வழக்கமாக சாக்கடை ஓரத்தில் கண்டெடுக்கப்படும், சேரியில் வளரும், ஐந்து வயதில் பீடி பிடிக்கும்,… மொத்தத்தில் புதிய பாதை பார்த்திபனைப் போல இருக்கும். இதுதான் காலம் காலமாக நமக்குத் தெரிந்தது. ஏனென்றால் இந்த சமூகத்தில் அப்பன் பெயர் தெரியவேண்டியது மிகவும் அவசியம்.

இனி…

இரண்டு அம்மாக்கள் சேர்ந்து ஒரு குழந்தையை உருவாக்க முடியும். ஆண்களே தேவையில்லை இந்த உலகில்? ஆச்சரியமாக இருக்கிறதா? சமீபத்தில் இது எலிகளில் சாத்தியமாகியிருக்கிறது.

கவனிக்கவும். இதற்குத் தேவை இரண்டு அம்மாக்கள். எனவே இது நகலாக்கம் இல்லை. நகலாக்கத்தில் ஒரு உயிரி தன்னைத்தானே நகலெடுத்துக் கொள்கிறது. ஆனால் இந்த முறையில் ஆணும் பெண்ணும் இணைந்து உருவாவதைப் போலவே “இரண்டு வேறு” உயிரினங்கள் இணைந்து குழந்தையைப் பெற்றெடுத்திருக்கின்றன. சில தாவரங்களில் தன்னினப் பெருக்கம் (Parthenogenesis) என்ற முறையில் ஒருபால் சந்ததிப் பெருக்கம் சாத்தியம். சில பல்லிகள் கூட பெண்ணும் பெண்ணும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும். ஆனால் பரிணாமத்தின் மேலடுக்கில் இருக்கும் பாலூட்டிகளுக்கு இது அறவே சாத்தியமில்லை என்று நம்பப்பட்டு வந்தது. இப்பொழுது இது சோதனைமுறையில் பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதைப் புரிந்து கொள்வதற்கு இருபால் இனப்பெருக்க முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறக்கும் குழந்தை ஆணிலும் பெண்ணிலுமாகச் சரிசமமமான மரபுக்கூறுகளைத் தாங்கி வருகிறது. X, Y எனப்பட்ட இருவேறு வகையான குரோமோசோம்களில் ஆணுடைய ஒன்றும் (X or Y) பெண்ணுடைய ஒன்றும் (Y or X) இணைய முழுமையான XY குரோமோசோம் சோடியுடன் குழந்தை உருவாகிறது. இந்த இணைப்பு ஒழுங்காக நடைபெற மரபணுக்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தவேண்டும். வலது கையையும், இடது கையையும் விரித்து அவற்றின் விரல்களை ஒன்றுடன் ஒன்று பிணைப்பதைப் போல. இரண்டு வலது கைகள் சேர்ந்தால் பிணைக்க முடியாது, இரண்டு இடது கைகளாலும் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. அதேபோல், இரண்டு ஆண் இனப்பெருக்கச் செல்களோ, அல்லது இரண்டு பெண் இனப்பெருக்கச் செல்களிலோ இது சாத்தியமில்லை. காரணம், இவை ஒன்றுடன் ஒன்று பொருந்தாது.

இதைப் பொருத்துவதைத்தான் ஜப்பானியர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். இதன் வழிமுறைகள் எல்லாம் மிகவும் சிக்கலானவை. சுருக்கமாகச் சொல்லப்போனால் இவர்கள் இரண்டு பெண் இனப்பெருக்கச் செல்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றை சாதாரணமாக அப்படியே விட்டுவிட்டு, மற்றதில் சில தேவையற்ற பகுதிகளைச் செதுக்கியெடுத்து வார்த்திருக்கிறார்கள். இந்த முறையில் கிட்டத்தட்ட வலதுகை விரலமைப்பு, இடது கையைப் போல மாற்றப்பட்டிருக்கிறது. இது பிற பெண் செல்லுடன் பிணைவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இரண்டே இரண்டு இடங்களில் மரபுக்கூறுகளை மாற்றிவைக்க இப்படிப் பிணைவது சாத்தியப்பட்டிருக்கிறது.

இந்த ஆராய்ச்சியால் என்னவெல்லாம் நாளை சாத்தியமாகக் கூடும், இவற்றில் என்ன சிக்கல்கள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

1. வளர்நிலைச் செல்களை எளிதில் தயாரிக்கமுடியும். வளர்நிலைச் செல்கள் எந்தவிதமான பாகங்களாகவும் உருவெடுக்க வல்லவை. எனவே, நோய்களைக் குணப்படுத்த இவை பயன்படுகின்றன. உதாரணமாக, ஒட்டுக்கள் போடத் தேவையான திசுக்களை வளர்நிலைச் செல்களிலிருந்து எளிதில் பெறமுடியும். இன்னும் பார்க்கின்ஸன் போன்ற வியாதிகளுக்கும் குணம் கிடைக்கலாம்.

2. ஆராய்ச்சிகளுக்குத் தேவையான கருக்களை எளிதில் உருவாக்கிக்கொள்ளமுடியும்.

3. நகலாக்கத்தில் இருக்கும் முக்கியச் சிக்கல், இப்படி ஒன்றோடொன்று பிணையும் பொருந்திகளைப் (templates) பிழையில்லாமல் உருவாக்குவது. இந்த ஆய்வு பொருந்திகளைப் பற்றிய நம் அறிதலை இன்னும் கொஞ்சம் முன்னகர்த்தியிருக்கிறது.

3. என்றாலும் இவற்றில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. மனிதனின் மரபுப்பிணைப்பு பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளாமல் இதில் இறங்கினால், கிடைக்கும் வளர்நிலைச் செல்களை வைத்துக் கொண்டு குணப்படுத்தலில் இறங்குவது அபாயகரமானது.

4. சரியாக மரபு, இணைப்பு, பொருந்திகள் இவையெல்லாம் தெரியாமல் இந்த ஆராய்ச்சியில் இறங்குவது, கிட்டத்தட்ட பொருத்தமான இனப்பெருக்கத்தில் போய் முடியும். இது பிழையான நகலாக்கத்தைப் போல, விகாரமான, அல்லது மூர்க்கமான மனிதனல்லாத, ஆனால் கிட்டத்தட்ட மனிதனையொத்த அதிமனிதன்/அரக்கனைப் படைப்பதில் போய்முடியும். சூழியலில் இதன் பங்கு என்னவாக இருக்கும் என்பதை யாரும் அறுதியிடமுடியாது. ஏனென்றால் இது பரிணாம வளர்ச்சியில் உருவான உயிரினம் இல்லை.

இப்படிப் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது இந்த ஆய்வு. இவையெல்லாம் கிட்டத்தட்ட நகலாகக்த்திற்கும் பொருந்துபவைதான். இது போன்ற ஆய்வுக¨à®¤à¯ தடுப்பது கடினம். (ஒரு சில நாடுகள் தடுத்தால், ஆர்வமுள்ளவர்கள் வேறெங்காவது போய் இரகசியமாகத் தொடரச் சாத்தியமிருக்கிறது. அந்த நிலையில் இதை ஒழுங்குபடுத்துவது சாத்தியமில்லாமல் போய்விடும்). எனவே, இவற்றை ஒழுங்குபடுத்த பன்னாட்டு அணுஆயுத அமைப்பைப் போன்ற ஒரு கட்டுப்பாட்டு அமைப்பை விரைவில் உருவாக்க வேண்டியது அவசியம்.

* * *