மைக்ரோஸாப்ட் உலகம் பெரியது என்று நமக்குத் தெரியும், உலகில் 90% மேசைக்கணினிகள் மைக்ரோஸாப்ட் இயக்குதளங்களால் செயல்படுகின்றன. ஆனால் இனி மைக்ரோஸாப்ட்தான் உலகம் என்றாக்கும் முயற்சியில் முதல் கட்டம் நடந்தேறியிருக்கிறது.

சென்ற வாரம் சாம்ஸங்க் நிறுவனம் கொரியாவில் தன்னுடைய புதிய கணினிகளை அறிமுகப்படுத்தியது – ஆச்சரியமில்லை. அந்தக் கணினிகளில் பீனிக்ஸ் பயஸ் பயன்படுத்தப்படுகிறது – ஆச்சரியமில்லை (பீனிக்ஸ் மிகவும் பிரபலமான பயஸ் நிறுவனம்), சாம்ஸங்கின் கணினிகளில் மைக்ரோஸாப்ட் இயக்குதளம் இருக்கும் – ஆச்சரியமில்லை. ஆனால் அதில் இன்றும், என்றும் மைக்ரோசாப்ட் மாத்திரம்தான் இருக்கமுடியும் – இது புதியது.

மைக்ரோஸாப்ட் நம்பகக் கணிப்பு என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இது எப்படி செயல்படவிருக்கிறது என்பதைப் பற்றி விரிவாக இன்னொரு சமயத்தில் எழுதுகிறேன் (இப்பொழுது இருக்கும் வேலை நெருக்கடியில் இதற்கு நேரமில்லை). நம்பகக் கணிப்பின் முக்கிய இலக்கு; நகலெடுக்கப்பட்ட மென்கலன், டிவிடி, இசைக்கோப்புகள் போன்றவற்றைத் தடுப்பது. இதற்குத் தேவையான தொழில்நுட்பம் டிஜிட்டல் உரிமை நிர்வாகம் (Digital Rights Management, DRM) என்பது. இது நாள்வரை சில மென்கலன் தயாரிப்பாளர்கள் (உதாரணம், மேக்ரோமீடியா) தங்கள் மென்கலனில் இந்த உரிமை நிர்வாகக் கட்டளைத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இப்பொழுது அடிப்படையிலேயே உரிமை நிர்வாகத்தைப் பயன்படுத்தத் தேவையான பயஸை பீனிக்ஸ் உற்பத்தி செய்திருக்கிறது. இதுதான் சாம்ஸங்கின் கணினிகளில் பொருத்தப்பட்டிருக்கிறது . இதன் சொல்லப்பட்ட பயன்; வைரஸ், எரிதம் (spam) பெருகிப்போன உலகில் கணினியை மீட்டெடுக்கும் முயற்சி; இதன் அடிப்படையில் கணினி துவக்கத்தில் முதலில் இயங்கும் பயஸ்தான் கணினியின் இயக்குதளம் (மென்கலன்) – வன்கலன் இரண்டுக்கும் பாலமாக இருக்கிறது. இந்த நிலையில் தனிப்பட்ட சில நிறுவனங்கள் தங்களால் அனுமதிக்கப்படாதவற்றை கணினியில் இயங்காமல் தடுக்க முடியும்.

உதாரணமாக, இப்பொழுது மைக்ரோஸாப்ட் இணைக்கப்பட்டு வரும் கணினிகளை வாங்கி, வின்டோஸைக் கழற்றி விட்டுவிட்டு லினக்ஸ் நிறுவி இயக்கமுடிகிறது, அல்லது வின்டோஸ் கூடவே, இரண்டாவது இயக்குதளமாக லினக்ஸையும் சேர்த்துக்கொள்ள முடிகிறது. இனிமேல் பீனிக்ஸ் பயஸ் உள்ள கணினிகளில் வின்டோஸ் இல்லையென்றால் அது கடினவட்டில் பிழை இருப்பதாகச் சொல்லி உங்கள் தெரிவு இல்லாமலேயே அதில் இருக்கும் தரவுகளை அழிக்க முடியும்.

இன்னும் சொல்லப்போனால், மைக்ரோஸாப்ட்டின் அதி நவீன இயக்குதளத்தை அதிகவிலை கொடுத்து வாங்க உங்களைக் கட்டுப்படுத்த முடியும், அப்படி இல்லாது போனால் கணினியின் இயக்கம் நிறுத்தப்படும்.

வாருங்கள் மைக்ரோஸாப்ட்டின் ஒற்றைப்படை உன்னத உலகிற்கு.