடைய பாராட்டுக்கள்). என் நினைவிலிருப்பது 1980ம் ஆண்டில் அஞ்சலட்டை 15 காசுகளுக்கு விற்றுவந்தது. அந்தப் இருபத்தைந்து காசு அஞ்சலட்டை கன்னியாகுமரியிலிருந்து அஸ்ஸாம் மாநிலம்வரை பயணிக்கக் கூடியது என்பதை நினைத்துப்பார்த்தால் வியப்பாக இருக்கும். என்னுடைய கணிப்பின்படி உலகில் வேறெங்கும் இந்த அளவிற்கு மலிவான அஞ்சல் சேவை கிடைக்காது. இருபத்தைந்து காசுகளுக்கு இந்தியாவில் இப்பொழுது என்ன வாங்கலாம்? சாயத் தண்ணீர் பெப்ஸி, கோக் வகையறாக்களின் தற்பொழுதைய விலை என்ன? பஸ் ஸ்டாண்ட்களில் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீரின் விலை??

கோக்-டின்னைத் திறக்கும்பொழுது தளும்பி வழியும் கோக்கிற்கு அளிக்கப்படும் காசைவிட அஞ்சலட்டை மலிவாகத்தான் இருக்கும்.

இந்த அஞ்சலட்டையை அச்சிடுவதற்கு அவர்களுக்கு என்ன செலவாகும்? அதை உள்ளூர் தபால் நிலையத்திற்கு எடுத்துவர ஆகும் செலவு எவ்வளவு? அஞ்சல் துறையில் அட்டைகளின் விற்பனை எத்தனை சதவீதம்? அதைவைத்துக் கொண்டு, ஊழியர்களின் சம்பளவீதத்தைத் கணக்கிட்டுப் பாருங்கள். பின்னர் தெருக்கள் தோறும் அஞ்சல் பெட்டி வைத்துப் பராமரிக்க ஆகும் செலவு? வால்பாறை பகுதியில் மலைமேல் இருக்கும் ஒற்றை கிராமத்திற்கு வந்து ஒரே ஒரு அஞ்சலட்டையைச் சேர்ப்பித்துவிட்டுப் போகும் ஊழியரின் சேவைக்கு எவ்வளவு கொடுக்கலாம்? இப்படி அங்குலம் அங்குலமாகச் செலவுக் கணக்குப் போட்டுப்பார்த்தால் அஞ்சலட்டையின் விஸ்வரூபம் புரியும்.

இ.அ.து பற்றி தொடர்ந்து எழுத உத்தேசம்.