கூகிள் டெக்ஸ்டாப் பற்றிய மூன்றாவது பகுதி

குறைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள்

1. மேசைத்தளம் அடிப்படையிலான தேடலில் கால வாரியாகத் தேடல் வசதி முக்கியம். தற்பொழுது கூகிளில் இந்த வசதி கிடையாது. (உதாரணமாக கடந்த ஒரு மாதத்தில் மாற்றமடைந்த கோப்புகளில் மாத்திரம் தேடுவது சாத்தியமில்லை).

2. doc, (Microsoft Word), txt (Plain Text) போன்றவற்றில் தேடல் சாத்தியம். ஆனால் rtf(Rich Text File), pdf, போன்றவற்றை கூகிள் அட்டவணைப்படுத்துவதில்லை. தமிழில் எழுதி சேமிக்கும் பல கோப்புகள் rtf வடிவிலேயே இருக்கின்றன (சுவடி), இவற்றில் தேடல் சாத்தியமில்லை. (சொல்ல மறந்துவிட்டேனே, TSCII, Unicode இரண்டிலுமாகச் சேமிக்கப்பட்ட தமிழ்க் கோப்புகளில் எளிதில் தேடமுடிகிறது).

என்னைப் போன்ற பிராணிகளுக்கு PostScript, LaTeX இத்யாதிக் கோப்புகளும் இவற்றினுள்ளே வரவேண்டியது அவசியம்.

3. அவ்வப்பொழுது இடப்பிரச்சனைக்காகப் பழைய கோப்புகளை ஒட்டுமொத்தமாக zip வடிவில் சுருக்கிவைக்கிறேன். இவற்றில் இருப்பவை கூகிள் கண்ணில் படமாட்டா!

4. gif, jpeg, mp3 போன்ற கோப்புகளின் பெயர்களையும் கூகிள் அட்டவணைப்படுத்துகிறது, எனவே வருங்காலத்தில் பல்லூடகத் தேடலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

5. இந்தத் தேடல் பொறி “மைக்ரோஸாப்ட் மையங்கொண்டதாக” இருக்கிறது என்பது வருத்தமான விஷயம். மைக்ரோஸாப்ட் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் தண்டர்பேர்ட், யூடோரா போன்ற மின்னஞ்சல் நிரலித் தகவல்களை இது கண்டுகொள்வதிலை. அதேபோல இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரில் மாத்திரமே நீங்கள் பயணித்த இடங்களைத் தேடமுடியும். ·பயர்·பாக்ஸ் வரலாறு அட்டவணைப்படுத்தப்படுவதிலை. (தொழில் தெரிந்தவர்கள் ·பயர்·பாக்ஸ் கிடங்கைப் பட்டியலிடுவது எளிதில்லை என்று சொல்கிறார்கள்). வருங்காலத்தில் இதெல்லாம் வரும் என்று நம்புவோம். (மிகவும் முக்கியம் ஓப்பன் ஆ·பீஸ்).

6. சில சமயங்களில் வசதி கருதியும், பல சமயங்களில் இரகசியம் கருதியும் கோப்புகளின் பின்னொட்டியை மாற்றி வைக்கிறேன். உதாரணமாக ppiththan_kayirraravu.doc கோப்பின் பின்னோட்டியை ppiththan_kayirraravu.cod என்று சேமித்து வைத்திருந்தால் போதும் என்னுடைய அலுவலில் இந்தக் கோப்பு பொதுவிடத்தில் பாதுகாக்கப்படாது (backup). இதேபோல mp3 கோப்புகளை *.paattu என்று போட்டுவைக்கும் வழக்கமும் உண்டு, தேவையான சமயத்தில் எல்லா *.paattu கோப்புகளையும் ஒட்டுமொத்தமாக *.mp3 என்று பெயர் மாற்றினால் போதும். இது போன்ற விஷயங்களைத் தேவையான சமயத்தில் நமக்கு ஏற்றபடி கூகிள் டெக்ஸ்டாப்பில் அட்டவணைப்படுத்தும் வசதி இருப்பது நல்லது. (உதாரணமாக *.cod = *.doc என்று விதித்துக்கொள்ளும் வசதி). கூகிள் பொதுவில் என்னைப் போன்ற கிறுக்குகளை மனதில் கொண்டு செயல்படுவது வழக்கம். இந்த முறை மைக்ரோஸாப்ட் மாத்திரம் மனதில் இருந்ததால் எங்கள் சாதி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

6. பலருக்கும் தங்கள் இரகசியங்கள் அம்பலமாகுமோ என்ற கவலை இருக்கிறது. எனக்கென்னவோ இதில் கூகிள் செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. கூகிள் டெஸ்க்டாப் அமைப்பை உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக AOL அரட்டைகளை அட்டவணைப்படுத்த வேண்டாம் என்று சொன்னால் அது நண்பர்களுடன் தனிப்பட்டு கதைப்பனவற்றை கண்டுகொள்ளாது. இதே போல மின்னஞ்சல் போன்றவற்றையும் தேடலிலிருந்து தவிர்க்கும் வசதி இருக்கிறது. இதைத்தாண்டி கூகிள் என்ன செய்யமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

7. பலருக்கும் இருக்கும் முக்கிய கவலை, அலுவலில் அட்டவணையிடப்பட்ட என்னுடைய கணினி என் தனி இராச்சியங்களை அம்பலமாக்கும் என்பதே. இந்த இடத்தில் நான் கூகிள் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எளிதான வழி, தயாரிக்கும் என்னுடைய அட்டவணையை என் பிரத்தயேகக் கடவுச்சொல் கொண்டு பாதுகாத்துக்கொள்ளும் வசதியை எனக்குத் தருவது. அதாவது, கூகிள் டெக்ஸ்டாப் அட்டவணையை சங்கேதப்படுத்திச் சேமிப்பது, பிறகு என்னுடைய கடவுச் சொல்லை உள்ளிட்டுத் தேடும்பொழுது மாத்திரமே தனிராச்சியத்தின் தகவல்களைத் தருவது என்று வைத்துக் கொண்டால் தனிமை குறித்த கவலைகள் குறையக்கூடும்.

இனி வருங்காலத்தில் என்ன நடக்கலாம் என்பது பற்றிய என் யோசனைகள் (இவற்றில் சிலவற்றுக்குக் காப்புரிமைகூட எனக்குச் சாத்தியம். ஆனால் அமெரிக்கன் பேட்டன்ட் அலுவலகத்திற்குப் பணம் அழ எனக்குத் திராணியில்லை 🙂

1. யாகூவைப் (Yahoo! Briefcase) போல கூகிளும் பொதுவிடத்தில் சேமிக்கும் வசதி தருவது. இப்பொழுது தனிமைப் பிரதேசம் என்னுடைய தனிக் கணினியைத் தாண்டி மின்னுலகிற்கும் நீட்டிக்கப்படும். என் கணினி, கூகிள் சேமிப்புக் கிடங்கு இரண்டையும் ஒரே மாதிரியாகக் கருதுவது (அதாவது கடவுச்சொல் உள்ளிட வேண்டிய தனிமைப் பிரதேசங்கள்). இப்படிச் செய்தால் என்னுடைய கணினி அட்டவணையை, கூகிள் தனியிட அட்டவணையுடன் இணைக்க முடியும். அதேபோல் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணினிகளின் தகவல்களை (சங்கேதித்துத்தான்) இணைக்கலாம் – உதாரணமாக என் இல்லக் கணினி). அப்பொழுது நான் வீட்டில் தொலைத்துவிட்டு வந்த கோப்பை அலுவலகத்திலிருந்து தேட முடியும்.

2. இன்னும் பலத்த சங்கேதங்களுக்கு உட்படுத்தி இந்தச் சேமிப்புக் கிடங்குகள் எல்லாவற்றையும் எந்த நேரத்திலும் இணைக்கலாம் (உதாரணமாக, VPN – Virtual Private Network போல).

இந்த நிலையில் தனி மேசையுடன் முடியும் என்னுடைய தரவு உலகத்தை எளிதாக விரிக்க முடியும். எந்தக் கணினியில் நான் உட்கார்ந்தாலும் என் தகவல் எந்த நேரத்திலும் எனக்குக் கிடைக்கும். ஆஹா, அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு ஆசையும் அவகாசமும் இருக்கும் நேரத்தில் பழைய இளையராஜா பாடலைக் கேட்கமுடியும் (ஆனால் அலுவலகத்தைப் பொருத்தவரை ஆராய்ச்சிக் கட்டுரைகளை வீட்டிலிருந்து படிக்கும் வசதி).

3. இப்பொழுது தகவல் மிக விரைவாகப் பரவுவது RSS Feeds போன்ற செய்தியோடைகளின் மூலமாகத்தான். எனவே, நான் சந்தாதாரனாக இருக்கும் செய்தியோடைகளைப் (எல்லா நாளைய, எந்த வித காலாவதிக் கட்டுப்பாடும் இல்லாமல்) பட்டியலிட வேண்டியது அவசியம். அப்படியிருந்தால் போனவருடம் டிசம்பர் மாதம் எழுத்தாளர் பா.ராகவன் என்னைப் பற்றி என்ன எழுதினார் என்பதை அவர் பக்கத்திலிருந்தே தோண்டியெடுக்க முடியும்.

4. இதே போல பலருடைய உலகமும் இப்பொழுது மின்னஞ்சல் குழுக்களில் இருக்கிறது. உறுப்பினராக இருக்கும் குழுக்களின் மடல்களையும் அட்டவணையில் சேர்க்கும் வசதி வருங்காலத்தில் வரக்கூடும்.

* * *
இதெல்லாம் ஒருபுறமிருக்க, இப்பொழுதைய கூகிள் டெக்ஸ்டாப் பயன்பாட்டில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் – உங்கள் மேசைத்தளத்தைத் தேடும் பொழுது அது எத்தனை தொடர்புள்ள மின்னஞ்சல்கள், உரைக்கோப்புகள், பவர்பாயிண்ட்கள் என்று பட்டியலிட்டுத்தருகிறது. இவை ஒவ்வொன்றையும் தன்னுள்ளே கிடங்கிலும் போட்டுக் கொள்கிறது. எனவே, மின்னஞ்சலில் இருப்பதாக வரும் விடையப் பார்க்க நீங்கள் அவுட்லுக் நிரலியைத் துவக்க வேண்டியதில்லை, கூகிள் கிடங்கு உருப்படியை (Google Cache Item) நேரடியாக உலாவியிலேயே பார்த்துக்கொள்ள முடியும். இது ஒரு அற்புதமான வசதி. மைக்ரோஸாப்ட் வேர்ட்டைத் துவக்கிக் கோப்பைத் துவக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கில் உலாவிலேயே உடனடியாக கோப்பை மேயமுடியும். இந்த வசதிக்கு நான் அடிமையாகத் துவங்கிவிட்டேன்.

இந்த ஒரு வசதிக்காகவே கூகிளைப் போற்றுதும், கூகிளைப் போற்றுதும்!!