தெருக்கோடியிலிருந்தே அந்த வீடு தனியாகத் தெரிகிறது. தெருவின் நடுவில் இருக்கிறது. நோஞ்சானாகத் தெரியும் அந்தத் தெருவின் பிற வீடுகளைப் பார்க்க இது கம்பீரமாகத்தான் இருக்கிறது. உயர்ந்த திண்ணையை மூன்றில் இரண்டுபங்காகப் பிரித்து வலதுபுறம் சதுரவடிவில் இருக்கிறது. போனால் போகிறது என்று கொஞ்சூண்டு விண்டு போட்டதுபோல் இடதுபுறம். அதிகபட்சம் ஒற்றை சரீர ஆசாமி படுத்துக் கொள்ளலாம். இரண்டுக்கும் இடையில் குறுகலான நடைவழி. பெரிய திண்ணையில் எட்டிலிருந்து பத்து ஆட்கள் அமரமுடியும். வழக்கமாக இதுபோன்ற திண்ணைகளில் இருப்பதைப் போலத்தான் இங்கும் எட்டுபேர் வட்டவடிவில் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த ரவுண்டு டிக்கியடித்தபிறகு எட்டில் ஒன்று அதிகம் உடம்பைச் சாய்க்காமல் “இவளே, ஜலங்கொடுடீ” என்று கத்துகிறது. உள்ளேயிருந்து ஆத்துமாமி பித்தளைச் செம்பில் தண்ணீர் கொண்டுவந்து திண்ணையின் ஓரமாக வைத்துவிட்டுப் போகிறாள். அரையில் நழுவும் வேட்டியை ஒற்றைக் கையால் பிடித்தபடி மறுகையில் செம்பை எடுத்து, பிருஷ்டத்தைத் தரையில் அறைத்து திண்ணையின் ஓரமாக வருகிறது. கடவாயில் ஒழுகும் வெற்றிலைச் சாற்றை திண்ணைக்குக் கீழே வீட்டு வாசலில் துப்புகிறது. செம்பிலிருக்கும் தண்ணீரை வாயிலெடுத்துக் கொப்பளித்து திண்ணையின் விளிம்பில் பீச்சியடிக்கிறது. இப்படி வருடக்கணக்காகப் பீச்சியடிக்கப்பட்ட கும்பகோணம் வெற்றிலை, கைச்சீவல், பன்னீர்ப் புகையிலையின் கலவை திண்ணையில் சிக்கலான ஓவியத்தைத் தீட்டியிருக்கிறது. சொல்லப்போனால் அந்த இடத்தில் தரையே தொடர்ச்சியாக வெற்றிலை துப்பப்பட்டு, சாறும் நீரும் உமிழப்பட்டு ஒருவித பச்சையும் காவியுமான நிறத்தில் கெட்டிப்பட்டுப் போயிருக்கிறது. உமிழ்ந்து நிமிர்ந்த மோவாய் என்னை வித்தியாசமாகப் பார்த்து, என் உடலையும் உடையையும் அலகிடுகிறது.

நான் போகவேண்டிய வீடு தெருக்கோடியிலிருக்கிறது. எனவே, என்னுள் அந்தத் திண்ணையின் இருப்பை அலட்சியம் செய்தவாறு நான் தெருவின் மையத்தில் நடந்துகொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட அந்தவீட்டைக் கடந்துவிட்ட சமயத்தில் திண்ணையிலிருந்து ஒரு குரல் பெரிதாக எழும்புகிறது.

“அம்பீ” அது என்னைக் குறித்தது என்ற பிரக்ஞை இல்லாமல் நான் தொடர்ந்துகொண்டிருக்க,

“ஏஏய், அம்பீ! எங்க ஜெயராமன் ஆத்துக்கா?”

இருபது முப்பது வீடுகள் கொண்ட தெருவில் கிராமத்திற்குப் புதியவனான நான் செல்லவிருக்கும் இலக்கைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டவர் யார் என்ற ஆவலில் திரும்பிப் பார்க்கிறேன்.

“டேய், இஞ்ஞ வா”

இதற்குள் திண்ணையில் வெற்றிலைத் துப்பியவர் கையில் இன்னும் வேட்டியை இடுக்கியபடியே முன் அறைத்த திசைக்கு எதிர்திசையில் தன் பிருஷ்டத்தை அறைத்து வட்டத்தில் காலியான இடத்தில் போய்ப் பொருந்திக்கொள்கிறார்.

“என்ன அம்பீ, ஜெயராமன் ஆத்துக்குத்தான போற?”

நான் திரும்பியிருந்தபொழுது எழும்பிய அதே குரல், இப்பொழுது முகத்தையும் காட்டுகிறது. கட்டாயமாக இவர் எனக்கு எந்தவகையிலும் பரிச்சயமானவரில்லை.

“ஆமாம்” மேற்க்கொண்டு இதில் உரையாடலுக்கு எதுவும் இல்லை என்ற முடிவில் நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒற்றையடி எடுத்துவைக்கிறேன்.

“டேய், இஞ்ஞ வா. ஜெயராமன் ஆத்துல இல்ல. களத்துக்குப் போயிருக்கான். ஊர்ல எல்லாருஞ் சௌக்கியமா?”

யார் இவர்? “ம். நேக்கு நீங்க யாரை சௌக்கியம் கேக்கறேள்னு தெரியல?”

“விசாலம் புள்ளதானடா நீ. எப்படியிருக்கா அவ?”

எனக்கு வியப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆமாம், நான் விசாலத்தின் பிள்ளைதான். ஆனால் யார் இவர்?

“ஆமா மாமா, அம்மா சௌக்கியம். உங்கள யாருன்னு நேக்கு அடயாளந் தெரியல?”

“என்னமோ போடா, கெடந்துதான் பொழச்சிருக்கா”

எனக்குக் குழப்பம் அதிகரிக்கிறது. இவர் சொல்லும் விசாலம் வேறு யாரோ. என் அம்மாவுக்கு ஒரு குறையும் இல்லை.

“இல்ல மாமா, எங்க அம்மாவுக்கு ஒன்னும் இல்ல. நீங்க வேற யாரயோ செல்றேள்னு நெனக்றேன்”

“என்னடா, நாலு வருஷத்துக்கு முன்னாலதானடா அல்சர் வந்து பத்துநா படுக்கையோட கெடந்தா”

சந்தேகமேயில்லை. இது என் அம்மாதான். அல்சர் இருந்தது வாஸ்தவம்தான். ஆனால் படுக்கையில் கிடக்கவில்லை.

“உங்கள இன்னும் யாருன்னே தெரியலயே?”

“எல்லாம் ஒறவுதான்டா. என்ன ஒறவுன்னு கேக்காத. ஆச்சானுக்குப் பீச்சான், மதினிக்கு ஒடப்பொறந்தான்” சொல்லிவிட்டு தன்னுடைய சகாவைப் பார்க்க அவர் கெக்கெக்கே என்று சிரிக்கிறார்.

“ஸரி மாமா, வர்றேன்”

“டெ, இர்றா, ஜெயராமந்தான் இல்லயே”

“இல்ல, நான் மாமிட்ட சொல்லிட்டுப் போறேன். அவரைப் பாக்கனும்னு இல்ல. நேக்கு லேட்டாறது”

“சர்தான். கெடக்கு. அதெப்படி கும்மோணத்துலேந்து பஸ்புடுச்சு வந்துட்டுப் பாக்காமப் போறது. என்னடா வேல கிழியறது”. அதே சமயத்தில் உள்ளேயிருந்து ஒரு மாமியின் தலை எட்டிப் பார்க்கிறது.

“டீ, நம்ம கும்மோணம் (வி)சாலத்துப் புள்ளயாண்டான். ஜேமூவப் பாக்க வந்துருக்கான்”

“யார ஜேமூ ஸாரா? அவர் களத்துக்குன்னாடா அம்பீ போயிருப்பர். எந்த விஸாலம்?”

“டீ, வக்கீல் நாராயணஸாமியோட அத்தங்காடீ. ஜெயத்தும் பொண்ணு”.

“ஸர்தான், இது நாணுவோட அத்தங்கா புள்ளையா? (வி)ஸாலஞ் ஜாடய அப்படியே உரிச்சு வச்சுருக்கு”

“ஸத்துடீ, அம்பி. கும்மோணங் காலேஜ்ல பஸ்ட் ரேங்க் வாங்கறானாம். போன தடவ நாணுக்கு பெரும தாளல”

“பின்ன, (வி)ஸாலத்துப் புள்ளன்னா, அசத்தாவா இருக்கும். வெற ஒன்னுபோட சொர ஒன்னு மொளக்குமா?”

“அம்பீ ஜெயராமன் வர்றத்துக்கு நாழியாகுன்டா”

“இல்ல. மாமாவைப் பாத்துத்தான் ஆனுன்னு முக்கியமில்ல. சேதி சொல்லிட்டுப் போனும்”

“என்ன ஸேதி, எப்ப ஈரங்கி போட்ருக்காம்?”

எனக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. யார் இவர்? அதிதுல்லியமாக நான் வந்த காரணத்தை இப்படித் தெரிந்துவைத்திருக்கிறாரே!!

“இல்ல மாமா”

“என்னடா இல்ல, ஈரங்கி சேதிசொல்லித்தானடா நாணுவைய்யர் அனுப்சுவச்சார்? இந்ததடவை வாய்தா வாங்க முடியலையா?”

இவரிடம் எதையும் மறைக்க முடியாது என்பது ஆசுவாசத்தைத் தருகிறது. அதே சமயம் இந்த உரையாடல் என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறது. இடையில் அங்கே அடுத்த சுற்றுக்கான சீட்டுகள் பரிமாறப்படுகின்றன.

“ஓய், சீட்டப் பாத்துப் போடுங்காணும், கைய வீசிப் போடும்”

“ஸர்தான், ஸித்த தள்ளி விழுந்தா கைய நீட்டி எடுத்துக்கறது”

“ஓய், போட்றச்ச ஒழுங்கா போடனும் ஓய். கதிராமங்கலத்துல காரியஞ் செய்ய கஞ்சனூர்ல வேஷ்டிய அவுத்துட்டு நின்னா எப்படி?”

“சரிடா. நாணுவோட நாட்டுப்பொண்ணு துபாய்லேந்து எப்ப வர்ரா? ச்சீனூ… வக்கீல் நாணுவோட புள்ளையும் நாட்டுப்பொண்ணும் துபாய்ல கொழிக்கறது தெரியுமோல்யோ?”

சீனு என்று அழைக்கப்பட்டவர், “நாணு பையன் கல்·à®ªà¯à®² இஞ்சினீரா இருக்கானோல்யோ?”

“ஆமாம் ஓய். ஆனா அவஞ் சம்பளம் ஆத்துக்காரி ஸம்பாரிக்கறத்துக்கு ஒறபோடக் கூட காணாது. ஷேக்கு ஆத்துக்காரிக்கெல்லாம் இவதான் ப்ரெஸவம் பாக்கறா. ஒவ்வொரு ஷேக்கும் நூறு ஆம்படயாள வச்சிண்டுருக்கான். ஷேக்குக்கெல்லாம் அதவுட்டா வேற கார்யங் கெடையாது. க்டேரி க்டேரியா ஏறிண்டிருக்கறதுதான். எல்லாம் மாறிமாறி குட்டிப் போட்டுண்டுருக்கு. இவளுக்குங் கொழிக்கறது”

“என்ன ஓய், ஊருக்கெல்லாம் ப்ரெஸவம் பாத்து என்ன புண்யம். அந்த மாடு ஈனமாட்டேங்கறதே?”

“என்னத்த ஸெல்றது. பூமி பீடபூமியா இல்ல துப்பாக்கில மருந்தில்லயான்னு தெரியல”

“கொழ்ந்தல்லாம் கெழக்கட்டும் ஓய். அதுதான் பணம் குதிர்ல ரொம்ழறதே” இன்னொன்று கடவாயில் ஒழுகும் வெற்றிலையைப் புறங்கையால் துடைத்துக் கொள்கிறது.

“என்ன ஸெல்றே நீ! பசுமாடு வச்சுக்கறது எருவுக்கா? கறக்க வேணாமோ?” கெக்கேபிக்கே சிரிப்புகள் திண்ணையை நிறைக்கின்றன.

நான் மரியாதைக்குரியவர்களாக மதிக்கும் ஒரு குடும்பத்தின் அந்தரங்க விபரங்கள் முன்பின் தெரியாதவர்களால் இப்படி என் முன் அலசப்படுவது எனக்கு அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது. நெஞ்சை அடைக்கிறது. யார் இவர்கள்? எதற்கு என்னை அழைத்துவைத்து இதெல்லாம் பேச வேண்டும்?

“நா வர்றேன்” மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகர முயற்சிக்கிறேன்.

“என்னடா ஓட்றே. ஜேமூ களத்துல வைக்கல ஒன்னோன்னா பொறுக்கி சேத்துண்டுருக்கும். மாமி ரேழீல மல்லாந்து கெடப்பா. கதவத் தட்டிட்டு உள்ளப்போடா அம்பீ”

கண்ணோரத்து நீரை இனியும் மறைக்க முடியாது என்ற நிலையில் அவசரமாக அகல முயற்சிக்கிறேன்.

“என்ன அம்பீ இந்த ஓட்டம் ஓட்றான்?” ஈரங்கிச் சேதியச் சொல்லிட்டு ஆத்துக்குப் போய் புஸ்தகத்தை வச்சிண்டு படிப்பனா இருக்கும். இவனும் இன்ஜினீராகி ஒரு கிடேரிய ஆத்துக்கு இழுத்துண்டு வரணுமோல்யோ?

“வர்றது கறவமாடா இருக்குமோ, இல்ல கழிசமாடா இருக்குமோ?”