ஆந்திரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நாயுடுகாருவின் தெலுகுதேசம் படுதோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸின் கூட்டணி 226 இடங்களைப் பெற தெலுகுதேசம்-பிஜேபி கூட்டணி 49 இடங்களையே பெற்றிருக்கிறது. தெலுகு தேசத்தின் வரலாற்றிலேயே இது மோசமான தோல்வி.

வெளிநாட்டில் வசிக்கும் என்னைப் போன்றவனுக்கு மிகவும் அதிர்ச்சி தரும் முடிவு இது. காரணம், நாயுடு வந்தபின் ஆந்திராவில் பாலும் தேனுமாக ஓடுகிறது என்றும் அந்தப் பாலாற்றின் தேனாற்றின் மீது அழகிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு ஹைதராபாத் மிளிர்கிறது என்றும் பத்திரிக்கைகள் எழுதித் தள்ளினார்கள். இவை அனைத்தும் பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஏன்? ஏன்?? பொதுவாக இதுபோன்ற அலைகளுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும்; மக்களிடமிருந்து ஆளும் அரசு தனிமைப்பட்டுப் போதல் (அல்லது ஆளும் கட்சி வெற்றிபெற்றால் மக்களிடம் இருக்கும் நெருக்கம்). எந்தவிதமான நெருக்கடிகளையும், பிரச்சனைகளையும் மக்கள் மன்னித்துவிடக்கூடும். ஆனால் தமக்கு மதிப்பில்லை என்று உணரத் தொடங்கினால் சீறியெழுந்துத் தூக்கியெறிவார்கள். இது ஜனநாயகத்தின் அடிப்படைப் பாடம்.

தொழில்நுட்ப உலகில் எதிர்பாராத முன்னேற்றம் கண்டுவரும் மாநிலம் என்ற வகையில் ஆந்திராவை உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. அந்தத் தொழில்நுட்ப முனைப்புதான் நாயுடுகாருவுக்கு எதிரியாக மாறிவிட்டிருக்கிறது. பொதுவில் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போயிருக்கிறார் நாயுடு என்பதைத்தான் இந்த முடிவுகள் சுட்டுகின்றன.

ஐதராபாத்தை மிளிரவிட்ட நாயுடு பிற பகுதிகளை வறட்சியில் மூழ்கடித்திருக்கிறார். உடம்பின் ஒரு பகுதிமாத்திரம் வளர்ந்தால் அதற்குப் பெயர் வளர்ச்சியல்ல; வீக்கம். அந்த வீக்கத்திற்கு இரண்டு முடிவுகள்தான் உண்டு. ஒன்று உடல் சிதைந்து போதல். இரண்டாவது மருத்துவர் தலையிட்டு அறுவை சிகிச்சை செய்தல். இரண்டாவதன் முதல் கட்டம் நடந்தேறியிருக்கிறது. வருகின்ற காங்கிரஸ் அரசாங்கம் இதை உணர்ந்து செயல்படுவது நல்லது. நாயுடு விமானத்தில் ஏறி சியாட்டில் பறப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு அவ்வப்பொழுது ராயலசீமாவுக்கும், தெலங்கானாவுக்கும் போய் மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்திருக்கவேண்டும். கணினி வழி மனுக்களைப் பெற்றுக்கொள்வது பத்திரிக்கைகளுக்கு வேண்டுமானால் புரட்சியாகத் தெரியலாம், மக்களுக்கு வேண்டியதெல்லாம். புழுதியில் இறங்கி வேலைசெய்வதே.

புழுதி நிறையவே இருந்திருக்கிறது ஆந்திரத்தில். தொடர்ச்சியான வறண்ட கால நிலை, நக்ஸலைட் பிரச்சனை, தெலுங்கானா பிரிவுக் கொள்கை என்று இதையெல்லாம் நேரடியாகக் களத்தில் இறங்கி எதிர்கொள்ளாமல் மைக்ரோஸாப்டுடனும் ஆரக்கிளுடனும் கைகுலுக்கிக் கொண்டிருந்ததால் வந்த வினை இது.

* * *
rajasekhar_reddy.png வருகின்ற காங்கிரஸ் அரசாங்கத்திடமும் பெரியதாக ஒன்றும் எதிர்பார்க்க முடியாது.

தெலங்கானா பிரிவை வற்புறுத்தும் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களிலேயே இந்தத் தலைவலி தொடங்கக் கூடும். தனக்கிருக்கும் அறுதிப் பெரும்பாண்மையின் காரணமாக தெலங்கானா ராஷ்ட்ர ஸமிதிக் கட்சியைப் புறம்தள்ளினால் அவர்கள் தொடர்ச்சியாகப் பிரச்சனைகளை கொடுப்பார்கள். அவர்களை பிற விஷயங்களில் ஆசைகாட்டி அரவணைத்துக் கொண்டால், அதற்குக் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும். அந்த நிலையில் காங்கிரஸ் அரசு சில தில்லுமுல்லுக்களைச் செய்தாவது அவர்களைச் சரிகட்ட வேண்டியிருக்கலாம். எந்த வகையிலும் அவர்களின் இருப்பு காலில் தைத்த முள்தான். பிடுங்கினால் இரத்தம் வரும், வைத்திருந்தால் நொண்ட வேண்டியிருக்கும்.

டைம்ஸ் ஆ·à®ªà¯ இந்தியாவில் வந்திருக்கும் செய்தி “ம் ஆரம்பிச்சுட்டுடாங்கடா” என்று அலுத்துக் கொள்ளவைக்கிறது. ஆந்திர முதல்வர், தெலங்கானா பிரிவு எல்லாவற்றையும் பற்றி சோனியா அம்மா முடிவெடுப்பார்களாம் . வரவிருக்கும் முதல்வர் ராஜசேகர் ரெட்டி திருவாய் மொழிந்திருக்கிறார். அப்புறம் இம்மாம் பெரிய மீசையுடன் “நுவ்வு எந்துக்குடா?” என்று கேட்கத் தோன்றுகிறது. இப்படி அபரிமிதமான வெற்றியிலும் மேலிடத்தில் கைகட்டி நிற்கும் புத்தி போகாதவரை காங்கிரஸ் உருப்படாது.

* * *

இறுதியாக, என்னுடைய அடிப்படை ஆர்வக் கோளாறு காரணமான இன்னொரு எச்சரிக்கை; பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடும்பொழுது பலவிதமான விஷயங்களில் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் மைக்ரோஸாப்ட், ஆரக்கிள் இங்கெல்லாம் நாயுடுகாரு என்னென்ன சமரசங்களைச் செய்துகொண்டார் என்பது விரைவில் வெளிவரத் தொடங்கும். யாருக்கு எப்படியோ, இந்த நிறுவனங்களுக்கெல்லாம் இது பெரிய தலைவலிதான்.

இவற்றுடனான ஒப்பந்தங்களில் ஆந்திரத்தின் நன்மை பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்ற காரணம் காட்டி காங்கிரஸ் அரசாங்கம் நிறுவனங்களுக்குத் சங்கடங்கள் அளிக்கக் கூடும். அந்த நிலையில் சைபர் ஆந்திராவில் இன்னொரு டாட்காம் குமிழி உடைய வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்க்க, வரவிருக்கும் மத்திய மாநில அரசாங்கங்கள் ஏகப்பட்ட சமரசங்களை செய்யப்போக எல்லாம் அசிங்கமாக வெளிவரக்கூடும்.

அடிப்படைத் தொழில்நுட்ப வளர்ச்சியில்லாமல் பன்னாட்டு முதலைகளுடன் கொள்ளும் உறவு எந்தவிதமான அழிவைத் தரக்கூடும் என்பதைப் பற்றிய பாடங்களை வரும் நாட்களில் ஆந்திரா நமக்குக் (இன்னும் ஒரு முறை) கற்றுக் கொடுக்கக் கூடும்.