விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உண்டு.

ஆஈன மழைபொழிய இல்லம்வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமைசாவ
மாஈரம் போகுதென்று விதைகொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ளக்
கோவேந்தர் உழுதுண்ட கடமைகேட்கக்
குருக்கள்வந்து தட்சணைக்குக் குறுக்கேநிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க
பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

மிகவும் புத்திசாலித்தனமான பாடல் இது. சில உண்மையான கஷ்டங்கள் (இல்லம் வீழ்தல், பெண்டாட்டி உடம்பு சுகமில்லாமல் இருத்தல், கடன்காரன் தொந்தரவு என்று). மறுபுறம் சில ஆனந்தக் கண்ணீர் சமாச்சாரங்கள் (பசு கன்றுபோடுதல், மன்னர் நிலவரி கேட்டல், கவிஞரிடம் பாடல் பெறுதல் என்று).

கிட்டத்தட்ட இதே நிலைதான் எனக்கும். சில தொந்தரவுகள், பல நல்ல சமாச்சாரங்கள். இரண்டு மாத இடைவெளியில் நடந்து முடிந்த முக்கியமான காரியம் சொந்தவீடு வாங்குவது. ஆமாம், வாழ்க்கையில் முதல் முறையாக “சொந்தவீட்டில்” குடித்தனம் நடத்துகிறேன். (என்னுடைய அப்பா காலம் முழுவதும் வாடகைவீடுதான். அண்ணன்மார்கள் வாங்கியிருந்தாலும் அதெல்லாம் ‘அண்ணன் வீடுதானே’?).

சொந்தம் என்பது மேற்கோள் குறிக்குள்ளாதாகத்தான். உண்மையில் கால்பங்கு பணத்தைச் சேமிப்பிலிருந்து கட்டிவிட்டு, அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கு உத்தரவாதமான கடன்காரனாக இருப்பது என்ற சங்கல்பத்துடன்தான் இங்கே காலடி எடுத்துவைத்திருக்கிறேன்.

* * *

மறுபுறம். tamillinux.org இணையதளத்தின் பதிவுரிமை காலாவதியாகிவிட்டது. இதன் முதன்மைப் பதிவு என்னுடைய நண்பர் சிங்கை மணியம் (இவர் உத்தமம் அமைப்பில் பன்மொழி தளப்பெயராக்கக் குழுவில் தலைமை வகிப்பவர். ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளிலும் யுனிகோட் வாயிலாக இணைய முகவரிகள் இயல்மொழிகளிலேயே அமைய முயற்சிகள் மேற்கோள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் தமிழுக்கான இடத்தை W3C குழுவினரிடம் பெறுவதில் நண்பர் மணியம் உறுதுணையாக இருக்கிறார்). மணியத்தால் பதிவு செய்யப்பட்டு அதன் செயலுரிமை என்னிடம் இருந்தது. இப்பொழுது காலாவதியான நிலையில் இதைத் திரும்பப் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

செயலிழந்து போன முதல் சில நாட்களில் இதை இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் சரிசெய்துவிடலாம் என்றிருந்தேன். அதனால்தான் இதைப் பெரிதாக வெளியில் சொல்லவேண்டாம், மாறுதல்கள் வேண்டாம் என்றிருந்தேன். ஆனால் இப்பொழுது இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பதிவுரிமையை மீளப்பெற முடியவில்லை.

இதனால் என்னுடைய வழங்கிக்கு வேற்று முகவரியொன்றை (domesticatedonion.net) dyndns.org வழியாகப் பெற்று மீள வந்திருக்கிறேன். இதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. பழைய பதிவுகளின் படங்கள், கோப்பு முகவரிகள் இன்னும் தமிழ்லினக்ஸ்.ஆர்க்-கிலேயே இருப்பதால் படங்கள் வெற்றிடங்களாக…

* * *

இடையில் என்னுடைய சேவை வழங்கு நிறுவனம் Rogers, யாகூவுடன் ஒப்பந்தித்தது. இதனால் எனக்கு வரும் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் யாகூவின் வழியே திருப்பிவிடப்பட்டன. அங்கே பல அஞ்சல்கள் எரிதங்களாகக் குப்பைக்குப் போயின. எனவே இந்த நாட்களில் என்னுடைய நண்பர்கள் யாராவது எனக்குக் கடிதம் எழுதி என்னிடமிருந்து பதில் வரவில்லை என்றால் தயவு செய்து மன்னிக்கவும்.

* * *

அடுத்த கட்டமாக, புதுவீடு இருக்கும் இடத்தில் ரோஜர் செப்புக்கம்பி சேவை கிடையாது. இங்கே Bell Canada தொலைபேசி வழியாகக் கிடைக்கும் DSL அகலப்பாட்டைதான். பெல் கனடாவும் ரோஜர்ஸ்ம் பரம வைரிகள். ரோஜர்ஸ் யாகூவுடன் என்றால் பெல் எம்எஸ்என் (MSN) கூட்டாளி. எனவே, பழைய மின்னஞ்சல் முகவரி இப்பொழுது செயல்படுவதில்லை. புதிய மின்னஞ்சல் முகவரியை நண்பர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தர உத்தேசம்.

* * *

புதுவீடு பிரதேசத்தில், சிறியவன் வருண் – Junior KG – ஒன்றுவிட்டு ஒருநாள் முழுநேரப் பள்ளிக்குச் செல்கிறான் (டொராண்டோவில் தினமும் அரைநாள் பள்ளி). எனவே, பள்ளி செல்லும் நாளில் மாலைநேரமும், மற்ற நாளில் வேறு இடத்தில் முழுநாள் குழந்தைப் பராமரிப்பிலும் அவனை விட்டுவர வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட புலி-ஆடு-புல்லுக்கட்டு சமாச்சாரமாக, காலையில் பாரியாளை இரயில் நிலையத்தில் விட்டு, விக்ரமையும், வருணையும் பள்ளியிலோ, கு.ப.-விலோ விட்டுவிட்டு, காரை இரயில் நிலையத்தில் விட்டுவிட்டு வேலை செல்ல வேண்டும். மாலை, இதே காரியத்தை மனைவி தலைகீழாகச் செய்துமுடிப்பாள் (காரை எடுத்துக் கொள்ளுவது, குழந்தைகளைத் திரும்ப அழைத்து வருவது, பிறகு என்னை இரயில் நிலையத்தில் பொறுக்கியெடுப்பது). இது வட அமெரிக்க வாழ்வின் யதார்த்தம்.

* * *

இடையில் அலுவலில் வேலை சூடுபிடிக்கிறது. டொராண்டோ பல்கலை எங்களை வைத்துக் கொண்டு துவங்கிய சிறிய குழுவை அடுத்த வருடம் மாபெரும் உலகத்தர ஒளியியல் கழகமாக (Institute of Optics, UofT) மாற்ற எத்தனித்து வருகிறது. இதனால் பல கூடுதல் வேலைகள்.

ம்ம்.. எத்தனை நாள்தான் இப்படியே இயந்திர இயக்கத்தில் முழ்கிப் போவது. எனவே உங்களிடம் திரும்ப வந்திருக்கிறேன். இனி இயன்றவரை தொடர்ச்சியாக எழுத உத்தேசம்.

* * *