தமிழில் எழுத முடிகிறது. இது தலையைச் சுற்றிக் காதைத் தொடும் முயற்சி. முதலில் சுவடியில் தகுதரத்தில் எழுதி, அதை வெட்டி ஜாவா யுனிகோட் மாற்றியில் ஒட்டி மாற்றினேன். பின், யுனிகோட் செய்தியை வெட்டி இங்கே ஒட்டியிருக்கிறேன். விரைவில் இதற்கு ஒரு நேரடி வழி கண்டுபிடிக்கவேண்டும். ஜாவா-வில் யுனிகோட் தமிழை நேரடியாக எழுதுவது சிரமம். (சிரமம் என்று இல்லை, அந்தச் செயலி அமைந்த முறை செவ்வனே இல்லை).

Blog-கிற்குத் தமிழில் வலைப்பூ என்று பெயரிடலாம் என்று சொல்கிறார்கள். வலை+பதிப்பு – வின் கவித்துவமான மரூஉவாம். இடிக்கிறது. கவித்துவம் சரிதான் – தொழில்நுட்பம் எங்கே? அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான சொற்களைத் தமிழாக்கம் மொழிமாற்றம் செய்கையில் அது ஆதார அறிவியல்(தொழில்நுட்பக்) கருத்தைச் சுட்டியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கவிநயம் தமிழைக் குழிதோண்டிப் புதைக்காமல் விடாது போலிருக்கிறது. சீக்கிரம் இதற்கு வேறு பெயரிட வேண்டும். இல்லாவிட்டால் இணையம் (Web) என்பதைப் போல் அங்கிங்கெனாதபடி எங்குமாய் வியாபிக்கத் தொடங்கிவிடும். 1998-ல் Internet-க்கு ஊடுவலை என்று முன்மொழிந்தேன், அது web (User Interface) என்பதிலிருந்து Internet (Worldwide Network infrastructure) என்பதைப் பிரித்துக்காட்ட உதவும் என்று நம்பினேன். ஆனால் கேட்பாரில்லாமல் போயிற்று.