கடந்த சில மணிகளில் நடந்த நிகழ்வுகள் மிகவும் கவலையைத் தருகின்றன. இன்னொரு இயற்கைச் சீற்றம் உயிர்களைப் பறித்துள்ளது. இது கடந்த நாற்பதாண்டுகளில் நிகழ்ந்த மாபெரும் நில அதிர்வு (ரெய்க்ட்சர் அளவு கோலில் 9.0 ஆக இந்தோனேஷியாவில் அளக்கப்பட்டிருக்கிறது). இதன் தாக்கம் பல நாடுகளில் இருந்தாலும், மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவை இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை ஆகியவையே. சலிப்புடன் வேதனையில் உலகமயமாக்கல் என்ற வார்த்தையை நினைத்துக் கொள்கிறேன்.

இந்தோனேஷியாவில் நடந்த அடுத்த இரண்டு மணிக்குள்ளாகத் தமிழகத்திலும் இலங்கையிலும் ட்சூனாமியால் அழிவு ஏற்ப்பட்டிருக்கிறது. கொஞ்சம் முன்னெச்சரிக்கை இருந்தால் இங்கெல்லாம் பல சாவுகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால் ட்சூனாமியைப் பொருத்தவரை முன்னெச்சரிக்கை என்பது அளவுகடந்த தீர்க்கதரிசனம் என்றுதான் கொள்ள வேண்டும். இந்தியா, இலங்கை போன்ற வளரும் நாடுகளுக்கு அழிவுத் தயார்நிலைக்குப் பொருளாதாரம் இடங்கொடுப்பதில்லை. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கடலை நம்பி வாழும் இலங்கை, இந்திய மீனவர்கள். சென்னையில் கரையோர நடைக்குச் சென்றவர்களும், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களும் மூழகடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் படிக்கும்பொழுது வேதனையாக இருக்கிறது. என்ன செய்வது? பசிபிக் பெருங்கடலோர நாடுகளைப் போல இந்தியப் பெருங்கடலோர நாடுகளில் ட்சூனாமி பற்றிய முன்னனுபவம் கிடையாது. இது குறித்த தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும் நாடுகள் குழுமத்தில் இனிமேல்தான் இந்தியா உறுப்பினராகப் போகிறது.

ஜப்பானில் நான் வசித்திருந்த காலங்களில் ட்சூனாமி வருகிறது என்ற முன்னெச்சரிக்கைகள் நிறைய வரும். அப்பொழுது அதற்குத் தக்கபடி உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒருவிதத்தில் ஜப்பானைப் போன்ற அழிவுக்கு அண்மையில் வாழும் நாடு எதுவுமில்லை எனலாம், நிலநடுக்கம், எரிமலை, ட்சூனாமி, புயல், வெள்ளம், பனிப்புயல் என்று அந்த நாட்டிற்கு உள்ள இயற்கைச் சாபக்கேடுபோல வேறெங்கும் கிடையாது. ஆனால் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் திறமையும் துணிவும் அவர்களுக்கு இருக்கிறது. பேரழிவுத் தயார் நிலைகளில் ஜப்பான் உலகுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

இங்கே நான் வாராந்திர அறிவியல் நிகழ்ச்சியில் பங்குபெறும் கனேடியத் தமிழ் வானொலி இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர நிதி திரட்டுகிறார்கள். இன்றைக்கு நாள் முழுவதும் மற்ற நிகழ்ச்சிகளையும் கிறிஸ்துமஸ் தொடர்பான கொண்டாட்டங்களையும் கலைத்துவிட்டு நிதி திரட்டுவதில் மும்முரமாயிருக்கிறார்கள். வட அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்கள் க.த.வா. இணைய தளத்தின் மூலம் நிதியுதவி செய்யலாம். இந்தியாவிலிருந்து மூன்று போர் விமானங்களில் மருத்துவர்களும் மருந்துகளும் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன என்ற செய்தி கொஞ்சம் நம்பிக்கையைத் தருகிறது. இலங்கையில் பாதிக்கப்பட்ட இடங்களில் பல புலிகளின் ஆளுகையில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த நேரத்தில் பகையை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு மனிதாபிமானத்தை முன்னிருத்துவார்கள் என்று நம்புகிறேன்.