சதாமின் கைது பற்றி என்னுடைய வலைக்குறிப்பைப் படித்துவிட்டு வாசன் பொங்கியெழுந்துவிட்டார். சற்று நீளமான அவருடைய விமர்சனத்துக்கு என்னுடைய பதில் இதோ;

வாசன், இன்னொருமுறை என்னுடைய குறிப்பை நன்றாகப் பாருங்கள். அதில் எங்கும் நான் ‘சதாம் புண்ணியோத்தமர்’ என்று சொல்லவில்லையே. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், நான் எழுதியிருப்பதில் சதாமின் அயோக்கியத்தனமும் அடக்கம். என்னுடைய “நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்கத் தவறியது” ஏன்? 🙂 என்னைக் கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்பு என்று சொல்லும் நீங்கள் என்னுடைய கருத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் ‘கண்மூடித்தனமான அமெரிக்க ஆதரவு காட்டப் ‘பொங்கியெழுந்து விட்டீர்களே :). இந்தப் போக்கைத்தான் நான் அமெரிக்கர்களிடம் பெரிதும் காண்கிறேன். இப்படி நடுநிலையான அமெரிக்கவாசிகளையும் அமெரிக்கா பற்றி ஒரு வார்த்தை சொன்னால் நெஞ்சு வலிக்கச் செய்ததை அமெரிக்க ஊடகங்களின் பெரும் வெற்றியாகத்தான் நான் காண்கிறேன். இந்த மெக்கார்த்தித்தனம் அமெரிக்காவில் எந்த அளவிற்குப் பரவியிருக்கிறது என்பதற்கு ஹோவர்ட் டீன் இராக் படையெடுப்பை எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னால், உடனே சோனிப்பிச்சான் ஜோ லிபர்மான் அதை சதாம் ஆதரவாக மாற்றிக் காட்டி புஷ்-செய்னி அலையில் மிதக்க முயற்சி செய்வதே நல்ல எடுத்துக்காட்டு.

சதாமின் கொடுங்கோலைப் பட்டியலிட்டுக் எனக்கு இன்னொருமுறை நினைவுபடுத்தியதற்கு நன்றி, அமெரிக்காவின் படைத்திறமையால் சதாமைப் பிடித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் அமெரிக்காவின் ஆதரவுடன் வாழும் பிற கொடுங்கோலர்களைப் பற்றிய இந்தப் பட்டியல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

{
நீங்கள் சொன்ன அதேதான்,
[ சான்றுகளை, நடுநிலையான ஏடுகளின் தொகுப்புகளில் பல வலைதளங்களில் படிக்கலாம் ]
}

1. ஈக்வடோரியல் கினியா என்று ஒரு நாடு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? (இதெல்லாம் சி.என்.என்னில் காட்டமாட்டார்கள்). அங்கே தியோடொரொ ந்குவேமா ஓபியாங் ம்பசோகோ (ஆத்தாடிஈஈ இத்துணூன்டு நாட்டுக்கு இம்மாம் பெரிய ராசாவா?, Teodoro Nguema Obiang Mbasogo) என்று ஒரு உத்தமர் 1968லிருந்து ஆட்சி செலுத்திவருகிறார் (கிட்டத்தட்ட சதாம் ஆட்சியின் வயது). அந்த நாட்டின் எண்ணெய் வளம் கிட்டத்தட்ட எழுநூறு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மதிப்பிடப்படுகிறது. அந்த எண்ணையின் வர்த்தக உரிமை எல்லாம் எக்ஸான்-மொபில் (அதுதாங்க டெக்ஸாஸ் மா·à®ªà®¿à®¯à®¾). ம்பசோகோ ஆட்சியில் அவரை எதிர்ப்பவர்கள் சும்மா தலையை வெட்டி எறியப்படுகிறார்கள். மக்கள் மலேரியாவாலும், காலராவாலும், எய்ட்ஸிலும் சாகின்றார்கள். அந்த நாட்டின் வானொலி ம்பசோகோ கடவுள் என்றும் அவருக்கு யாரையும் கொல்ல அதிகாரம் உண்டு என்றும் பறை சாற்றுகிறது. கிட்டத்தட்ட பாக்தாத் வானொலியில் கேட்டதைப்போல இருக்கிறதா? கொஞ்சம் பொறுங்கள். தியோடோரினோ ம்பசோகா ஈக்வடோரியல் கினியாவின் அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். (சதாமின் புத்திரர் க்வெஸெய் நினைவுக்கு வருகிறாரா?). இவருடைய முழு லீலைகளை இணையத்தில் தேடலாம்.
அமெரிக்கா கொடுங்கோலர்களை எதிர்க்கும். ம்பசோகா கொடுங்கோலரல்லர், அவர் கையில் எண்ணெய் சொட்டுகிறதே!

2. இது போல ஆப்ரிக்க மண்ணில் அங்கோலா, ருவாண்டா, உகாண்டா, எத்தியோப்பியா இங்கெல்லாம் அமெரிக்காவிற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் மன்னர்கள் போதையில் மிதக்க, மக்கள் எய்ட்ஸ்ம், மலேரியாவும் பெற்று சுபீட்சமாக இருக்கிறார்கள். எண்ணையின் உரிமை அமெரிக்கர்களிடம் இருக்கும்வரை கவலையில்லை. ஜனநாயகம்??

3. ஆப்பிரிக்காவிலிருந்து அப்படியே ஒட்டகத்திலேறி அஸர்பெய்ஜானுக்குப் போகலாம். அங்கே முன்னால் கம்யூனிஸ்ட் தடியர் கெய்தெர் அலியேவ் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் ‘இறந்துபோக’ அவருடைய மகன் இல்ஹாம் கெய்தெர் “தேர்தல் மூலம்” ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் கொஞ்சம்கூட தாமதிக்காமல் புஷ் அருளாசி வழங்கி ஆட்கொண்டார் (என்ன இருந்தாலும் பரம்பரை ஆட்சியாச்சே). பழைய கம்யூனிச நாடொன்றில் முதன் முறையாக பரம்பரை ஆட்சிக்கு அமெரிக்கா வித்திட்டிருக்கிறது. அஸர்பெய்ஜான்-அமெரிக்க வர்த்தகக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் அமெரிக்கத் துணை செகரட்டரி ரிச்சர்ட் ஆர்மித்தாஜ். வர்த்தகக் குழு ஹாலிபர்ட்டனுக்கு அஸர்பெய்ஜானின் தலைநகர் பாகுவிலிருந்து துருக்கிக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் ஒப்பந்தத்தைப் “பெற்றுத்” தந்திருக்கிறது. பாவம் இன்னொரு பரம்பரை வாரிசான க்வெஸெய்க்குக் கொடுத்துவைக்கவில்லை. அமெரிக்கர்களால் நெஞ்சுக்கு அருகில் நின்று சுடப்பட்டு இறந்து போனார். ( என்னுடைய பழைய வலைப்பதிவு )

4. இப்படி விலாவரியாக அமெரிக்க ஆதரவு கொடுங்கோலர்களை (அதுதாங்க User-friendly tyrants) எழுதிக்கொண்டு போனால் இது ஒரு முழுப்புத்தகமாக மாறிவிடும். எனவே வெறும் பெயர்கள் மட்டும் இங்கே

* Nicaragua – Somoza
* Panama – Noreiga
* Dominican Republic – Trujillo
* Chile – Augusto Pinochet
* Phillipines – Marcos

கட்டாயம் என்னுடைய உடனடி நினைவுக்கு வராதவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். (இடையில் கிளின்டனின் காலத்தில் தென்னமெரிக்காவில் பல நாடுகளில் நிஜமாகவே ஜனநாயகம் வர உதவியதையும் சொல்லத்தான் வேண்டும்).

5. இரானின் மன்னர் ரெஸா பஹ்லவி ஜனநாயகக் காவலன் சிஐஏ உதவியுடன் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொஸாடெக் ஆட்சியை ஓரங்கட்டி ஆட்சிக்கு வந்தவர்.

6. அமெரிக்க பிராண்ட் ஜனநாயகத்தின் நிரந்தர எடுத்துக்காட்டு இஸ்ரேல். யூதர்களை மாத்திரமே குடியேற்றும் இஸ்ரேலின் ஜனநாயகமும் அது பெலஸ்தீனியர்களுக்குத் தரும் மனித உரிமைகளும் நினைத்தாலே புளகாங்கிதம் தரக்கூடியவைதானே.

7. இதே போல பாக்கிஸ்தானில் மக்களாட்சியை அவ்வப்போது தூக்கி எறிந்துவிட்டு வரும் அமெரிக்க நண்பர்களும் உலகை இரட்சிக்க வந்த தேவமகன்கள்தான்.
மீண்டும், இந்தப் பட்டியல் எந்த விதத்திலும் சதாமை நியாயப்படுத்துவது இல்லை. “சதாம் கொடுங்கோலர்” என்று தடித்த எழுத்தில் எழுதியிருக்கிறேன். இதையும் மெக்கார்த்தித்தனமாகப் பார்க்கவேண்டாம் என்றும் வேண்டிக் கொள்கிறேன். ஒரே ஒரு வித்தியாசம்தான் அவர் கட்டாயமாக user-friendly கொடுங்கோலர் இல்லை.

பிடித்துப் பொந்தில் போட்டு, தலையில் பொடுகு வளர்த்து, தாடையில் தாடி வளர்த்து, பல்லில் பூச்சி பிடித்து அவரையும் user-friendly ஆக்கியது அமெரிக்கர்களின் மாபெரும் வெற்றிதான்.

வாழ்க கொடுங்கோலர்கள்.