எச்சரிக்கை: இந்தக் கட்டுரை பதின்மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது.

தமிழில் மிகவும் குறைவாக எழுதப்பட்ட/பேசப்படும் விஷயங்களுள் ஒன்று ஆணுறைகள். இந்தியா அவசரநிலையில் இருந்த எழுபதுகளில் சஞ்சய்காந்தியின் வற்புறுத்தலில் அகில இந்திய வானொலி இரவு ஒன்பது மணிக்குத் தவறாமல் நிரோத் உபயோகியுங்கள் என்று கணக்கு வாத்தியாரைப்போன்ற குரலில் சொல்ல ஆரம்பித்து இப்பொழுது கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகப்போகிறது. குடும்பக் கட்டுப்பாடும், எய்ட்ஸ் வியாதியுமான இந்த நாட்களிலும் இன்னும் ஆணுறைகளைப் பற்றி பொதுவில் யாரும் பேசுவதில்லை. சராசரி இந்தியனின் தினசரி வாழ்க்கையை அதிகமாகப் பாதிக்காத உலகளாவிய சூடேற்றம், கணினி வைரஸ் இத்யாதிகளைப் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள்கூட ஆணுறைகளைக் குறித்து மௌனம் சாதிப்பது புரியாத புதிராக இருக்கிறது. சிகரெட் போன்ற உயிரைக்குடிக்கும் வஸ்துக்களை வாங்கவும் பொதுவில் பயன்படுத்தவும் கூச்சமும் தயக்கமும் காட்டாத சமுதாயம், நோயிலிருந்து காக்கக்கூடிய, பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சமூகத்திற்குப் பயனுள்ள ஆணுறைகளை வாங்கத் தயக்கம் காட்டுவது சோகமான விஷயம்தானே. இரண்டு கைகளையும் பயன்படுத்த முடியாதபடி சிலுவையில் ஆணியடித்துக் கொல்லப்பட்ட ஏசு பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆணுறைகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. கி.மு ஆயிரம் ஆண்டுகளில் மெல்லிய துணிகளை சுற்றிக்கொள்வதன்மூலம் நோய்களைத் தடுக்கமுடியுமா என்று எகிப்தியர்கள் முயற்சி செய்துபார்த்திருக்கிறார்கள். தொடந்து பிரெஞ்சுக் குகை ஓவியங்களிலும், ரோம ஓவியங்களிலும் ஆணுறைகளைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. சீனர்கள் பட்டுத்துணிகளையும் மெல்லிய காகிதங்களையும் ஒருவித எண்ணெய்களில் தோய்த்து தங்கள் ஆணுறுப்புகளின்மீது சுற்றிக்கொண்டார்கள் (சை! இந்த இடத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமால் ‘ஐயோ பத்திக்கிச்சு’ என்

ற பாட்டு நினைவிற்கு வருகிறது). ஜப்பானியர்கள் ஆமையோட்டினுள்ளே இருக்கும் மெல்லிய சவ்வுகளைப் பயன்படுதினார்கள். இத்தாலியர்கள் இந்த விலங்குச் சவ்வுகளை சில மூலிகைச் சாறுகளில் தோய்த்துப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் பயன் அதிகரிப்பதைக் கண்டார்கள். தற்காலத்தில் உலக ஆணுறை உற்பத்தியில் இந்தியா முக்கிய இடத்தை வகித்தாலும் இந்தியாவில் இவற்றின் வரலாறு சரியானமுறையில் பதிவு செய்யப்படவில்லை.

தன்னுடைய மூவாயிரம் ஆண்டு வரலாற்றில் ஆணுறை பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கின்றது. பல முறை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைகள் தொடங்கி, வைதீக இஸ்லாமியர் வாரியாக, ஆயுதம்தாங்கும் இந்து பஜ்ரங்தள் வரை ஆணுறை கடவுளுக்கு எதிரானதாகவே அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. இருந்தபொழுதும் தொடர்ந்தும் ஆணுறைகளின் புழக்கம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணங்களாக இரண்டைக் கூறலாம்; தொடர்ந்தும் முன்னேறிவரும் பாலிமர் தொழில்நுட்பம், அந்தப் பாலிமர் தொழில்நுட்பத்தைத் தன்னுடைய சந்தோஷத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வதில் மனிதனுக்குள்ள அடிப்படை ஆர்வம்.

முதலில் ஆணுறை என்பது என்ன? செயற்கை பாலிமர்களால் ஆன, அழுத்தத்திற்கு உள்ளாகும்பொழுது தன் சமநிலைப் பரப்பிலிருந்து பலநூறு மடங்குகள் விரியும் தன்மைகொண்ட சவ்வுபோன்ற உறை என்று தற்காலத்தில் அறியப்பட்டாலும், ஆண் உறுப்புகளின் மீது சுற்றப்படும் துணி, விலங்குச் சவ்வுகள், செயற்கை பாலிமர் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி அடிப்படைத் தொழில்நுட்பம் வேறுபட்டாலும் இவற்றின் இலக்கு ஒன்றுதான் திடீர்ப்பெருக்கத்தால் தோன்றும் பல மில்லியன் விந்துக்களின் இயக்கத்தை தம்முள்ளே கட்டுப்படுத்தி நிறுத்திவைப்பது, அதன் மூலம் 1. அந்த விந்துக்களை உண்டாக்கும் செயலில் துணையாக இருக்கும் இணையை அடையவிடாமல் விந்துக்களைத் தடுப்பது, 2. இன்னபிற உயிரியல் ரீதியான திரவங்களின் பரிமாற்றத்தைத் தடுப்பதன்மூலம் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி பால்வினை நோய்களின் பரவலைத் தடுப்பது. முந்தைய விளைவு கருத்தரிப்பைக் கட்டுப்படுத்துகிறது, பின்னது உயிரழிவைத் தடுக்கிறது. இப்படி படைத்தல், காத்தல், அழித்தல், எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் தர்க்க ரீதியாவும், தத்துவரீதியாகவும் ஆணுறைகள் அவற்றுக்குரிய இடத்தைப் பெறவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

தற்காலத் தொழில்நுட்பத்தில் ஆணுறைகள் பலவிதங்களில் உருவாக்கப்படுகின்றன.

சாதாரணம் – அவ்வளவுதான். பயன்கடந்த பிற விஷயங்களுக்கு இவற்றில் இடமில்லை.

தடிப்பானவை – அசாதாரண நுழைவுகளுக்கான இவை பலவித தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே வெளிவருகின்றன. ஆதிகாலங்களில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட இந்தியாவின் நிரோத் இந்த வகையில் அடங்காது.

உயவு குறைக்கப்பட்டவை – எளிதான பயனுக்கான இவற்றில் பலவிதமான எண்ணெய் கலவைகள் பூசப்படும். இவற்றில் சில தற்செயலாக சவ்வூடுபரவும் திரவங்களில் இருக்கும் விந்துக்களை அழிக்கவல்லவை.

வரியோடிவை – முன்னதற்கு மாறாக, உராய்வை அதிகரிக்க சில ஆணுறைகளில் முழு நீளத்திற்கோ அல்லது நுனியில் ஒன்றிரண்டு சென்டிமீட்டர்களுக்கோ தடிப்பான வரிபோன்ற அமைப்பில் உருவாக்கப்படுகின்றன.

புள்ளி போட்டவை – அ·à®¤à¯‡.

நிறமானவை – பொதுவில் வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்துகொண்டிருந்த ஆணுறைகள் தற்பொழுது பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன. இருட்டில் நின்றொளிரும் இவை ஆர்வத்தைத் தூண்ட உதவுகின்றன.

வாசனையுள்ளவை – மேற்படி வகையில் அந்த நேரத்தில் கண்களை மூடிக்கொள்பவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்படுபவை.

சுவையுள்ளவை – இன்னும் கொஞ்சம் அபத்தம் கூடுதல்.

ஒவ்வாமையற்றவை – பலருக்கும் இயற்கை மற்றும் செயற்கை இரப்பர் தயாரிப்புகள் அரிப்பை உண்டாக்கக் கூடும். இப்படிப்பட்டவர்களுக்கு சிறப்பான திரவக்கலவைகளில் இடப்பட்டு பூச்சுகளுடன் தயாரிக்கப்படுபவை உதவக்கூடும்

இன்னும் அச்சிடப்பட்ட ஆணுறைகள், கார்ட்டூன்கள் வரையப்பட்டவை, இத்யாதிகளும் சந்தையில் கிடைப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படி பல விதங்களில் தயாரிக்கப்பட்டாலும் இவற்றின் அடிப்படை பயனாக வரையறுக்கப்பட்ட திரவத்தடுப்பை உறுதிசெய்யவும், அடிப்படை குணங்களான நீள்தன்மை, விரிதன்மை, கிழியாமை போன்றவற்றை உறுதி செய்யவும் பல சோதனைகளும் தரக்கட்டுப்பாடுகளும் உண்டு. உலகப் பொது தர நிர்ணய நிறுவனம் (International Organization for Standardization) ISO 4074:2002 ஆணுறைகளின் தரத்தை நிர்ணயம் செய்யத் தேவையான சோதனைகளைப் பரிந்துரைக்கிறது. இவற்றையே இன்னும் கொஞ்சம் கடுமையாக்கி ஐரோப்பிய தரநிர்ணயம் (EN 600) பரிந்துரைக்கிறது.

சாதாரணமாகப் பொதுவில் பேசத்தயங்கும் நம் சமூகத்தில் ஆணுறைகளை கடையில் சென்று வாங்குவது மிகவும் சிக்கலான காரியமாக அறியப்படுகிறது. பலரும் கடைகளில் சென்று பொருளின் பெயரைக்கூறாமல் தயாரிப்பாளரின் பெயரைச் சொல்லியே வாங்கிப் போவதாக மருந்துக்கடை வைத்திருக்கும் என் நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார். (சிகரெட் போன்றவற்றிலும் இப்படித்தான் என்றாலும் இந்தப் பழக்கத்தின் அடிப்படிக் காரணங்கள் முற்றிலும் வேறானவை).

நீடித்து உழைக்கக்கூடியது, நன்றாக விரியக்கூடியது என்றெல்லாம் நீட்டிக்கொண்டு போகாமல் சுருக்கமாக ‘கேஎஸ்’ என்ற இரண்டே எழுத்துக்களின் மூலம் எளிதில் உணர்த்துவதில் வெற்றிகண்டது அந்த நிறுவனத்தின் மாபெரும் வியாபார உத்தி என்று சொல்கிறார்கள். மருந்துக்கடையில் பலவருடங்களாக வேலைசெய்யும் என்னுடைய நண்பர் தயக்கத்துடன் ஆணுறை வாங்க வருபவர்களுக்குக் கூறும் அறிவுரைகள்;

1. நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையுமாக கடைக்கு வரவும்

2. குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று பொருள்களை ஆணுறைகளுடன் சேர்த்து வாங்குவது உசிதம். அவையும் மாத்திரைகளாகவும் மருந்துகளாகவும் இருந்தால் நல்லது. “சார் பத்து பரால்கான், முப்பது ஆஸ்ப்ரின், பதினைஞ்சு ஜெல்லுசில், இருபது ட்யூரெக்ஸ், பத்து டிஸ்பிரின், இருபது டயானில்” என்று சொல்வது மிகவும் எளிது.

3. அப்படிச் சமாச்சாரத்தைக் குறிப்பிடும்பொழுது எந்தத் தயக்கமும் இல்லாமல் நேராக கடைக்காரரின் முகத்தைப் பார்த்துப் பெயரைத் தெளிவாகச் சொல்லவும். இது திரும்பத்திரும்ப கடைக்காரர் அதைக் கேட்டு உறுதிசெய்துகொள்வதைத் தவிர்க்க உதவும்.

4. இப்படிப் பெயர் சொல்லி வாங்கத் தைரியமில்லாதவர்கள், ஒரு சீட்டில் எழுதிக் கொண்டுவரலாம் “மைசூர் சாண்டல் சோப் – 1, க்ளியெரஸில் க்ரீம் – 1, காமசூத்ரா – 10, க்ளாக்ஸ்கோ பிஸ்கெட் – 1” ரீதியில் தொந்தரவில்லாத குடும்பச் சாமன்களுடன் கூடச் சேர்த்துக்கொள்ளலாம்.

5. முதன் முறையாக வாங்கவரும் பையன்களுக்கு – ஓரளவுக்கு முகத்தில் மீசையுடன் வருவது நல்லது. குறைந்த பட்சம் ஏதாவது கேள்வி கேட்டால் “எங்க அம்மாதாங்க வாங்கிக்கிட்டு வரச்சொன்னாங்க” என்று புலம்பாமல் இருக்கும் தைரியத்துடன் வரவேண்டும்.

வாங்கியவுடன் வீட்டுக்கு வந்து கீழ்க்கண்ட விபரங்களைச் சோதிக்கவும், 1. தயாரிப்பு தேதி, 2, காலாவதி தேதி, 3. தரநிர்ணயம் செய்யப்பட்டதா? 4. அதனுடைய உறை சேதமில்லாமல் இருக்கிறதா?

ஆணுறைகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று இங்கே சொல்லிக்கொடுக்க முயற்சி செய்யப்போவதில்லை. (சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்று சொன்னதில் இதற்கும் இடமுண்டு). ஆதிகாலங்களில் கிராம சேவகர்கள் நிரோத் பயன்பாட்டைல் கட்டைவிரலைக் காட்டி விளக்கியதாகச் சொல்வார்கள். மக்களும் “ஆஹா, இவ்வளவு சுலபமாக இருக்கிறதே என்று கட்டைவிரலைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவின் ஜனத்தொகை இன்னும் ஒரு சில இலட்சங்கள் கூடிப்போனது. எனவே, என்னச் செய்யக்கூடாது என்பதைப் பற்றி கொஞ்சம்;

1. பாதி காரியத்திலிருந்து இவற்றைப் பயன்படுத்தி பிரயோசனமில்லை. வருமுன் காப்பதே நலம்.

2. உங்களைப் போலல்ல ஆணுறைகள், ஒருதடவைதான் அவற்றின் பயன். இவற்றைத் துவைத்தோ, துடைத்தோ, திருப்பிப் போட்டோ பயன்படுத்த முடியாது. அப்படிச் செய்யமுயற்சி செய்தால் மொட்டைமாடியில் கொடியில் காயப்போடாதீர்கள். காக்கைகளுக்கு இவற்றின்மீது ஆர்வம் அதிகம்.

3. கூடுமானவரை இடையில் தங்கும் காற்றைத் தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள். பன்னாட்டுத் தரக்கட்டுப்பாட்டு மையங்கள் இவற்றின் முக்கிய பிழைகள் காற்து அழுத்தத்தாலே உருவாகின்றன என்று சொல்கிறார்கள். (காற்றடைத்த பையை இகழ்ந்த சித்தர்களையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்).

காலம் காலமாக ஆணுறைகளுக்குப் பிற உபயோகங்களும் கண்டறியப்பட்டிருக்கின்றன;

1. நீர் குண்டுகள் – மேற்கத்திய நாடுகளில் இளைஞர்கள் பங்குபெறும் போராட்டங்களில் நீர் நிரப்பப்பட்ட ஆணுறைகள் காவலர்கள் மீது தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

2. மலையேறுபவர்கள் கனமான தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வதற்குப்பதிலாக, நீர் நிரப்பப்பட்ட ஆணுறைகளைச் சாதாரண துணிப்பைகளில் எடுத்துச் செல்வதாகச் சொல்கிறார்கள்.

3. கல்லூரி மாணவர்களின் பொழுதுபோக்கு.

4. இவை எல்லாவற்றுக்கும் மேலாக – வீட்டில் ஒழுகும் தண்ணீர்க் குழாயைச் சரிசெய்ய ஆள்வரும்வரை, அதன் மூக்கில் ஆணுறையை மாட்டிவிட்டு வீடு சேதமாகாமல் தடுக்கமுடியும். முன் ஜாக்கிரதை அதிகம் உள்ளவர்கள் ஒன்றுக்கு இரண்டாகப் பயன்படுத்தலாம்.

இந்தக் கட்டுரையில் ஆணுறைகளைப்பற்றி பொதுவில் எழுதப்பட்டிருந்தாலும், சமீபகாலங்களில் பெண்ணுரைகளும் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பற்றி விபரம் தெரிந்த யாராவது எழுதினால் சந்தோஷம்.