நேற்று மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் பால்மர் “மைக்ரோஸாப்ட் நிறுவனத்துக்கு இப்பொழுதுள்ள பெரிய பிரச்சனை மென்கலன் திருட்டுத்தான். மென்கலனுக்குப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய பலர் வன்கலனின் அதீத விலையால் நிரலிகளைக் காசு கொடுத்து வாங்காமல் திருட்டுத்தனமாகப் பயன்படுத்துகிறார்கள். கணினியின் விலையை $100 டாலருக்குக் கீழே குறைத்துவிட்டால் மக்கள் மென்கலன் திருட்டில் ஈடுபடமாட்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.

இதைக் கேட்கும் பொழுது எங்கள் ஊரில் சொல்லும் ஒரு சொலவடைதான் நினைவில் வருகிறது; “ஆடத்தெரியாத தேவடியா அம்பலம் கோணல்னாளாம்”. கடந்த சில வருடங்களில் கணினியின் விலை எண்ணிப் பார்க்க முடியாத நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. வன்கலன் துறையில் இருக்கும் சிலபேரை எனக்கு நன்றாகத் தெரியும். அதேபோல என்னுடைய அலுவலகத்தில் கணினி சம்பந்தமானவற்றை வாங்குபவன் என்ற முறையில் எனக்கு நிறைய கணினி, துணைப்பொருள் வியாபாரிகளை நன்றாகத் தெரியும். சில சமயங்களில் அற்புதமான வரைவு அட்டை (Graphics Card) விற்பதில் கிடைக்கும் ஆதாயம் பத்திலிருந்து இருபது டாலர்கள்தான் இருக்கும். இன்றைக்கு டெல் நிறுவனம் $399 (நெசம் டாலர்கூட கிடையாது, கனேடியன் டாலர்கள் – அமெரிக்காவில் எங்கள் டாலருக்கும் ரூவாய்க்கு முக்கால்தான் தேறும்) கணினியைக் கனடாவில் விற்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு துவக்க நிலை கணினியின் விலை $700. அதே நேரத்தில் விண்டோஸ் எக்ஸ்பியின் விலை, அன்றும் இன்றும் என்றும் $400 கனேடியன் டாலர்கள். கணினித்துறையில் இன்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு வன்கலன் துறையில் நடக்கும் அதீத தொழில் முன்னேற்றமும், விற்பனையில் ஆதாய வீதத்தை மிகவும் குறுக்கிக் கொண்டு, குறுகிய கால சந்தைப்படுத்தல், உற்பத்தித் திறனைப் பெருக்கல் என்று பல நல்ல வழிகளில் முன்னேற்றம் கண்டிருப்பதுதான்.

இதே கால கட்டத்தில் மைக்ரோஸாப்ட் தான் அறிவித்த லாங்ஹார்ன் இயக்குதளத்தை வெளியில் கொண்டுவர முடியாமல், பலமுறை வெளியீட்டுத் தினங்களை ஒத்திப் போட்டிருக்கிறது. அதில் செய்யவிருப்பதாகச் சொன்ன புதுமைகளையும் நடைமுறைப்படுத்த முடியாமல் தினறுகிறது. இந்த நிலையில் தங்கள் நஷ்டத்திற்கு வன்கலன் நிறுவனங்கள்தான் காரணம் என்று சொல்லியிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது.

ஒரு காலத்தில் துவக்க நிலை கணினியின் விலையில் கால்பங்கு இயக்குதள (நேரடி சந்தை) விலையாக இருந்தது (மைக்ரோஸாப்ட் வரி என்றும் படிக்கலாம்). இப்பொழுது $399 டாலர் கணினி – $450 டாலர் இயக்குதளம் என்று இருக்கிறது. திறந்த சந்தையில் $450 டாலர் விற்கும் இயக்குதளத்தைத் தங்கள் பங்காளிகளாக இருக்கும் கணினி உற்பத்தியாளர்களுக்கு $50 டாலர்களுக்குக் கொடுக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், கணினியில் வன்கலன் விலை $350 டாலர்கள் என்பது மிக மிக மலிவு.

பொதுவில் இப்பொழுது மக்கள் $300 டாலர் கணினிக்கு ஏன் இயக்குதளத்தின் விலை இவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும் என்று கேட்கத் துவங்கியிருக்கிறார்கள். லினக்ஸின் மீதும் ஆப்பிள் ஓஎஸ் எக்ஸின் மீதும் கவனம் திரும்புவதற்கு அவற்றின் குறைந்த விலையும் ஒரு காரணம். இந்தக் கேள்வியைத் திசை திருப்பும் முயற்சியாகவே மைக்ரோஸாப்ட்டின் ஸ்டீவ் பால்மர் இப்படிச் சொல்கிறார் என்று தோன்றுகிறது.

* * *
அப்படியே கணினியின் விலை குறைந்தாலும் மென்கலன் திருட்டு குறையும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. விலை குறையக் குறைய இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருக்கும் மத்திர தர வர்க்கத்தினர் அதிகமாக கணினிகளைப் பாவிக்கத் தொடங்குவார்கள். அப்பொழுது மென்கலன் திருட்டின் வீதம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். அங்கெல்லாம் சந்தை இன்னும் கறாரானது.

பொதுவில் மக்கள் திருட்டு வீசிடிக்களில் திரைப்படம் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் திரையரங்குகளின் கட்டணம் அதிகமாக இருப்பதுதான், எம்பி3 வடிவில் பாடல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள், இசைத்தட்டுக்களை வாங்க மறுக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இசை வணிகர்கள் கொள்ளையடிப்பதுதான். அதேபோல் மென்கலன் திருட்டில் ஈடுபடக் காரணம் வியாபாரிகள் கொள்ளையடிப்பதுதான். அளவுக்கு அதிகமாக விலைவைத்துக் கொள்ளை இலாபம் அடிக்கும் கடைகளில் பூட்டை உடைத்துத் திருடும் பொழுது அவனுக்கு மனசாட்சி உறுத்துவதில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் தவறு என்று கண்டிக்க வேண்டும் என்று தொன்றுவதில்லை.

* * *
இந்த அபத்தக் களஞ்சியத்திற்கு டெல், ஹெச்பி போன்ற கணினி தயாரிப்பாளர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டும். பொதுவில் இது ஏற்கனவே அவர்களுக்கு மைக்ரோஸாப்ட் மீது இருக்கும் வெறுப்பை அதிகரிக்கத்தான் பயன்படும்.

* * *

இதே போல பொதுவிடங்களில் அபத்தமாக பேசுவதன் மூலம் ஸ்டீவ் பால்மர், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்-க்கு நேரடிப் போட்டியில் இறங்கியிருக்கிறார். அடுத்த முறை அமெரிக்காவின் ஜனாதிபதியாகலாம் என்று கனவு காண்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

சொல்ல முடியாது, ஆனாலும் ஆகலாம், சமீபத்தில் நடந்த புஷ்-கெர்ரி விவாதங்களின் முடிவில் ஏபீசி தொலைக்காட்சி நிருபர் கெர்ரியைக் குற்றம் சாற்றும் விதமாக இப்படிச் சொன்னார்; “Kerry was talking more cerebral”. அந்த விதத்தில் ஸ்டீவ் பால்மருக்கு அமெரிக்க ஜனாதிபதியாகும் தகுதி கட்டாயம் இருக்கிறது.