தமிழில் வலைப்பதியும் நண்பர்களிடையே weblog, blog என்பதற்கு இணையா தமிழ்ச் சொல்லின் தேவைகுறிந்த உரையாடல் (மீண்டும்) எழுந்துள்ளது. என்னுடைய கருத்து, மீண்டும் ஒரு முறை

நான் வலைக்குறிப்பு என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறேன். வலைப்பூ என்பதில் எனக்கு உடன்பாடில்லை (கவித்துவமாக இருக்கலாம், ஆனால் தொழில்நுட்பத்திற்கு இது பொருத்தமில்லை என்பது எ.தா.அ. கவித்துவம் தமிழைத் தலையெடுக்கவிடாமல் அழுத்துகிறது என்பதும் எ.தா.அ.). log என்பதற்குக் குறிப்பு என்பது சற்றேறக்குறைய பொருந்துகிறது. logbook – குறிப்பேடு, தொழில்நுட்பத்தில் தொடர்புடைய கருத்துகளுக்குத் தொடர்பான பெயர்களை இடுவது வழக்கு. hard disk – கடினவட்டு, Compact disc – குறுவட்டு floppy disc – நெகிழ்வட்டு. நாளைக்கு இன்னொரு disc வந்தால் அதுவும் வட்டாகத் தமிழுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும். weblog என்பவை வலைப்பூ என்று சொன்னால், logbook என்பது பூவேடு என்று சொல்வார்களோ என்று அச்சமாக இருக்கிறது (பூவேடு என்பதன் கவித்துவத்தை நினைத்தால் மெய்சிலிர்துப்போவான் தமிழன் என்பது உத்தரவாதம்). அப்புறம் mobile (cellphone) log என்பது நகர்ப்பூவாகப் பிரவாகமெடுக்கலாம் (செல்குறிப்பு). தொடங்கிய முதல்நாளே இதைத்தான் வலைக்குறித்தேன். (இந்தப் பூவும் வழக்கம்போல் நம் காதில் செருகப்படாமல் இருக்க வேண்டும்).