சென்ற வாரம் கூகிளின் புதிய Desktop Search – ஐ வெளியிட்டது. வெளியிட்ட அன்றே என்னுடைய கணினியில் நிறுவினேன். கடந்த நான்கு நாட்களாக இதை இயக்கிப் பார்த்தபின் என்னுடைய கருத்துகள்;

யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எல்லோரும் உலகம் முழுவதும் தேடுகிறார்கள். வலையில் கிடக்கும் சமாச்சாரங்களை அகழ்ந்தெடுக்க பல தேடல் கருவிகள் இருக்கின்றன. இவற்றில் சந்தைப் பங்கில் கூகிள் முதலிடத்தில் இருந்தாலும், யாகூ, எம்எஸ்என் உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக கூகிளை நெருக்கி வருகிறார்கள். மறுபுறம் அமேசான் அச்சிடப்பட்ட தாள்கள் உட்பட இணையத்தில் தேடும் தனது பொறியைச் சமீபத்தில் வெளியிட்டது. ஆனால், அவரவர் கைவிரல்களுக்குளே அடங்கிக் கிடக்கும் சொந்தக் கணினியில் போட்ட வார்த்தைகளைக் கண்டுபிடிக்க உருப்படியான ஒரு தேடல் இயந்திரம் இதுவரை கிடையாது. மைக்ரோஸாப்ட் இயக்குதளத்தில் இருக்கும் தேடல் பயன்பாடு கோப்பின் பெயரை வைத்துக் கொண்டு அது எந்த இடத்தில் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லும். ஆனால், என்னுடைய அலுவலில் இருக்கும் கணினியில் நான் confocal_fluorescence_microscopy.txt என்று பெயரிட்டு வைத்திருக்கும் சென்ற வாரம் திண்ணையில் வெளியான மத்தளராயன் கட்டுரை விஷயத்தை அதனால் கண்டுபிடிக்க முடியாது. உலகம் முழுவதுமான தேடல் இப்பொழுது நம் வீட்டுக்கணினிக்கும் வந்திருக்கிறது.

உண்மையில் இப்பொழுதுதான் நம் வீட்டுக் கணினியில் தேடமுடிகிறது என்பது தவறு. லினக்ஸில் சில வருடங்களாகவே இந்த வசதி இருக்கிறது. சமீபத்தில் ஓஎஸ் எக்ஸ் இயக்குதளத்தின் மூலம் ஆப்பிள் கணினியிலும் இது வந்தது. பிரபலமான விண்டோஸ் இயக்குதளத்திற்கு வேற்று நிறுவனங்கள் சில நிரலிகளை விற்றுவருகின்றன; இயக்குதளத்திலேயே இந்த அடிப்படை வசதி கிடையாது. ஆனால் இவை எதிலுமே இல்லாத வகையில் கூகிள் டெக்ஸ்டாப் நிரலி நம் கணினி, இணையம் இரண்டிற்குமான பொதுவான தேடல் நிரலியைத் தருகின்றது.

வழக்கமான எல்லா கூகிள் பயன்பாடுகளைப் போலவே இதையும் நிறுவது எளிதாக இருக்கிறது. நிறுவிய உடனேயே தன்னுடைய வேலைத்துவங்கி கணினியில் இருக்கும், மைக்ரோஸாப்ட் வேர்ட், பவர்பாயிண்ட், இவற்றுடன்கூட அவுட்லுக் மின்னஞ்சல், எக்ஸ்ப்ளோரர் உலாவியின் பழங்கதைகள் என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டு வகைப்படுத்திச் சேமித்துக் கொள்கிறது. என்னுடைய கணினியில் இதற்குக் கிட்டத்தட்ட இரண்டுமணி நேரமானது. இந்தப் பட்டியலிடும் வேலை நடக்கும்பொழுது நம்முடைய உலாவில் எந்தவிதமான இடையூறும் இல்லை. அடுத்தமுறை கூகிள் தேடலைத் துவங்கும் பொழுது வழமையான கூகிள் இணையத் தேடல், செய்தித் தேடல், படங்கள் தேடல் இவற்றுடன் கூட மேசைத்தளத் தேடலும் சேர்ந்து கொள்கிறது. இப்பொழுது தேடும் வார்த்தைகளைப் பற்றிய தொடர்புகளில் முதலாக நம் கணினியில் இருக்கும் தொடர்புள்ள கோப்புகளின் எண்ணிக்கைகளைக் காட்டுகிறது. பின்னர் வழக்கம் போல மற்ற இணையத் தொடர்புகள், இத்யாதி… மிகவும் வசதியாகத்தான் இருக்கிறது.

நாளை தொடர்கின்றேன்…