இன்றைக்கு பிபிஸி் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்து அங்கேயே தங்கி வேலைபார்க்கும் வெளிநாட்டவர் பற்றிய செய்தியன்றை வெளியிட்டிருக்கிறது.

இது ஓரளவுக்கு நான் எதிர்பார்த்ததுதான். இந்தியா அடிக்கடி சென்று வரும் என்னுடைய ஸ்லாவேனிய நண்பன் பிரிமோஷ் (Primoz Kerkoc) அங்கிருக்கும் வசதிகளைப் பற்றி புலம்பித் தீர்த்துவிடுவான். இந்தியாவில் இருக்கும் என்னுடைய பேராசிரியருக்கு காரோட்டி இருப்பது அவனுக்கு பெரும் ஆச்சரியம், (இங்கே நோபல் பரிசு பெற்றவர் பல்கலைக்கழக வளாகத்தில் கார் நிறுத்த இடமில்லாமல் சுற்றிச் சுற்றி வந்ததாகச் சொல்லி ஒரு கூட்டத்திற்குத் தாமதமாக வந்தார்). அதேபோல என் பேராசிரியர் வீட்டில் சமையலுக்கு ஒருத்தி, காவலுக்கு இரவில் ஒரு கூர்க்கா போன்ற “மஹரஜா” வசதிகள் பல ஐரோப்பிய, அமெரிக்கர்களின் புருவங்களை உயர்த்துகின்றன. இவர்களை மெதுவாக மீண்டும் வரவிட்டு இவர்களுக்கு சமைத்துப் போட்டு, கழிவறை சுத்தம் செய்து இன்னொரு (நிழல்) காலணியாதிக்கத்திற்குத் தயாராகிறோமா?

என்னுடைய கவலை, இவர்களை இந்திய நிறுவனங்கள் நேர்மையான முறையில் வேலைக்கு அமர்த்துகின்றனவா? இவர்களுக்கு வேலைக்கான விசா உண்டா? அல்லது வெறும் பயணிகள் விசாவில் தங்கி இந்தியர்களின் வேலைகளைப் பறித்துக் கொள்கிறார்களா? நான் இங்கே வேலைக்கு வந்த பொழுது ஒண்டாரியோ மாகாண மக்கள் அபிவிருத்திக் கழகம் என்னுடைய படிப்பு, தகுதிகள் போன்றவற்றைச் சரிபார்த்து, இந்த வேலைக்கு என்னை எடுப்பதன் மூலம் இங்கிருக்கும் குடிமக்கள், குடிவரவாளர்கள் (Immigrants) போன்றவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படவில்லை என்று சான்றிதழ் வழங்கியபிறகே கனேடிய அரசு எனக்கு விசா வழங்கியது. இதற்கான நடைமுறைகள் கனடாவில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்ற நடைமுறைகள் தெளிவாக இந்தியாவில் வரையறுக்கப்பட்டிருக்கின்றனவா? இல்லை என்றால் உடனடியாக இதைச் செய்தாக வேண்டும். (உதாரணமாக பிரெஞ்சு மொழியில் ஆவணங்கள், பயணர் கையேடுகள் எழுத பிரஞ்சு நாட்டவர் தேவையில்லை, பாண்டிச்சேரியில் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கட்டாயம் கிடைப்பார்கள்). இவர்களது வேலை வாய்ப்பை யாரும் சிதைக்கக் கூடாது.

நடப்பு விபரங்களைக் கேள்விப்படும் பொழுது ராஜா விட்டுக் கன்னுக்குட்டியாக இருக்கும் மென்கலன் துறை இப்பொழுது பல சட்டங்களை மிதித்துத் துள்ளித் திரிகிறது.