இன்று வெளியான அறிவிப்பின்படி சீனா வருங்கால இணையதின் ஆதாரமாக இருக்கப்போகிற IPv6 என்ற நுட்பத்தின் அடிப்படியிலான வலை பல்கலைக்கழகங்களுக்கிடையே திருப்திகரமாக இயங்குவதாகத் தெரிவித்திருக்கிறது. இந்த புதிய நுட்பத்தின் அடிப்படையிலான வலையமைப்பில் தகவல் பரிமாற்ற வேகம் நொடிக்கு 40 மெகாபைட்கள் வரைச் செல்லக்கூடும். சீனாவின் புதியவலையின் சராசரி வேகம் நொடிக்குப் பத்து மெகாபைட்கள். இதனுடன் ஒப்பிட நம் அகலப்பாட்டையின் வேகம் சராசரியாக 1 கிகாபைட்/நொடி.

இதுநாள்வரை நாங்கள் தொழில்நுட்பத்தைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். இப்பொழுது புதிய தொழில்நுட்பத்தை முன்னின்று நடத்துகிறோம் என்று சீனாவின் நுட்பர்கள் மார்தட்டியிருக்கிறார்கள். இது உண்மைதான். ஆனால் இதற்கான தேவை வேறெந்த நாட்டையும் விட சீனாவுக்குத்தான் அதிகம் இருக்கிறது என்றும் சொல்லவேண்டும். இதற்குக் காரணம் தற்பொழுதைய வலையமைப்பை முற்றாக அமெரிக்கா கைப்பற்றியிருப்பதுதான்.

இந்த ஐபி-6 வலைக்கான நுட்பம் முழுவதுமாக சீனாவிலிருந்துதான் வருகிறது என்றில்லை. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கொரியா போன்றவை இணைந்துதான் இதை உருவாக்கிவருகின்றன. என்னுடைய ஆய்வகத்தின் எதிர் அறையில்தான் கனடாவின் ஐபி-6 வருங்கால முதுகெலும்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கிருப்பவர்கள் ஜெர்மனியின் இரண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கொரியாவின் ஒரு பல்கலைக்கழகம் இவற்றுடன் ஏற்கனவே நேரடி ஐபி-6 இணைப்பிலிருக்கிறார்கள். இதன் முன்னோட்டமாக டொராண்டோ பல்கலைக்கழகம் முழுவது “கிகாபிட் ஈத்தர்நெட்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சென்றமாதம் இதனுடன் வர்த்தக ரீதியில் சேவைதரும் பெல் கனடா நிறுவனம் இணைய இப்பொழுது என் வீட்டிலிருந்து ஆய்வகத்திற்கு நேரடி கிகாபிட் தொடர்பு இருக்கிறது. ஆனால் முதன் முதலாக இந்த அளவில் ஐபி-6 வலையைக் கட்டியிருப்பது சீனாதான். இருபது நகரங்களில் பரவிக்கிடக்கும் இருபத்தைந்து பல்கலைக்கழகஙக்ள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல சீனாவின் இந்த வலையில் பழைய நுட்பத்திற்கு இடம் கிடையாது, முழுதாக ஐபி-6 சாதனங்கள்தான்.

தற்கால வலைநுட்பம் IPv4 (Internet Protocol version 4) என்ற நடைவரையின் (Protocol, நடைமுறைக்கு வரையறை என்பதால் நடைவரை என்று சொல்லலாமே). இந்த நடைவரைகள் வலையமைப்பில் இருக்கும் கணினிகள் மற்றும் வலைக்கட்டுப்பாட்டு சாதனங்கள் ஒன்றுடனொன்று எப்படி தகவலைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று வரையறுப்பவை. இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லப்போனால் அனுப்பப்படும் செய்திப் பொட்டலம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும்? அதன் ஆரம்பத்தில் என்ன அடையாளங்கள் தேவை, முடியும் பொழுது என்ன செய்திகள் என்பவற்றின் வரையறைதான் இந்த ஐ.பி. (வயர்லெஸ் கைபேசியில் பேசுபவர்கள் முடிவில் “ரோஜர்” என்று சொல்வதைக் கவனித்திருக்கலாம். இந்தக்கால செல்பேசிகளில் இப்படி யாரும் ரோஜர் என்று சொல்வதில்லை, அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தால் உலகம் முழுவதும் நொடிக்கு நூறாயிரம் ரோஜர்கள் காற்றில் மிதந்துகொண்டிருக்கும். மாறாக இன்றைய செல்பேசிகள் உங்களுடைய பேச்சை டிஜிட்டில் சங்கேதமாக மாற்றும் பொழுது தானாக முடிவில் இதுபோன்ற டிஜிட்டல்-ரோஜர்களை இணைத்து அணுப்பும்). தற்கால நான்காம் வடிவ இணைய நடைவரை 32 பிட் அடிப்படையிலானது. இதனால் கிடைக்கும் நாலு பில்லியன் இணைய முகவரிகளில் கிட்டத்தட்ட 75 சதவீதத்தை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் இருக்கும் .காம், .நெட், .ஆர்க், போன்ற வலைகளுக்காக வளைத்துப் போட்டுக் கொண்டுள்ளது. மீதம் இருக்கும் கொசுறை சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை தங்களுக்குள்ளே பகிர்ந்து கொள்கின்றன. இதில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகைக்கேற்ப இணையப் பயனர்கள் அதிகரிக்க, தேவையான முகவரிகள் கிடைக்காமல் இவை திண்டாடப் போகின்றன. ஏன், சீனா ஏற்கனவே திண்டாடத் தொடங்கிவிட்டது. இதுதான் சீனா அடுத்த வலையைத் தேடிப்போகக் காரணம்.

அடுத்த வலை ஐபி-4 உடன் பின்னொப்புமை (Backward Compatibility) கொண்டது. எனவே இப்பொழுதிருக்கு வலைகாட்டிகள், கணினியின் வலையட்டைகள் எல்லாம் வருங்காலத் தொழில்நுட்பத்துடன் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் செயல்படும் என்கிறார்கள். முழுக்க முழுக்க ஐபி-6 க்கு எல்லோரும் மாற இன்னும் எட்டு முதல் பத்து வருடங்களாகளாம். (இந்த மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்காதான், ஏனென்றால் இன்றைய வலையில் பெரும்பங்கு அவர்களுடையதுதானே).